இயேசுவின் மரணப் பாதை, ஒரு முழுமையான பார்வை

இயேசுவின் மரணமும், உயிர்ப்பும்

*

Jeus

இயேசு தன்னுடைய நம்பிக்கைக்குரிய பதினொன்று சீடர்களையும் பார்த்தார்.

‘உங்களை நான் அன்பு செய்தது போல நீங்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்யுங்கள். உள்ளம் கலங்காதீர்கள். நீங்கள் தந்தையை நம்புகிறீர்கள் என்னையும் நம்புங்கள். நான் என் தந்தையின் இல்லத்துக்குச் சென்று உங்களுக்காய் இருக்கைகள் தயாரிப்பேன்’. இயேசு சொன்னார். சீடர்களிடையே ஒரு அமானுஷ்ய மௌனம் நிலவியது.

‘நானே வழி, நானே உண்மை, நானே உயிர். என் வழியாய் அன்றி யாரும் தந்தையிடம் வர முடியாது. நீங்கள் என்னை அறிந்திருந்தால் தந்தையையும் அறிவீர்கள். இன்றிலிருந்து நீங்கள் தந்தையை அறிந்தவர்களாயிருக்கிறீர்கள்’ இயேசு சொன்னார்.

‘இயேசுவே தந்தையை எங்களுக்குக் காட்டும். அது போதும் எங்களுக்கு’ கடவுளைப் பார்க்கும் ஆவலில் சீடர்கள் கேட்டார்கள்.

இயேசு சற்று நேரம் மௌனமாய் இருந்தார். பின் அவர்களிடம்
‘இத்தனை நான் உங்களோடு இருந்தான் இன்னும் நான் யார் என்பதை நீங்கள் அறியவில்லையா ? என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான். நானே அவர். நான் உங்களிடம் பேசியவை எவையும் நான் பேசியவை அல்ல, என் தந்தை பேசியவையே. ‘ இயேசு சொல்ல சீடர்கள் புருவம் உயர்த்தினார்கள். விண்ணகத் தந்தையும் தானும் ஒன்று என்னும் ரகசியத்தை இயேசு மரிக்கப் போகும் நேரத்தில் வெளியிடும் காரணம் புரியாமல் தடுமாறினார்கள். முதலிலேயே சொல்லியிருந்தால் இயேசுவைக் கடவுளாகப் பார்த்தால் இணைந்து பணியாற்றியிருக்க முடியுமா என்னும் கேள்வியும் அவர்களைச் சுற்றியது.

‘நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் நான் அதை உங்களுக்குத் தருவேன். நீங்கள் என்னை அன்பு செய்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.  நான் தந்தையிடம் கேட்பேன் அவர் தூய ஆவியானவரை உங்களுக்கு அனுப்புவார். அவர் உங்களுக்கு தைரியமும் வழிகாட்டுதலும் தருவார்’ இயேசு தொடர்ந்து சொன்னார்.

‘உங்களிடையே அமைதியை விட்டுச் செல்கிறேன். இந்த அமைதியை நீங்கள் உலகுக்கு வழங்குங்கள். நீங்கள் என்னிலும் என் வார்த்தைகளிலும் நிலைத்திருங்கள்…’ இயேசு தொடர்ந்து சற்று நேரம் சீடர்களுக்கு ஆறுதலும், போதனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கினார்.

‘வாருங்கள் போவோம். நேரம் நெருங்கிவிட்டது’ இயேசு திடீரென்று எழுந்தார். சீடர்களும் எழுந்தார்கள்.

இயேசு கெத்சமெனி தோட்டத்தை நோக்கி நடக்கத் துவங்கினார். சீடர்கள் பின் தொடர்ந்தார்கள்.
யூதாசுடன் ஆலோசனை
________________

Judas

 

அன்னாவின் முன்னிலையில் கயபா இயேசுவைப் பிடிக்க அனுமதிக்காய் உரையாடிக்கொண்டிருந்த நேரத்தில் யூதாஸ் உள்ளே வந்தான்.

அன்னாவையும் கயபாவையும் யூதாஸ் பணிந்து வணங்கினான்.

‘உன் பெயரென்னப்பா ?’ அன்னா கேட்டார்.

‘யூதாஸ் இஸ்காரியோத். சீமோனின் மகன்’

‘ஊர் ?’

‘கேரியாத்’

‘நீ எத்தனை காலமாக நீ இயேசுவின் நண்பனாக இருக்கிறாய் ?’

‘சுமார் மூன்று ஆண்டுகளாக ‘

‘கேரியாத்தில் பிறந்த ஒரு நல்ல மனிதன் நீ. நீ எப்படி ஒரு கலிலேயனான இயேசுவுடன் நட்பு வைத்தாய் ?’ அன்னா கேட்டார்.

‘நான் இயேசுவை நம்புகிறேன்’

‘எதை நம்புகிறாய் ?’

‘இயேசு சொல்லும், செய்யும் எல்லாவற்றையும் நம்புகிறேன்’ யூதாஸ் சொன்னான். அன்னாவின் கண்களில் கோபத்தின் மின்னலடித்தது.

‘அப்படியென்றால் எதற்கு இயேசுவைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தாய் ?’

‘நான் இயேசுவைக் காட்டிக் கொடுப்பது ஒருவேளை அவருடைய நன்மைக்காகக் கூட இருக்கலாம். அவருக்கு பொது இடங்களில் எதிர்ப்புகளும் வருகின்றன. அவர் அதிலிருந்து தப்பவேண்டுமென்றால் அரச காவலில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரை நீங்கள் எதுவும் செய்யமாட்டீர்கள், காயப்படுத்த மாட்டீர்கள் என்றால் தான் அவரைக் காட்டித் தருவேன்.’ யூதாஸ் சொன்னான்.

‘யூதேய ஆளுநர்களின் நேர்மை இரக்கம் குறித்து சந்தேகப்படுகிறாயா ?’ அன்னா குரலுயர்த்தினார்.

‘இல்லை.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. இயேசு ஒரு நல்ல மனிதர். அதனால் தான்…’ யூதாஸ் இழுத்தான்.

‘நீ இயேசுவுடன் சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டாய் என்பதற்காக உன்னையும் கைது செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் ரோம அரசுக்கு எதிராக ஆட்களைக் கூட்டி கலகத்தில் ஈடுபட்டிருந்த பரபாஸைப் பிடித்து சிறையில் அடைத்திருக்கிறோம்.. தெரியுமா ?’ காய்கா அதிகாரத் தோரணையைக் காட்டினான்.

‘சரி.. நீ.. இயேசுவுடன் என்ன செய்து கொண்டிருந்தாய் ?’

‘நான் அந்த கூட்டத்தின் பொருளாளராக இருந்தேன். கணக்கு வழக்குகளைப் பார்ப்பது தான் என் பணி’

‘ஓ.. நல்ல பணப் புழக்கமா ?’

‘இல்லை வெகு கொஞ்சமாகத் தான். இயேசு உண்பதிலும் தங்குவதிலும் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. ஏதேனும் உண்பார். ஏதாவது மலைகளில் படுத்துறங்குவார். அவருக்கு பணம் தேவைப்பட்டதில்லை’

‘இயேசு கூட்டத்தினரிடையே வன்முறையைத் தூண்டி விடுகிறானாமே’ அன்னா மீண்டும் கேட்டார்

‘ஐயோ.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவர் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் கூட காட்டுமளவுக்கு அமைதியானவர். சில வேளைகளில் கோபமடைந்து விடுகிறார். ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சி அப்படி நடந்த ஒரு அபூர்வ நிகழ்ச்சி’

‘அவர் எங்களைக் குறிவைத்து எதிர் பிரசாரங்கள் செய்வதும், கூட்டம் சேர்த்துக் கொண்டு ஓசான்னா பாடி பவனி வருவதுமெல்லாம் குற்றம் என்பதை நீங்கள் யாரும் அவருக்குச் சொல்வதில்லையா ?’ அன்னா கேட்டார்

‘அவர் சரியெனப் படுவதைச் செய்வார்.’ யூதாஸ் அமைதியானான்.

‘சரி.. ஏன் இப்போது இயேசுவுக்கு எதிராக செயல்படுகிறாய் ? இதில் ஏதும் சதி இல்லையே ? இயேசுவுடன் சேர்ந்துவிட்டு நீ ஏதும் தனியாக திட்டம் வைக்கவில்லையே ? அப்படி நடந்தால் அதன் தண்டனை என்னவென்று தெரியுமா ?’ அன்னா எச்சரித்தான்

‘இல்லை.. இல்லவே இல்லை. இதில் எந்த சதியும் இல்லை. என்னை நீங்கள் முழுதாய் நம்பலாம்’ யூதாஸ் படபடத்தான்

‘இரவாக இருக்கிறது. எனவே நீ அவரைத் தொட்டு இவர் தான் இயேசு என்று அடையாளம் காட்டவேண்டும். நாங்கள் அவரைப் பிடித்துக் கொள்வோம்’ அவர் சொல்ல யூதாஸ் உள்ளுக்குள் சிரித்தான். இயேசுவைப் பிடிக்கப் போகிறீர்களா ? மடையர்களே எத்தனை முறை நீங்கள் அவரைக் கொல்லப் பார்த்தீர்கள். அவர் உங்கள் கைகளுக்கு அகப்படாமல் மறைந்து போனது தெரியாதா ? நான் காட்டிக் கொடுத்தாலும் நீங்கள் அவரைப் பிடிக்கும் முன் அவர் உங்களிடமிருந்து தப்பி விடுவார்.

‘இதோ… முப்பது வெள்ளிக்காசுகள். இது உனக்கான ஊதியம். நீ ஆள்பவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் தரப்படுகிற பரிசு’ அன்னா சொல்ல, யூதாஸ் ஆர்வத்துடன் அந்த சுருக்குப் பையை கைகளில் ஏந்தினான். உள்ளே முப்பது வெள்ளிக்காசுகள் அவனுடைய கனவுகளுக்கு சிறகுகள் செய்து கொண்டிருந்தன.

‘தொட்டு என்ன ? அவரை நான் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறேன். நீங்கள் அவர் தான் இயேசு என்று அறிந்து கொள்ளுங்கள்’ யூதாஸ் சொன்னான். சும்மா இவர் தான் இயேசு என்று சொல்வதற்கே எனக்கு முப்பது வெள்ளிக் காசுகளா ! அவனுடைய மனம் குதூகலித்தது.

‘சரி. இன்று இரவு எருசலேம் நகர் தூங்கியபின் நீ அவரை எங்கள் படைவீரருக்கு அடையாளம் காட்டு. அவர் இருக்குமிடத்துக்கு அவர்களைக் கூட்டிப் போ.’ சொல்லிக்கொண்டே அன்னா இருக்கையில் அமர்ந்தான்.

யூதாஸ் சிரித்தான். ‘வாருங்கள்…  போவோம்…’
இயேசு கைது செய்யப்படுகிறார்.
____________________

judas2

 

இயேசு அங்கிருந்து கெத்சமெனி என்னும் தோட்டத்துக்கு வந்தார். அது ஒலிவமலையில் இருந்தது.

கெத்சமெனி அழகான தோட்டம். தனிமையாய் செபம் செய்வதற்கு உகந்த இடம். இயேசு தன்னுடன் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை அழைத்துக் கொண்டு தோட்டத்துக்குள் சென்றார். மற்ற எட்டு சீடர்களும் தோட்டத்தில் ஒரு இடத்தில் தங்கி இளைப்பாறினார்கள். யூதாஸ் மட்டும் அங்கே இல்லை.

யூதாஸ் அந்த நேரத்தில் பகைவர்களின் பாசறையில் இருந்தான் !

இயேசு கெத்சமெனி தோட்டத்தில் செபித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் செபித்தபின் திரும்பி வந்து சீடர்களைப் பார்த்தார். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள் ‘தூங்காதீர்கள். விழித்திருந்து செபியுங்கள். இந்த இரவு மிகவும் கடினமானது..’ இயேசு சொல்ல அவர்கள் கண்களைக் கசக்கினார்கள்.

இயேசு மீண்டும் தனிமையில் செபிக்கச் சென்றார். அவருடைய மனம் கடும் போராட்டத்திலும், வலியிலும் ஆழ்ந்தது
‘தந்தையே… நீர் என்னை அனுப்பிய பணியை நான் முடித்து வைக்கும் வலிமையைத் தாரும். நீர் விரும்பினால் இந்தத் துன்பத்தின் பாத்திரம் என்னை விட்டு அகன்று போகும். ஆனாலும் என்னுடைய விருப்பமல்ல, உம்முடைய விருப்பமே நிறைவேறட்டும்’ இயேசு செபித்தார். அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாய் தரையில் விழுந்து தெறித்தது. வேதனையின் பாரம் கண்களில் தெரிந்தது.

அவர் திரும்பி வந்து சீடர்களைப் பார்க்க, அவர்கள் மீண்டும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களை மீண்டும் எழுப்பினார்.
‘என்னுடன் ஒருமணிநேரம் கூட விழித்திருந்து செபிக்க உங்களால் முடியவில்லையா ?’ இயேசுவின் குரலில் வருத்தம் தெரிந்தது. சொல்லிவிட்டு மீண்டும் அவர் செபிக்கச் சென்றார்.

செபித்துவிட்டு மூன்றாம் முறையாகத் திரும்பி வந்தார். இப்போது இயேசுவின் முகம் தெளிவடைந்திருந்தது. நடக்கப் போவதை எதிர்கொள்ளும் வலிமையை அவருடைய செபம் அவருக்கு வழங்கியிருந்தது. சீடர்களோ அப்போதும் தூங்கிக்கொண்டு தான் இருந்தார்கள். இயேசு அவர்களை எழுப்பினார்.

‘உங்கள் மனம் வலிமையானது தான். ஆனால் உடல் வலுவற்றது. சோதனைகளைக் கடக்க வேண்டுமானால் செபம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். சரி.. சரி… எழுந்திருங்கள். நாம் செல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. மானிட மகனைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கிவிட்டான்.’ இயேசு சொல்ல சீடர்கள் புரியாத முகங்களுடனும், சோர்வுற்ற இமைகளுடனும் விழித்தார்கள்.

இயேசு செபிக்கத் துவங்கும் போதே சுமார் பத்து மணியளவிலேயே யூதாஸ் அன்னாவின் முன்னிலையிலிருந்து இயேசுவைக் காட்டிக் கொடுக்க புறப்பட்டான். அவனுடன் ஆறு ரோம வீரர்களும் ஒரு தலைமை வீரனும். தீப்பந்தங்களும், ஆயுதங்களும் அவர்களிடம் இருந்தன.

அவர்கள் அருகிலிருந்த தெரு வழியாக நடக்கத் துவங்கினார்கள். எங்கும் நிசப்தம். வீரர்களின் காலடி ஓசை தவிர எதுவும் தெருவில் நடமாடவில்லை. சிறு சிறு ஒற்றையடிப் பாதைகளில் புகுந்தும், வளைவான பாதைகளில் கவனமாய் நடந்தும் அவர்களுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. சீலோவாம் குளத்தருகே அவர்கள் வந்தார்கள். வாயில் காவலனிடம் விழிப்பாய் இருக்கும் படி தகவல் அளித்துவிட்டு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

நகர எல்லைக்கு வெளியே இருந்த தோட்டத்தை நோக்கி யூதாஸ் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனான். கூட வந்த வீரர்கள் குழம்பினார்கள். இந்த இரவு வேளையில் இயேசு தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார். பேயோட்டுகிறாரா அல்லது ஏதேனும் மந்திரம் தந்திரம் பழகுகிறாரா ? பேய்களுடன் உரையாடுகிறாரா ? என்ன தான் செய்கிறார் என்று தங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொண்டார்கள்.

பயணம் கேத்ரோனை வந்தடைந்தது. அங்கிருந்து ஒலிவமலை நோக்கி வீரர்களை வழி நடத்தினான் யூதாஸ். வீரர்கள் இயேசுவைப் பற்றியும் அவருடைய அதிசயச் செயல்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்ததால் கொஞ்சம் பயந்தார்கள். யூதாஸ் அவர்களுக்கு தைரியமூட்டினான். கவலைப்படாதீர்கள். இயேசு நமக்காகக் காத்துக் கொண்டிருப்பார். அவரே சொல்லியிருக்கிறார் எதிரிகளிடம் கையளிக்கப் படுவேனென்று. எனவே எந்த பிரச்சினையும் இன்றைக்கு நடக்காது கவலையை விடுங்கள்.

அங்கிருந்து கெத்சமெனி தோட்டத்தை நோக்கி யூதாஸ் நடந்தான். அமானுஷ்ய நிசப்தத்தை அவனுடைய பையில் இருந்த வெள்ளிக்காசுகளின் முனகல் சற்று விலக்கியது. கெத்சமெனி தோட்டத்தை நெருங்குகையில் யாரோ பேசிக்கொண்டிருக்கும் சத்தம். அது இயேசு தான். இயேசு இந்த இரவில் செபித்துக் கொண்டிருக்கிறார் !

யூதாஸ் திரும்பினான். இன்னும் சற்று நேரத்தில் இயேசு இருக்கும் இடத்துக்குச் சென்று சேரலாம். அங்கே சீடர்களும் இருப்பார்கள். நான் யாரை முத்தமிடுகிறேனோ அவர் தான் இயேசு. நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். யூதாஸ் சொல்ல வீரர்கள் தலையாட்டினார்கள்.

யூதாசும், வீரர்களும் இயேசு இருந்த திசை நோக்கி நடந்தார்கள். அதற்குள் இயேசு செபத்தை முடித்து விட்டு தூங்கிக் கொண்டிருந்த சீடர்களை எழுப்பிக் கொண்டிருந்தார்.

யூதாஸ் ஒரு புன்னகையுடன் அவர்களுக்கு முன்னால் சென்று நின்றார். இயேசு அவனைப் பார்த்தார். இயேசுவின் பார்வை அந்த இரவிலும் பளீரடித்தது.

‘ராபி…. நீர் வாழ்க’ யூதாஸ் புன்னகையுடன் இயேசுவைக் கட்டிப் பிடித்து அவருடைய கன்னத்தில் முத்தமிட்டான்.

இயேசு அவனை இறுக அணைத்துக் கொண்டார்.
‘தோழா… முத்தமிட்டா மனுமகனைக் காட்டிக் கொடுக்கிறாய் ?’ இயேசு கேட்க யூதாஸ் திடுக்கிட்டான்.

‘நீங்கள் யாரைத் தேடி வந்திருக்கிறீர்கள் ?’ இயேசு படைவீரர்களைப் பார்த்துக் கேட்டார்.

‘இ…இயேசுவை ‘ அவர்கள் சற்று உதறலுடன் பதில் சொன்னார்கள்.

‘நான் தான் அவர்’

இயேசு சொன்னதும் அவருடைய குரலில் இருந்த உறுதியைக் கண்ட படை வீரர்கள் பின் வாங்கினார்கள்.

‘என்னைத் தானே தேடி வந்திருக்கிறீர்கள். வாருங்கள். என்னைப் பிடிப்பதற்கு எதற்கு இத்தனை வாள்கள், தீப்பந்தங்கள், படை வீரர்கள். நான்தான் தினமும் கோயிலில் போதித்து வருகிறேன், மக்களோடு உரையாடுகிறேன். வாருங்கள் கைது செய்யுங்கள்’ இயேசு சொல்ல படைவீரர்கள் மீண்டும் தயங்கினார்கள். இயேசு ஏதேனும் செய்து தங்களைக் கொன்று விடுவாரோ என்று படைவீரர்களுக்குள் பயம்.

யூதாஸ் அந்தக் கூட்டத்தை விட்டு மெல்ல நழுவினான்.

படைவீரர்களோடு வந்திருந்த தலைமைக் குருக்கள். ‘ பிடியுங்கள் அவனை… ஏன் தயங்குகிறீர்கள்’ என்று சொல்லி படைவீரர்களைத் தூண்ட படைவீரர்கள் முன்னே சென்று இயேசுவைப் பிடித்தார்கள்.

அவ்வளவுதான் இயேசுவுடன் இருந்த ஒரு சீடர் தன்னுடைய வாளை உருவி ஒரு படைவீரனின் காதை வெட்டினான். வெட்டப்பட்டக் காது தரையில் தெறித்துப் போய் விழுந்தது. படைவீரன் வலியில் துடித்தான். இயேசுவின் சீடர்கள் அனைவரும் வினாடி நேரத்தில் ஒரு சண்டைக்கு ஆயத்தமானார்கள். படைவீரர்களும் தங்கள் வாள்களை உருவினார்கள்.

இயேசுவோ அந்தச் சீடரைக் கடிந்து கொண்டார். அவர் போருக்குத் தயாராக இல்லை.
‘உன் வாளை உறையிலே போடு. வாள் எடுப்பவன் வாளால் மடிவான். இவர்களைத் தாக்க வேண்டுமென்று தான் தந்தையிடம் சொன்னால் வினாடி நேரத்தில் இவர்களைத் தவிடு பொடியாக்கும் படையை அவர் எனக்குத் தருவார். நிகழ வேண்டியவை நிகழத்தான் வேண்டும்.’ என்று சொல்லிய இயேசு, அந்தக் காதை எடுத்து வெட்டுப் பட்ட இடத்தில் வைக்க அது ஒட்டிக் கொண்டது.

படைவீரன் அதிர்ந்தான். கொலைசெய்வதற்காக வந்தோம் என்று தெரிந்தும் கூட இயேசு தன்னைக் குணமாக்கினாரே என்பதை நினைக்க நினைக்க அவன் உள்ளுக்குள் கூனிக் குறுகினான்.

மற்ற படை வீரர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இயேசுவைப் பிடித்துச் சங்கிலியால் பிணைத்தார்கள்.

இயேசு பிடிபட்டதைக் கண்ட சீடர்கள் சிதறி ஓடினார்கள். ஒரு படைவீரன் ஓடிக்கொண்டிருந்த சீடரின் ஆடையை எட்டிப் பிடிக்க அவர் ஆடையை அவிழ்த்து விட்டு நிர்வாணியாகவே இருட்டுக்குள் ஓடினார். படை வீரர்கள் அவர்களைத் துரத்தினார்கள். மரித்தாலும் உம்முடன் வருவேன் என்று சொன்ன பேதுருவையும் அங்கே காணவில்லை !

அவரும், யோவானும் தலையில் முக்காடிட்டுக் கொண்டு தூரத்தில் நின்று இயேசுவை என்ன செய்கிறார்கள் என்று பதட்டம் வடியும் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அன்னா முன்னிலையில்
_________________

அன்னா தன்னுடைய அறையில் பதட்டத்துடன் உலவிக்கொண்டிருந்தார். எத்தனை பேரைக் கொன்றாலும் மீண்டும் மீண்டும் யாராவது முளைத்து மெசியா என்று சொல்லிக் கொண்டு அலைகிறார்களே என்று அவருடைய மனம் கோபத்தில் இருந்தது. இயேசுவைக் கைது செய்திருப்பார்களா ? அல்லது அவன் ஏதேனும் மந்திரம் செய்து மறைந்திருப்பானா ? அவனுடைய மனதில் கேள்விகள் அணிவகுத்தபோது கதவு திறக்கும் ஓசை. படைத் தலைவன் நின்றிருந்தான்.

தலைவரே… நாசரேயனாகிய இயேசு கைது செய்யப்பட்டார். இதோ உங்கள் முன்னிலையில் கொண்டு வரப்படுகிறார் என்று சொல்ல, அன்னா உற்சாகமானான். சற்று நேரத்தில் கைகள் பிணைத்துக் கட்டப்பட்ட இயேசு அன்னாவின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்.

அன்னா இயேசுவைப் பார்த்தான். சாதாரண உடை, சாதாரண எளிமையான தோற்றம். ஆனால் வலிமையான பார்வை. பதட்டமில்லாத முகம். இயேசுவைப் பார்த்த அன்னாவின் மனதில் குழப்பங்கள் ஓடின. உண்மையிலேயே இந்த மனிதன் இத்தனை அதிசயங்கள் செய்தவனா ?

இந்த மனிதனைக் கொல்வதொன்றும் பெரிய செயலாக இருக்காது எளிமையாக முடிந்து விடும் என்று நினைத்தான் அன்னா. இயேசுவின் ஆதரவாளர்கள் யாருமே கூட இல்லை. எனவே அன்னாவின் தைரியம் இன்னும் அதிகரித்தது. ஆனால் தூரத்தில் பேதுரு தலைக்கு முக்காடிட்டுக் கொண்டே மெல்ல மெல்ல  வந்து இருட்டான ஒரு இடத்தில் மக்களோடு மக்களாக நின்று நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இயேசுவைப் பிடிப்பதில் ஏதும் கஷ்டம் இருக்கவில்லையே, அன்னா கேட்டான்.

ஒரு சிறு கைகலப்பு நிகழ்ந்தது. இயேசுவின் சீடர் ஒருவர் நம்முடைய படைவீரன் ஒருவரின் காதை வெட்டி விட்டான். காது துண்டாகி விட்டது.

‘என்ன காது துண்டாகி விட்டதா ? யாருடைய காது’ அன்னா கலவரமானான்.

இதோ இந்த படை வீரனின் காது தான். சுட்டிக் காட்டிய இடத்தில் கண்கள் நிறைய கவலையுடன், குற்ற உணர்வுடன் நின்றிருந்தான் அந்த படை வீரன்.

‘என்ன விளையாடுகிறாயா ? அவனுடைய காது தான் சரியாக இருக்கிறதே ?’ அன்னா குழம்பினான்.

‘காது துண்டாகி விழுந்தது உண்மை தான் தலைவரே. அந்தக் காதை எடுத்து இயேசு மீண்டும் அதே இடத்தில் வைத்து சரி செய்து விட்டார்.’ படைவீரன் சொல்ல அன்னா இரண்டடி பின் வாங்கினான். ஆனாலும் பதட்டத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இயேசுவைப் பார்த்துப் பேசினான்.

உன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச் சாட்டு என்ன தெரியுமா ? நீ உன்னைக் கடவுளின் மகனாகக் காட்டிக் கொண்டாயாம். போலித் தீர்க்கத் தரிசனம் சொன்னாயாம். இதற்கு என்ன சொல்கிறாய் ?

இயேசு மெலிதாய் புன்னகைத்தார். ‘நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகத் தான் பேசினேன். தொழுகைக் கூடங்களில் உரையாற்றினேன். ஆலயங்களில் போதித்தேன். யூதர்கள் கூடியிருந்த கூட்டங்களில் பேசினேன். எதையும் மறைமுகமாகப் பேசவில்லை. நான் பேசியதைக் கேட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ இயேசு சொன்னார்.

அன்னாவின் புருவங்கள் உயர்ந்தன. இயேசுவின் பதிலில் இருந்த உட்பொருள் அவரை வியக்க வைத்தது. ஆம், அல்லது இல்லை என்று ஒரு பதிலைச் சொல்லாமல் இயேசு சொன்ன பதிலில் ஒரு குடிமகனுக்குரிய உரிமைகளையும், மோசேயின் சட்டங்களுக்குட்பட்டு வாழும் ஒருவனுடைய மனித உரிமையுமே வெளிப்பட்டன. மக்களின் சாட்சிகளை வைத்தே இயேசு குற்றவாளியென்று தீர்ப்பிடவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டார் அன்னா.

‘ஓ.. அப்படியா…. நீ சொன்னதை நிரூபிக்க வேண்டும் என்கிறாயா ? நிரூபித்துக் காட்டுகிறேன்… ‘ தன்னுடைய தாடியைத் தடவிக்கொண்டே அன்னா கூற இயேசு மீண்டும் புன்னகைத்தார்.

அன்னாவிடமிருந்து இயேசு நேரடியாக தலைமைச் சங்கத்தின் முன்பாக கொண்டு செல்லப்பட்டார். அன்னாவின் மாளிகையிலிருந்து இருபது நிமிட நடை பயணம். இரவில் அனைவரும் அன்னாவின் மாளிகையிலிருந்து தலைமைச் சங்கத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.

நேற்றுவரை சுதந்திரப் பறவையாக போதித்துக் கொண்டிருந்த இயேசு இன்று சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கயபாவின் முன்னிலையில் ஒரு மேடையில் நின்று கொண்டிருந்தார். அந்த இடம் கல்மண்டபம் அல்லது லிஸ்கத் ஹகாசித் என்ற்ய் அழைக்கப்பட்டது. தன்னுடைய உயிருக்கு ஆபத்தான சூழல் என்பதை அறிந்திருந்தும் ஆனாலும் அவருடைய கண்களில் இருந்த உறுதி கலையவில்லை.

பேதுரு தலைக்கு முக்காடிட்டுக் கொண்டே மெல்ல மெல்ல கயபாவின் மாளிகைக்குள் வந்து இருட்டான ஒரு இடத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘சாட்சிகளைத் தயார் செய்து விட்டீர்களா ?’ சத்தமில்லாமல் அருகிலிருந்த தலைமைச் சங்கத்தான் ஒருவனின் காதில் கிசுகிசுத்தார் கயபா.

‘ஆட்களை அனுப்பியிருக்கிறோம். எத்தனை செலவானாலும் பரவாயில்லை என்று சொல்லியிருக்கிறோம். எப்படியும் சாட்சிக்கு ஆட்கள் கிடைத்து விடுவார்கள்’

‘காதும் காதும் வைத்த மாதிரி எல்லாம் நடக்க வேண்டும். மக்களிடையே மத வெறி அடங்கி விடாமல் பார்த்துக் கொள்வது தான் முக்கியம்.’

‘அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவனுடைய சீடனையே அவனுக்கு எதிராகத் திருப்பினோமே… சாட்சிகளைப் பிடிப்பதா பெரிய விஷயம் ?’

‘ம்… இரண்டு சாட்சிகள் வேண்டும். இரண்டு பேரும் ஒரே போல ஒரே குற்றச் சாட்டைச் சொல்லவேண்டும். அது தான் சட்டம். அதை நினைவில் கொள்ளுங்கள்’ கயபா கிசுகிசுத்தான்.

‘மக்களுக்காக ஒருத்தன் சாவது நல்லது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே. அது இன்று நடக்கவேண்டும். அதற்கு என்ன தேவையோ அதைத் தயாராக்கும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள்’ கயபாவும் தலைமைக்குருவும் கிசுகிசுப்பாய் பேசினார்கள்.

இயேசு அமைதியாக நின்றார்.

 

மறுதலிப்பு
_______

Peter
பேதுரு முற்றத்தில் அமர்ந்து நடப்பவற்றை அனைத்தையும் நடுங்கும் உடலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

‘ஏய்… நீ அவனோடு இருந்தவன் தானே ‘ திடீரென தனக்குப் பின்னால் எழுந்த குரலினால் நிலைகுலைந்து போய் நிமிர்ந்தார் பேதுரு. அங்கே ஒரு பணிப்பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் கயபாவின் நம்பிக்கைக்குரிய பணிப்பெண் ஹுல்தா.

‘என்ன சொன்னீர்கள் ?’

‘நீ.. இயேசுவோடு இருந்த மனிதர்களில் ஒருவன் தானே ?’

‘நானா… இயேசுவோடா ? ம்… அவர் யாரென்றே எனக்குத் தெரியாது’ பேதுரு பயத்துடன் மறுத்து தன்னுடைய தலையை வேறு பக்கமாய்த் திருப்பிக் கொண்டார்.

பேதுரு திக் திக் மனதுடன் அங்கே அமர்ந்திருந்தார். இயேசு திடீரென சங்கிலிகளை உடைத்துக் கொண்டு சட்டென்று மறைந்துவிடுவார் என்றே இமைகளை மூடாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.

‘ஏய்ய்… நீ…’ பேதுருவின் பின்னால் ஒரு முரட்டுக் குரல்.

பேதுரு சர்வநாடியும் ஒடுங்கிப் போய் திரும்பினார்.

‘நீ… அவருடன் இருந்த சீடர்களில் ஒருவன் தானே ? உன்னை நான் அவரோடு பார்த்திருக்கிறேனே ?’ ஒருவன் பேதுருவிடம் கேட்டான்.

‘நானில்லையப்பா அது. வேறு யாராவது இருக்கும். அவர்கள் எல்லாரும் தான் ஓடிவிட்டார்களே.’ பேதுரு சமாளித்தார்.

‘ஆனால் உன்னைப் போலவே ஒருவன் அவனோடு சுற்றிக் கொண்டிருந்தான்…’

‘இ..இருக்கலாம். ஆனால் அது நானில்லை. அவனோடு சுற்றிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் வேலையற்றவர்கள். நான் அப்படியல்ல..’ பேதுரு சகஜமாய் சொல்ல முயன்று தோற்றுப் போய் செயற்கையாய்ப் புன்னகைத்தார்.

அவன் சந்தேகம் அகலாதவனாகச் சென்றான்.

மூன்றாம் முறையாக ஒரு நபர் பேதுருவின் அருகே வந்து தீப்பந்த வெளிச்சத்தில் அவரை உற்றுப் பார்த்தார்.

‘நீ கலிலேயன் தானே ? அந்த இயேசுவின் சீடர்களில் ஒருவன் தானே ? உண்மையைச் சொல்’ அவனுடைய குரலில் மெலிதான கோபம் இருந்தது.

‘நானா ? அந்த மனிதனோடா ? இல்லவே இல்லை. ‘ பேதுரு அவசர அவசரமாக மறுத்தார்.

தொலைவில் நின்றிருந்த இயேசு பேதுரு இருந்த திசை நோக்கி மெல்ல தலையைத் திருப்பினார்.

அப்போது வெளியே சேவல் கூவும் சத்தம் கேட்டது.

சேவலில் குரலைக் கேட்டதும் பேதுருவின் உள்ளம் உடைந்தது.
‘இன்றிரவு சேவல் கூவும் முன் என்னை மூன்று முறை மறுதலிப்பாய்.. ‘ என்று பேதுருவிடம் இயேசு சொல்லியிருந்த வார்த்தைகள் பேதுருவின் உள்ளத்துக்குள் ஈட்டிகளாய்ப் பாய்ந்தன. அவருடைய கண்களும், மனமும் கலங்கியது. உடனே வெளியே சென்ற பேதுரு கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
கயபா முன்னிலையில்
________________
கல்மண்டபத்தில் தலைமைச் சங்க நிர்வாகிகளும், குருக்களும், நீதிபதிகளும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவருமே சட்டத்தையும், நீதி நூல்களையும் கரைத்துக் குடித்தவர்கள். இங்கே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றால் எந்த அரசவையும் அதற்கு மறுப்புக் கூறுவதில்லை என்ற அளவுக்கு மிகவும் செல்வாக்கு வாய்ந்த இடம் அது.

அவர்கள் அனைவரும் ப வடிவத்தில் அமர்ந்திருந்தார்கள். இரண்டு பழக்கமான முகங்களும் அங்கே இருந்திருக்கக் கூடும். ஒருவர் நிக்கோதேமு இன்னொருவர் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு. இவர்கள் இருவரும் தலைமைச் சங்க நிர்வாகிகளாக இருந்தாலும் இயேசுவின் மனித நேயப் போதனைகளால் கவரப்பட்டு மறைமுக சீடர்களாக உலவுபவர்கள்.

இயேசுவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கான தண்டனை என்னவென்று எல்லோருமே அறிந்திருந்தார்கள். குற்றங்களில் மிகப்பெரிய குற்றம் இயேசு செய்திருப்பது. அதற்கு கல்லால் அடித்துக் கொல்லப்படலாம். எரித்துக் கொல்லப்படலாம், சிலுவையில் அறையப்படலாம். எதுவானாலும் மரணம் நிச்சயம். அதுவும் கொடுமையான மரணம் சர்வ நிச்சயம்.

இயேசுவை கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை மாட்டவைக்க எதிர்ப்பாளர்கள் செய்த எந்த செயல்களுமே பயன் தரவில்லை. இயேசுவின் சாதுர்யமான பதிலும் மிகவும் ஆழமான சட்டநூல், நீதிநூல் அறிவும் அவரைப் பிடிக்க நினைத்த எதிர்ப்பாளர்களை தொடர்ந்து தோற்றுப் போக வைத்துக் கொண்டே இருந்தது. எனவே இப்போது என்ன நடக்குமோ என்னும் எண்ணம் கூடியிருந்தவர்களிடையே நிலவியது. பலருக்கு இது ஒரு பரபரப்பான வேடிக்கை. கயபாவுக்கோ தன்மானப் பிரச்சினை.

திடீரென மண்டபத்தின் கதவு ஒன்று திறக்க அங்கே அன்னாவும், கயபாவும் நுழைந்தார்கள். கூட்டத்தில் திடீரென சலசலப்பு முளைத்தது.

அமைதி.. அமைதி… , கயபா சொன்னான். சபை அமைதியானது.

இதோ.. குற்றவாளியாய்.. நசரேயனாகிய இயேசு, அவன் சொல்ல இயேசு முன்னே வந்து நின்றார்.

அன்னாவின் முகம் வழக்கத்துக்கு மாறாக இறுகிப் போயிருந்தது. இயேசு பார்வைக்கு மிகச் சாதாரணமாக இருந்தாலும் அவருடைய பதட்டமில்லாத பார்வையும், எதையோ எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கும் மலர்ச்சியான முகமும் அவனை ஏதோ செய்தன. இயேசுவின் ஆழமான சட்ட அறிவும், நீதி நூல்களின் மீதான அறிவும் தன்னுடைய வேலையைக் கடினமாக்கிவிடக் கூடுமென்று அவன் பயந்தான். எப்படி இயேசுவால் இப்படி பதட்டமில்லாமல் நிற்க முடிகிறது. ஒருவேளை இந்தக் குற்றத்துக்கான தண்டனை என்னவென்று தெரியாதா ? அல்லது ஏதேனும் வித்தை வைத்திருக்கிறானா ? கேள்விகள் அன்னாவின் மனதில் அலைமோதின.

ஆனால் இயேசு அறிந்திருந்தார். கூடியிருக்கும் சட்ட வல்லுநர்களும், நீதி உரைப்பவர்களும், பரிசேயர்களும், குருக்களும் தன்னை எதற்காக இங்கே கூட்டி வந்திருக்கிறார்கள். என்ன நேரப்போகிறது என்பதை எல்லாம் இயேசு தெளிவாக அறிந்திருந்தார். அதைத் தாங்கும் வல்லமைக்காகத் தான் அவர் நீண்ட நேரம் கெத்சமெனி தோட்டத்தில் செபத்தில் தந்தையோடு ஒன்றித்திருந்தார்.

கயபா முன்னால் வந்து செபிக்கத் துவங்கினான். யகோவா வை நோக்கி கயபா செபித்தான். செபம் நீண்ட நேரம் நடந்தது. செபத்தை முடித்துவிட்டு வந்த கயபா சபையின் முன்னால் வந்து நின்றான்.

‘இயேசு இங்கே எதற்காக கைது செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளார் என்பதை நீங்கள் எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும். இந்த மனிதன் தன்னை கடவுளாகக் காட்டிக் கொண்டான். போலி தீர்க்கத் தரிசனம் உரைத்தான். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்பதை மோசேயின் நீதியின் படி வாழும் நாம் நன்கு அறிவோம். எனவே இப்போது இயேசுவின் குற்றத்தை நிரூபிப்பதற்காக சாட்சிகளை அழைக்கிறேன்’ கயபா சொல்ல சபை அமைதியானது.

‘முதல் சாட்சி முன்னால் வரட்டும்’. அழைப்பைத் தொடர்ந்து முன்னால் வந்து நின்றான் ஒருவன்.

‘நீ உண்மையைத் தான் சொல்கிறாய் என்று சத்தியம் செய்’

வந்தவன் தன்னுடைய கையை வலது தொடைக்கு அடியில் வைத்து சத்தியம் செய்தான். ‘ பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக என்னும் மோசேயின் கட்டளையை நான் அறிவேன். நான் சொல்லப்போவது உண்மையே’

‘நீ சாட்சி சொல்லப்போவது பண சம்பந்தமான விஷயமல்ல. உயிர் சம்பந்தமானது. பண விஷயத்தில் பொய்சாட்சி சொன்னால் பணத்தைக் கொடுத்து சரிபண்ணமுடியும். ஆனால் உயிர் விஷயத்தில் பொய்சொன்னால் அது உன் மீதும் உன் சந்ததி மீதும் இரத்தப் பழியாக விழும். எனவே சாட்சி சொல்லும்போது உண்மையை மட்டுமே கூறு’ ஒரு குரு சொல்ல சாட்சியாளன் தயாரானான்.

‘நீ இயேசு பேசியதை நேரில் கேட்டாயா ?’ கயபா கேட்டான்.

‘ஆம்’

‘அவர் பேசியது தண்டனைக்குரிய குற்றம் என்பதை நீ அவருக்குச் சொன்னாயா ?’

‘சொன்னேன்’

‘இயேசு பேசியது குற்றமென்றும், அதற்குத் தண்டனை கிடைக்கும் என்பதையும் அறிந்திருந்தாரா ?’

‘நிச்சயமாக’

‘சரி… இப்போது சொல்.. இயேசு என்ன சொன்னார் ?’

‘கைகளால் கட்டிய இந்த ஆலயத்தை நான் மூன்றே நாளில் இடித்துவிட்டு, கைகளால் கட்டாத வேறு ஒரு ஆலயத்தை மூன்று நாளில் எழுப்புவேன் என்றார்’ சாட்சிக்காரன் சொன்னான்.

கயபா இயேசுவின் பக்கமாகத் திரும்பினான்.

‘சொல்லுங்கள் நசரேயனாகிய இயேசுவே.. உங்கள் பதில் என்ன ? நீங்கள் இதைச் சொன்னீர்கள் தானே’

இயேசு அவன் கண்களைப் பார்த்தார். ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை.

‘கேட்ட சாட்சியம் தவறென்று மறுக்கிறாயா ?’ கயபா கேட்டான்

இயேசுவிடமிருந்து பதிலில்லை.

‘நீ அப்படிச் சொன்னது உண்மை தானா ?’

இயேசு தொடர்ந்து மௌனம் சாதித்தார்.

கயபா சங்கத்தினரைப் பார்த்தான். ‘பாருங்கள். எதையும் மறுத்தும் பேசாமல், ஒத்துக்கொள்ளவும் செய்யாமல் நம்மிடம் வந்திருக்கும் இந்த மனிதரைப் பாருங்கள். நாம் இவனுடைய பதிலுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. அடுத்த சாட்சியை அழையுங்கள்.’ கயபா சொன்னான்

இரண்டாவது சாட்சி கூறுபவர் முன்னே வந்தார். சத்தியப் பிரமாணம் செய்தபின் பேசத் துவங்கினார்.

‘இந்தக் கோயிலை இடித்துவிடுங்கள், மூன்று நாளில் கட்டி எழுப்புவேன். என்றார் இயேசு’ சாட்சிக்காரன் சொன்னான்.

‘சரி நீங்கள் போகலாம்’ கயபா நிம்மதிப் பெருமூச்சு விட்டான். இரண்டு சாட்சிகளைப் பேச வைத்தாயிற்று இப்போது இயேசுவுக்கு தண்டனை நிச்சயம். அவன் மனம் ஆனந்தமடைந்தது.

‘கேட்டீர்களா… சட்ட வல்லுநர்களே. நமக்கு இரண்டு சாட்சிகள் கிடைத்து விட்டன. போதுமா ?’ கயபா கேட்டான். அவையில் சில வினாடிகள் மௌனம் நிலவியது.

அவையில் இருந்த அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு எழுந்தார்.

‘இந்த சாட்சிகள் செல்லாது !’  யோசேப்பு சொல்ல கயபா திகைத்தான். யோசேப்பு தொடர்ந்தார்.

‘முதல் சாட்சி சொல்வதை வைத்துப் பார்த்தால், இயேசுவே ஆலயத்தை இடித்துவிடப் போவதாகச் சொல்கிறார். இரண்டாவது சாட்சியோ, ஆலயத்தை யாராவது இடியுங்கள் நான் கட்டுகிறேன் என்று சொல்வதாகச் சொல்கிறார். இது மட்டுமல்ல இரண்டாவது சாட்சி கையால் கட்டாத ஆலயத்தைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. எனவே இந்த சாட்சிகள் இரண்டும் ஒத்த சாட்சிகள் அல்ல. இரண்டு ஒத்த சாட்சிகள் இருந்தால் மட்டுமே ஒருவனைக் குற்றவாளியாகத் தீர்ப்பிடமுடியும் என்பது மோசேயின் சட்டம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே வேறு சாட்சிகளை அழையுங்கள்’ யோசேப்பு சொல்லிவிட்டு அமர்ந்தார்.

கயபா திரும்பி அன்னாவைப் பார்த்தான். அவருடைய முகத்தில் இறுக்கம் இன்னும் கூடியிருந்தது. வேறு வழியில்லை அடுத்த சாட்சியை அழைக்க வேண்டியது தான். கயபா தான் தயாராக்கி வைத்திருந்த அடுத்த சாட்சியை அழைத்தான்.

மூன்றாவது சாட்சிக்காரர் முன்வந்தார்.

‘இந்த ஆலயத்தை இடிக்க என்னால் முடியும், பின் மூன்று நாட்களில் கட்டவும் என்னால் முடியும். இது தான் இயேசு சொன்னது’ மூன்றாவது நபர் சொல்ல யோசேப்பு தலையை வேகமாக அசைத்தார்.

‘இது முந்தைய இரண்டு சாட்சிகளையும் விட வித்தியாசமாக இருக்கிறது. இது செல்லாது. என்னால் முடியும்.. என்று இயேசு சொல்லியிருக்கிறாராம்.’ யோசேப்பு ஒத்துக்கொள்ளாத குரலில் பேசினார்.

‘ஒத்துப் போகாத சாட்சியம் என்று எப்படிச் சொல்லலாம். மூன்று பேருமே மூன்று நாளில் என்பதில் ஒத்துப் போகிறார்கள் அதுவே தவறு தானே ? ‘ கயபா சொன்னான்.

‘யூத சட்டங்களைப் பொறுத்தவரை முழுமையாக ஒத்துப் போகவேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். அப்படியே இவன் சொன்னது உண்மையென்றால் கூட எப்படி நிரூபிப்பது ? கோயிலை இடிக்கச் சொல்லியா ?’ யோசேப்பு விவாதித்தார்.

‘நீர் நல்ல யூதன் என்பதை உங்கள் வாதத்தில் காட்டுகிறீர்கள்’ காய்கா கண்களில் கோபம் கொப்பளிக்க அழுத்தமாய்ச் சொன்னார்.

‘எனது பணி இது தலைவரே. இது உயிர் சார்ந்த விசாரணை, இதில் நீதியுடன் நடப்பதே நமக்குப் பெருமை. சாட்சிகளால் நிரூபிக்கப்படவில்லையெனில் இயேசுவை தண்டிக்க முடியாது’ யோசேப்பும் விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

‘சாட்சிகள் ஒத்துவரவில்லை என்பதற்காக வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது. நிரூபித்துக் காட்டுகிறேன்’ கயபா உறுமினான்.

நிலமை வேறு விதமாகப் போவதை அறிந்த அன்னா பேசினார். அன்னா பேசத் துவங்கியதும் அவை மீண்டும் அமைதியானது.
‘நமது பாரம்பரியம் மிக்க தலைமைச் சங்கத்துக்குக் களங்கள் விளைவிக்கும் எந்த தீர்ப்பையும் நாம் எடுக்க வேண்டாம். சாட்சிகள் ஒத்து வரவில்லையென்றால் வேறு சாட்சிகளை அழைக்க வேண்டியது தான்.’ அன்னா சொன்னார்.

ஒரு சாட்சி முன்னால் வந்தது.

‘இவன் தன்னை கடவுளின் மகன் என்றார்’

இன்னொருவர் வந்தார்

‘இயேசு தன்னை மானிட மகன் என்றார்’

மீண்டுமொருவர் முன்னால் வந்தார்

‘இவர் நானே கடவுள் என்றார்’

மீண்டும் சாட்சிகள் ஒத்துவரவில்லை.

இயேசு அனைத்தையும் மெளனமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார். நேரம் நள்ளிரவு தாண்டி ஒருமணி நேரமாகியிருந்தது. இன்னும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. நேரமாகிக் கொண்டே இருந்தது. இயேசுவுக்கு எதிரான வழக்கு நிரூபிக்கப்படாமல் இயேசு விடுவிக்கப்படுவார் என்னும் நிலமை. அன்னாவும், கயபாவும் செய்வதறியாமல் திகைத்தார்கள். இயேசுவைப் பிடித்தாயிற்று, இந்தமுறை நழுவவிட்டால் இனிமேல் இவரைப் பிடிப்பதுகூட நடக்காமல் போகலாம் எனவே எப்படியாவது இயேசுவுக்குத் தண்டனை வாங்கித் தந்தேயாகவேண்டும்

கயபா மனதுக்குள் திட்டமிட்டான். ஏன் சாட்சிகளை அழைக்கவேண்டும். இயேசுவையே விசாரிக்கலாமே. அவர் மூலமாகவே அவருடைய குற்றத்தை நிரூபிக்கலாமே. இறைவாக்கினர் என்றால், பெரிய வல்லமையுடையவர் என்றால் அவர் பொய் சொல்லப் போவதில்லையே. கயபா எண்ணினான். மெல்ல மெல்ல இயேசுவிடம் வந்தான்.

‘சரி.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ கடவுளின் மகனாகிய மெசியாவா ?’ கயபா துருப்புச் சீட்டுக் கேள்வியை எடுத்து இயேசுவின் முன்னால் விரித்தான்.

இயேசு மீண்டும் அவன் கண்களைப் பார்த்தார்.

‘நீர் தான் சொல்லுகிறீர்’ இயேசுவின் பதில் தெளிவாக வந்தது. தலைமைச் சங்கத்தினர் ஆச்சரியக் குரல்களை மெலிதாக எழுப்பினர்.

கயபா இயேசுவின் பதிலில் திருப்தியடையவில்லை.

‘தெளிவாகச் சொல்லுங்கள். நீர் மெசியாவா ?’

‘ஆம். நான் கடவுளின் மகனாகிய மெசியா தான். மானிட மகன் கடவுளின்  வலப்பக்கத்தில் வீற்றிருப்பதையும், வானமேகங்களின் மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள்’ இயேசுவின் குரல் உறுதியுடன் ஒலித்தது.

கயபா தன்னுடைய மேலுடையைக் கிழித்தான். ‘இதோ… நீங்களே கேட்டீர்களே. நம்முடைய கடவுளை இவன் பழித்துரைத்ததை நீங்களே கேட்டீர்களே. இனிமேல் சாட்சிகள் எதற்கு ? இவனை என்ன செய்வது ? நீங்களே சொல்லுங்கள்’ தலைமைக்குரு கொக்கரித்தான். அவனுடைய உள்ளம் இயேசுவை மாட்ட வைத்த களிப்பில் துள்ளியது.

சாட்சிகளால் நிரூபிக்கப் படாமல் போன குற்றத்தை இயேசுவே ஒப்புக் கொண்டதில் கூட்டத்தினர் அதிர்ந்தனர். வழக்கத்துக்கு மாறான காட்சி !.

‘இப்போது என்ன சொல்கிறீர்கள்.’ கயபா அவையைப் பார்த்துக் கேட்டான்.

‘இயேசு குற்றவாளி தான்’ அவை ஒத்துக் கொண்டது.

வாக்கெடுப்பு நடந்தது. அதிலும் கயபா தன்னுடைய வஞ்சக மூளையைப் பயன்படுத்தினான். முதியவர்கள் துவங்கி இளையவர் வரை வாக்கெடுப்பு நடத்துவது தான் முறை. ஆனால் ஒருவேளை முதியவர்கள் இயேசுவுக்கு ஆதரவாக வாக்களித்தால், பின்பு வருபவர்களும் இயேசுவுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் என்று பயந்தான். எனவே இளையவர்களிடமிருந்து வாக்கு ஆரம்பமானது. இளையவர்கள் எல்லாம் கயபாவின் ஆட்கள் !

இயேசு குற்றவாளிதான். தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்குள் கூட்டத்தினர் பலர் இயேசுவை நோக்கி  முண்டியடித்து ஓடினர்.

‘பளார்…’ எங்கிருந்தோ ஒரு முரட்டுக் கரம் இயேசுவின் முகத்தைத் தாக்கியது.

‘இறைவாக்கினராகிய மெசியாவே… உம்மை அடித்தவனுடைய பெயரை தீர்க்கத் தரிசனமாய்ப் பார்த்துச் சொல்லுங்கள் பார்ப்போம்’ ஏளனக் குரல்கள் எழுந்தன.

பின்புறமிருந்து இயேசுவின் முதுகில் வலிமையான கரங்கள் தாறுமாறாய் இறங்கின. அவருடைய முகத்தின் மீது எச்சில் உமிழப்பட்டது. கால்கள் அவருடைய உடம்பின் மீது நீண்ட நாளைய வைராக்கிய வெறியுடன் உதைத்தன. இயேசு நிலை தடுமாறி விழுந்தார்.

‘இறைமகனே… விழுவது உமக்கு அழகா ?’

‘என்ன இது ? கடவுளின் மகனுக்கு தன்னுடைய கைக்கட்டை அவிழ்க்கக் கூட முடியவில்லையா ?’

‘கடவுளின் மகனுக்கு வலிக்காதே… நன்றாக அடியுங்கள்’ ஏளனக் குரல்கள் அறை முழுவதும் ஒலித்தன. கயபாவின் முன்னிலையிலேயே இயேசு தாறுமாறாய் அடிக்கப்பட்டார். அவருடைய உதடுகள் கிழிந்து இரத்தம் வழிந்தது. உடலெங்கும் வலிமையான அடிகளை வாங்கிய வலி.

தங்கள் ஆத்திரத்தை இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அத்தனை விரோதக் கைகளும் இயேசுவை அடித்தன. தங்கள் தலைமைக்கு எதிராக எச்சரிக்கைக் குரல்களை எழுப்பிய இயேசுவை அத்தனை தலைவர்களும் நையப் புடைத்தனர். இயேசு அமைதிகாத்தார்.

‘இவனை ஆளுநர் பிலாத்துவிடம் கூட்டிக் கொண்டு போகவேண்டும். அதன்பின்பு இவனுக்கு என்ன தீர்ப்பு கிடைக்கும் என்பது தெரியாது. எனவே இப்போது தான் நமக்கு வாய்ப்பு. நன்றாக அடியுங்கள். இவன் ஒருவேளை விடுதலை செய்யப்பட்டால் கூட நாளை இவன் நமக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.’ தகவல் பரிமாறப்பட்டது. இயேசுவின் உடலெங்கும் இரத்தக்காயங்கள்.
திருந்திய யூதாஸ்
____________

 

‘ஏய்… விஷயம் தெரியுமா ? இயேசு நன்றாக மாட்டிக் கொண்டார். அவரை தலைமைக்குருக்களும், மற்றவர்களும் சேர்ந்து கயபாவின் முன்னிலையில் வைத்து அடித்து உதைக்கிறார்கள்’ ஒருவன் சொல்ல திடுக்கிட்டுத் திரும்பினான் அவன்.

யூதாஸ் இஸ்காரியோத்து. இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த இயேசுவின் சீடன்.

‘என்ன சொல்கிறாய் ? இ..இ…இயேசுவை அடிக்கிறார்களா ?’ யூதாசின் குரல் பிசிறடித்தது.

‘அடியா ? மரண அடி. இப்படி ஒரு அடியை அவன் வாழ்நாளில் வாங்கியிருக்கவே முடியாது. அப்படி ஒரு அடி ! ‘

‘அவருடைய சீடர்களெல்லாம் கூட இல்லையா ? மக்கள் யாரும் அவருக்கு ஆதரவாய் பேசவில்லையா ?’ யூதாஸ் பதட்டமானான்.

‘ஆதரவா ? ஆதரவு அளித்தவர்களெல்லாம் பயந்து ஓடிவிட்டார்களே. நான் கொஞ்ச நேரம் தான் நின்றேன். அதற்குமேல் நிற்கமுடியவில்லை.  இயேசுவை அடிப்பதைப்போல இன்னொருவரை இதுவரை யாரும் அடித்ததேயில்லை.’

‘உண்மையாகவா சொல்கிறாய் ? இயேசு தப்பிக்கவில்லையா ? அதெப்படி ? அவர்… அவர்…’ யூதாஸ் தடுமாறினான்.

‘நாளை அவர் கொல்லப்படுவது நிச்சயம் என்று பேசிக்கொள்கிறார்கள்.’

‘ஐயோ… தப்பு செய்து விட்டேனே…’ யூதாஸ் எழுந்தான்.

‘ஏய்… என்ன ஆச்சு ?’

‘இல்லை… இயேசுவை நான் தான் அடையாளம் காட்டினேன். அவர் கண்டிப்பாகத் தப்பித்து விடுவார் என்றல்லவா நினைத்தேன். ஐயோ…. பெரும் தப்பு செய்துவிட்டேன். எப்படியாவது அவரை விடுவிக்க வேண்டும்…’ யூதாஸ் லஞ்சமாய் வாங்கியிருந்த பணமுடிப்பையும் எடுத்துக் கொண்டு ஒரு தலைமைக்குருவைப் பார்க்க ஓடினான்.

யூதாஸின் மனம் பதட்டத்தில் துடித்தது. தவறிழைத்துவிட்டோமே என்று அவருடைய உள்ளம் கதறி அழுதது. இத்தனை நாள் கூடவே இருந்துவிட்டு இப்படிக் கடைசியில் நானே துரோகியாகிவிட்டேனே. அரற்றியபடியே ஓடிய யூதாஸ் ஆலயத்தில் அமர்ந்திருந்த தலைமைக்குருவின் முன்னால் வந்து விழுந்தான்.

‘ஐயா…. இயேசு ஒரு பாவமும் அறியாதவர். அவரைக் காட்டிக் கொடுத்து நான் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன்….’ யூதாஸ் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவசர அவசரமாய்ச் சொன்னான்.

‘அதனால் எங்களுக்கென்ன ?’

‘ஐயா… அது என்னுடைய தவறு. இதோ நீங்கள் தந்த பணம் அப்படியே இருக்கிறது. இதைப் பெற்றுக் கொண்டு இயேசுவை விட்டு விடுங்கள்’ யூதாஸ் கெஞ்சினான்.

‘விட்டு விடுவதா ? உன்னுடைய வேலை முடிந்துவிட்டது. இனிமேல் உன்னுடன் எனக்கென்ன பேச்சு. போய்விடு..’ தலைமைக்குரு தலையைத் திருப்பினார்.

‘ஐயா… அப்படிச் சொல்லாதீர்கள். அவரை அடிக்கிறார்களாம், கொல்லப்போகிறார்களாம். எல்லாம் என்னால் தானே… இந்தப் பணம் எனக்கு வேண்டாம். இது பாவப்பட்ட பணம். இதை வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் பணம் வேண்டுமென்றால் நான் தருகிறேன். பெற்றுக் கொண்டு தயவு செய்து இயேசுவை விட்டு விடுங்கள்’ யூதாஸ் விடாமல் கெஞ்சினான்.

‘யோவ்… வெளியே போகிறாயா இல்லையா ? உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போய்விடு’ குரு கத்தினார்.

‘இதோ… வெள்ளிக் காசுகள். எனக்கு இவை வேண்டாம். கேவலம் பணத்துக்காக ஒரு மாமனிதனைக் காட்டிக் கொடுத்துப் பாவம் செய்துவிட்டேன்…’ அழுது கொண்டே யூதாஸ் தன்னிடமிருந்த பணப்பையை ஆலயத்தினுள் வீசி எறிந்தான். வெள்ளிக்காசுகள் ஆலயம் முழுவதும் சிதறின.

யூதாஸ் அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. குற்ற உணர்வு அவனைத் துரத்தியது. இயேசுவைக் காட்டிக் கொடுத்த குற்ற உணர்வுடன் இனிமேல் வாழமுடியாது என்று முடிவெடுத்த யூதாஸ் கண்ணீர் விட்டழுதான்.

‘இயேசுவே…. அவனுடைய உதடுகள் விடாமல் முணுமுணுக்க யூதாஸ் தூக்கில் தொங்கினான் ! உயிர் விட்டான்.

நன்றாக வாழவேண்டுமென்று லஞ்சமாய் வாங்கிய பணம் ஆலயத்துக்குள் சிதறிக் கிடந்தது. தலைமைக்குரு அவற்றைப் பொறுக்கினார்.

‘இதைக் காணிக்கைப் பெட்டியில் போடாதீர்கள். ஏனென்றால் இது இரத்ததுக்கான விலை. எனவே வேறு ஏதாவது செய்யுங்கள்’ ஆலய நிர்வாகிகளிடம் தலைமைக்குரு சொன்னார்.

‘இதை வைத்து ஒரு குயவன் நிலத்தை வாங்குவோம். அன்னியரை அடக்கம் செய்வதற்குரிய ஆலய நிலமாக அது இருக்கட்டும்.’ நிர்வாகிகள் முடிவெடுத்தார்கள்.

அவர்கள் ஒரு நிலத்தை வாங்கினார்கள். அதை இரத்த நிலம் என்று அழைத்தனர்.
பிலாத்து முன்னிலையில்
__________________
வெள்ளிக்கிழமை.

குளிர் உயிரை உறைய வைக்க உலவிக்கொண்டிருந்த அதிகாலை. ஏப்ரல் ஏழாம் தியதி என்கிறது வரலாறு.

பிலாத்து காத்துக் கொண்டிருந்தான். அன்னா ஏற்கனவே சொல்லியிருந்ததன் படி பிலாத்து இயேசுவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.
இயேசுவுக்கு என்ன தண்டனை வழங்குவது. இயேசு எல்லோரையும் தன்னுடைய பேச்சினாலும், செயலினாலும் வசீகரித்து வைத்திருக்கிறார். இப்போது மதவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படாவிடில் தன்னுடைய பதவி போய்விடும் அபாயமும் இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டாம் ஒட்டுமொத்த மக்களிடமும் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. பிலாத்து இரவு முழுக்க யோசித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய சிந்தனையைக் கலைத்தாள் அரசி பிரோகுலா, பிலாத்துவின் நேசத்துக்குரிய மனைவி.

‘என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் ?’

‘இல்லை… எருசலேமில் இயேசு என்னும் ஒரு நபர் அன்னாவுக்கும், கயபாவுக்கும் எதிராக புரட்சி செய்கிறானாம். அவனை அங்கே தலைமைச் செயலகத்தில் வைத்து விசாரித்து விட்டு தீர்ப்புக்காக இங்கே கொண்டு வருவதாக அன்னா சொன்னார். அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியாக வேண்டுமென்று நிர்ப்பந்திக்கிறார்…’ பிலாத்து சொல்லி முடிக்கும் முன் படபடத்தாள் அரசி.

‘யார்… இயேசுவையா ? வேண்டாம்.. அவருக்கு எதிராக எந்தத் தீர்ப்பையும் வழங்கி விடாதீர்கள்.’

பிலாத்து வியந்தான். இயேசு ஊரிலுள்ள மக்களை மட்டும் தான் வசீகரித்திருக்கிறார் என்று பார்த்தால் அரச பரம்பரையையே அசைத்திருக்கிறாரே !!
‘நீயும் இயேசுவின் மறைமுக சீடர்களில் ஒருத்தியா ? உனக்கெப்படி அவரைத் தெரியும் ?’ பிலாத்துவின் கேள்வி சற்று எள்ளலுடன் துள்ளியது.

‘எனக்கு அவரைத் தெரியாது. ஆனால் நேற்றிரவு அவரைக் குறித்து ஒரு கனவு கண்டேன்…’

‘கனவா ?’

‘ஆம். அவர் நல்லவர். நாம் அவருக்கு எதிராக எந்தத் தீர்ப்பையும் வழங்கி விடக் கூடாது. அது நமக்கு மிகப்பெரிய இரத்த பாவத்தைக் கொண்டு வரும்’ அவள் தொடர, பிலாத்து குழம்பினான்.

எது எப்படியெனினும், ஏற்கனவே பிலாத்து இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். இயேசு பெரிய குற்றவாளியல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். குருக்களும், மறைநூல் வல்லுனர்களும், பரிசேயர்களும் இயேசுவிடம் வெறுப்படைந்திருப்பதையும், பொறாமை கொண்டிருப்பதையும் கூட பிலாத்து அறிந்திருந்தான். இப்போது தன் மையல் மனைவியும் இயேசுவுக்கு ஆதரவுக் கொடி காட்டியிருப்பதால், எப்படியாவது இயேசுவுக்குக் குறைந்த பட்ச தண்டனையை வழங்கி இயேசுவை விடுவித்துவிட வேண்டும் என்று மனதில் நினைத்தான்.

அப்போது அரண்மனை மணி அடிக்கப்பட்டது !

அன்னாவும், கயபாவும் இயேசுவையும் கூட்டிக் கொண்டு கூட்டத்தினருடன் விடிவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் பிலாத்துவின் மாளிகை வாசலை வந்தடைந்திருந்தார்கள்.

பிலாத்து வெளியே வந்தான்.

அவனுக்கு முன்னால் வந்தவர்கள் நின்றார்கள். அன்னா பிலாத்துவின் முகத்தைப் பார்த்தான், அந்தப் பார்வையில் பொதிந்திருந்த பொருளைப் புரிந்து கொண்ட பிலாத்து வேறு பக்கமாக தன்னுடைய பார்வையைத் திருப்பினான். தனக்கு முன்னால் நிற்பவர்கள் அனைவரும் ஆலயத்தின் அந்தஸ்துள்ள மனிதர்கள். சட்ட வல்லுநர்கள், தலைமைச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பரிசேயர்கள், குருக்கள், மற்றும் அன்னா வின் ஆதரவாளர்கள் சிலர். இயேசுவின் சீடர்களோ, அவருடைய ஆதரவாளர்களோ அங்கே இல்லை.

மக்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டால் இயேசுவின் ஆதரவாளர்கள் பெருமளவில் கூடிவிடுவார்கள் என்பதால் நள்ளிரவில் கைது செய்து விடிவதற்குள் தண்டனை வாங்கிக் கொடுத்துவிட துடித்துக் கொண்டிருந்த அன்னாவின் விஷமம் பிலாத்துவுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும் வெளிப்படையாக தைரியமாய்ச் சொல்லி நிமிர்ந்து நின்றால் தன்னுடைய இருக்கைக்கு ஆபத்து இருக்கிறது என்பதை அறிந்திருந்ததால் அமைதியாக நின்றான்.

இயேசு பிலாத்துவைப் பார்த்தார். பிலாத்துவின் கண்களும் இயேசுவின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன. பிலாத்து ஒரு வினாடி வெலவெலத்தான். காயங்களுடன் நின்றிருந்த இயேசுவின் பார்வையில் இருந்த தீர்க்கம் அவனை புரட்டிப் போட்டது. திரும்பி கூட்டத்தினரைப் பார்த்தான்.

‘இவன் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டு என்ன ?’ பிலாத்து கேட்டான்.

‘குற்றமில்லாத மனிதன் என்றால் இவனை நாங்கள் உமது முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கவே மாட்டோம்’ என்ற அன்னா தொடர்ந்தான்.

‘இந்த மனிதன் சீசருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையை தடுக்கிறான். தானே அரசர், மீட்பர் என்கிறான்’ அன்னா பிலாத்துவிடம் பேசவேண்டிய விதத்தில் பேசினான். சீசருக்கு எதிராக பிலாத்துவால் எதையும் பேச முடியாது. சீசருடைய மகள் தான் பிலாத்துவின் மனைவி பிரோகுலா.

பிலாத்து அன்னாவின் சூழ்ச்சி மிகுந்த பதிலைக் கேட்டு உள்ளுக்குள் எரிச்சலடைந்தான்.

‘அப்படியானால் இவனை நீங்களே கொண்டு போய் உங்களுக்குப் பிடித்த தீர்ப்பை வழங்குங்கள்’ பிலாத்து சொன்னான்.

இப்போது பிலாத்துவிடமிருந்த எரிச்சல் அன்னாவிடம் வந்திருந்தது.

‘யாரையும் கொல்லும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்பது உமக்குத் தெரியுமே. நாங்கள் இவனுக்கு மரண தண்டனை வழங்க முடியாது. அதனால் தான் இங்கே கொண்டு வந்திருக்கிறோம்’ அன்னா சொன்னான்.

பிலாத்து சில வினாடிகள் மெளனம் சாதித்தான். பின் இயேசுவின் பக்கமாகத் திரும்பினான்.

‘நீ யூதர்களின் அரசனா ?’ பிலாத்து இயேசுவைப் பார்த்துக் கேட்டான்.

‘நீரே சொல்லுகிறீர்’ இயேசு தெளிவாகச் சொல்ல கயபா குறுக்கிட்டான்.

‘இவனை எங்களுக்குத் தெரியும். தச்சு வேலை செய்யும் யோசேப்புக்கும், மரியாவுக்கும் பிறந்த மகன் இவன். ஆனால் இவனோ தான் கடவுளின் மகன் என்று புலம்பித் திரிகிறார்.’ கயபா சொல்ல, பிலாத்து இயேசுவை உள்ளே அழைத்துச் சென்றான்.

கைதிகளிடம் தனிப்பட்ட விசாரணை செய்ய விரும்பும்போது மக்கள் முன்னிலையிலிருந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்று தனியே விசாரிக்கும் வழக்கம் இருந்தது. அன்னாவும் கயபாவும் குழம்பினார்கள். ஏன் இயேசுவை உள்ளே அழைத்துச் சென்று விசாரிக்கிறார்கள் ? உள்ளே இயேசு என்ன சொல்லப் போகிறார் ? தங்களுக்கு எதிராக ஏதேனும் ஆதாரங்கள் வைத்திருக்கிறாரோ ? வெளியே கூடியிருந்த அனைவர் மனதிலும் கேள்விகள் முளைத்தன.

பிலாத்து இயேசுவை தனியே விசாரிக்கத் துவங்கினான்.

‘நீ யூதர்களின் அரசனா ?

‘அரசன் என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மைக்குச் சான்று பகர்வதே எனது பணி’ இயேசுவின் குரலில் பயமோ நடுக்கமோ இருக்கவில்லை.

‘உன்மீது இத்தனைக் குற்றச் சாட்டுகள் கூறுகிறார்களே. அதற்கு நீ என்ன பதில் சொல்கிறாய் ?’

இயேசு பதிலேதும் சொல்லவில்லை.

பிலாத்து வியப்புற்றான். அவனுக்கு முன்னால் இதுவரை வந்திருந்த கைதிகள் எல்லாம் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக மண்டியிடுபவர்களாகவே இருந்தார்கள். இயேசு தான் மரணத்தைத் துச்சமென மதித்து அமைதி காக்கிறார். அல்லது அதிகாரமாய் பேசுகிறார்.

நிலமையின் வீரியம் ஒருவேளை இவனுக்குத் தெரியாதோ ? சிலுவையில் அறைந்து கொல்லப்படுவது தான் அன்னா இயேசுவுக்குத் தர விரும்பும் மரணம். அது எத்தனை கொடுமையானது என்பது இயேசுவுக்குத் தெரிந்திருக்குமா ? இயேசு இவர்களுடைய சித்திரவதைகளையும் தாங்கி, தன்னை அறையப்போகும் சிலுவையை தானே சுமந்து கொண்டு மலைக்குச் செல்லவேண்டும் என்பதெல்லாம் தெரியுமா ? தெரிந்திருந்தும் இத்துணை தைரியமாய் இருக்கிறார் என்றால் உண்மையிலேயே இவர் கடவுளின் மகன் தானோ ? பிலாத்து யோசித்துக் கொண்டிருக்கும்போதே பிலாத்துவின் மனைவி பிலாத்துவிற்குத் தனியே ஒரு சீட்டெழுதி அனுப்பினாள்.

‘இந்த மனிதனை ஒன்றும் செய்யாதீர்கள். இவனைக் குறித்து நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன். இவர் பெரிய இறைவாக்கினர் தான். இவர் கடவுளின் மகன் தான். இவரை விட்டு விடுங்கள்’ குறிப்பைப் படித்த பிலாத்து உள்ளுக்குள் குழம்பினான்.

மீண்டும் இயேசுவை நோக்கினான்.

‘நீ.. நீ.. உண்மையிலேயே யூதர்களின் அரசனா ?’ பிலாத்து கேட்டான்

‘இதை நீராகச் சொல்கிறீரா ? இல்லை மற்றவர்கள் சொல்வதனால் சொல்கிறீரா ?’ இயேசு கேட்டார். அவரிடம் குழப்பம் இருக்கவில்லை. தான் அரசராகி விடுவோம் என்னும் பயத்தினால் ஏரோது மன்னன் இந்தக் கேள்வியைக் கேட்கிறானா அல்லது தான் யூதர்களின் அரசன் என்று மக்கள் சொல்வது உண்மையா என்று அறிந்து கொள்ளக் கேட்கிறானா என்பதே அவருடைய கேள்வியின் உட்கருத்தாக இருந்தது.

‘நானா ! நானா நீ சாகவேண்டுமென்று விரும்பினேன். நான் உன் ஊர்க்காரனா ? இல்லையே உன்னுடைய மக்கள் தான் உன்னை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் தான் உன்னை நான் தனியே விசாரிக்கிறேன்’ ஏரோது கோபத்தில் கத்தினான்

‘எனது அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல’ இயேசு சொன்னார்.

இயேசுவின் பதிலில் ஏரோது மீண்டும் குழம்பினான். எனது அரசு என்று இயேசு சொல்வதிலிருந்து தனக்கு ஒரு அரசு இருக்கிறது என்பதை இயேசு ஒத்துக் கொள்கிறார், ஆனாலும் இவ்வுலகைக் சார்ந்ததில்லை என்னும் போது அதை எப்படி கைக்கொள்வது ? இவ்வுலகைச் சாராத ஒரு அரசு இருக்க முடியுமா ? இருந்தால் அப்படி அங்கே அரசராய் இருப்பதாகச் சொல்லும் ஒருவரை இங்கே தண்டிக்க முடியுமா ? பிலாத்து யோசித்துக் கொண்டிருக்கையில் இயேசு மீண்டும் பேசினார்.

‘என்னுடைய அரசு இவ்வுலகைச் சார்ந்ததாய் இருந்திருந்தால், என்னை என்னுடைய படைவீரர்களும், பணியாளர்களும் காப்பாற்றியிருப்பார்கள். நான் யாரிடமும் கையளிக்கப்பட்டிருக்க மாட்டேன்’

பிலாத்து தலையைக் குலுக்கினான்

‘அப்படியானால் நீர் அரசர் தானா ?’

‘அரசர் என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மைக்குச் சான்று பகர்வதே எனது பணி’ இயேசு சொல்ல

‘உண்மையா ? அது என்ன ?’ பிலாத்து கேட்டான்.

இயேசு அமைதியாக நின்றார்.

‘என்ன அமைதியாய் இருக்கிறாய் ? நான் நினைத்தால் உன்னை விடுவிக்கவும் முடியும், கொல்லவும் முடியும் தெரியாதா ?’ பிலாத்து அரச தோரணையில் சொன்னான்.

‘என் மேல் உமக்கிருக்கும் அதிகாரம் எல்லாம் விண்ணகத்தில் இருக்கும் என் தந்தை தந்தது தான். இல்லையேல் உனக்கு என்மீது எந்த அதிகாரமும் இருக்காது’ இயேசு சொல்ல பிலாத்து தனது இடது கையால் மோவாயைத் தேய்த்தான்.

‘..எனவே என்னை உம்மிடம் கையளித்தவனே பெரும் பாவம் செய்தவன்’ இயேசு சொல்ல பிலாத்து ஆச்சரியத்துடன் திரும்பினான்

அப்படியானால் தான் பாவம் செய்தவனாக மாட்டோமா ? என்னிடம் இவரைக் கையளித்தவர்கள் தான் பாவம் செய்தவர்கள் என்றால் இயேசுவின் விஷயத்தில் நான் மன்னிக்கப்பட்டேனா ? பிலாத்து இயேசுவின் கண்களை முதன் முதலாக சற்று நேசத்துடன் பார்த்தான்.

திரும்பி வந்து மக்கள் கூட்டத்தினரின் முன்னால் நின்றான் பிலாத்து. எப்படியும் இயேசுவை விடுதலை செய்துவிட வேண்டும் என்னும் எண்ணம் இப்போது அவனுக்குள் வலுத்திருந்தது. மக்களைப் பார்த்து பிலாத்து சொன்னான்.

‘இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை’


‘குற்றம் இல்லையா ? கலிலேயா துவங்கி, யூதேயா வரை மக்களைக் கெடுத்து மக்களை கலவரத்துக்காய்த் தூண்டி விடும் இந்த மனிதனிடம் குற்றம் இல்லையா ?’ குருக்கள் தூண்டிவிட மக்கள் கத்தினார்கள்.

‘ஓ.. இவன் கலிலேயனா ?’ பிலாத்து கேட்டான்.

‘ஆம்…’

‘அடடா.. அப்படியானால் இவன் எருசலேமில் ஆட்சிசெய்யும் ஏரோது மன்னனின் அதிகாரத்துக்கு உட்பட்டவன். இவனை அங்கே அனுப்புங்கள்’ பிலாத்து நழுவினான்.

தன்னுடைய முதுகில் ஏறி அமர்ந்த பிரச்சினையை இத்தனை இலகுவாக இன்னொரு தோளுக்கு மாற்ற முடியும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. ஏரோது இப்போது எருசலேமில் தானே தங்கியிருக்கிறார் எனவே ஏரோது மன்னனிடம் உங்கள் இயேசுவைக் கொண்டு செல்லுங்கள், பிலாத்து ஆனந்தமாய் பின்வாங்கினான்.

அன்னா, கயபா மற்றும் கூட்டத்தினருக்கு வேறு வழியில்லை. ஏரோதின் மாளிகை நோக்கி அடுத்த பயணம் துவங்கியது.
ஏரோது முன்னிலையில்
_________________
இயேசு ஏரோதின் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

ஏரோது இயேசுவைக் கண்டதும் மகிழ்ந்தான். இயேசு எருசலேம் நகரில் மிகவும் பிரபலமடைந்திருந்ததால் ஏரோது இயேசுவைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்தான். எப்படியாவது இயேசுவைக் காணவேண்டும், அவருடைய அற்புதங்கள் சிலவற்றைக் கண்ணால் காணவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டிருந்தான்.

ஏற்கனவே ஏரோதை இயேசு ‘குள்ள நரி’ என்று அழைத்திருந்தார். ஏரோது மன்னன் திருமுழுக்கு யோவானைக் கொலை செய்ததால் அவருடைய ஆதரவாளர்களின் கோபம் ஏரோதின் பக்கம் இருந்தது. அதன் பின் இயேசுவும் ஏரோதை குள்ள நரி என்று அழைத்தபின் இயேசுவின் ஆதரவாளர்கள் அனைவருமே மறைமுகமாக ஏரோதுக்கு விரோதமாகவே இருந்தார்கள். இப்போது இயேசுவை திருமுழுக்கு யோவானின் சீடர்கள் ஆதரிக்கிறார்கள். அவர்களில் பலர் திருமுழுக்கு யோவான் தான் இயேசுவாக உலவுவதாகவும் நம்பினார்கள். ஏரோதும் அந்த நம்பிக்கை கொண்டிருந்தான் !

‘நீர் தான் இயேசுவா … ‘ ஏரோது நகைப்புடன் கேட்டான்.

இயேசு மெளனமாய் இருந்தார்.

‘நீ நிறைய அற்புதங்கள் செய்தாயாமே.. கொஞ்சம் செய்து காட்டு பார்ப்போம். எனக்கும் பொழுது போகும்’ ஏரோது சிரித்தான்.

கூட வந்திருந்த மறைநூல் அறிஞர்கள், குருக்கள் எல்லோரும் இயேசுவின் மேல் குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தார்கள்.

இயேசு எதற்கும் பதில் சொல்லவில்லை.

‘நீ செத்தவனை உயிர்ப்பித்தாயாமே ? இங்கே உயிரோடு இருக்கும் யாரையாவது செத்துப் போகச் செய் பார்க்கலாம் ‘

‘பிசாசைத் துரத்தினாயாமே… உன் கைகளைக் கட்டியிருக்கும் சங்கிலியை உடைத்துவிடு பார்க்கலாம்’

‘என்ன கடவுளின் மகனை சங்கிலியால் கட்டமுடியுமா ?’ ஏரோதின் ஏளனப் பேச்சுகள் கூட்டத்தினரை ஆரவாரம் செய்ய வைத்தன.

ஏரோது எப்படியேனும் இயேசுவை வைத்து சில மாந்திரீக செயல்களைச் செய்து காட்ட வைத்து பொழுதைப் போக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

‘இவன் கடவுளின் மகனல்லவா ? இவனுக்கு ஒரு நல்ல பட்டாடையை உடுத்துங்கள்’ ஏரோது சொல்ல படைவீரர்கள் அவருக்குப் பட்டாடை ஒன்றை அணிவித்தார்கள்.

‘அரசே வாழ்க…’ ஏரோது மன்னன் போலியாக இயேசுவின் முன்னால் குனிந்தான்.

இயேசு அவர்கள் முன்னிலையில் ஓர் ஏளனச் சின்னமாக நின்றார். இயேசுவின் பொறுமையும் அமைதியும் ஏரோதின் மனதைக் குழப்பின. ஒருவேளை இவர் இறைவாக்கினராய் இருப்பாரோ ? என்னும் குழப்பம் அவருக்குள் எழுந்தது. நமக்கு ஏன் வம்பு என்று ஏரோது நினைத்தான்.

‘இதோ… இவனை பிலாத்துவிடமே கூட்டிக் கொண்டு போங்கள். அவர் சொல்லும் தண்டனையை இவருக்கு வழங்குங்கள்’ ஏரோது சொன்னான்.

‘என்ன பிலாத்துவிடமா ? மீண்டுமா ? இவன் கலிலேயன் ஆனதனால் நீங்கள் தான் இவருக்குத் தண்டனை வழங்க வேண்டும்’ அன்னா குறுக்கிட்டான்.

‘இவன் கலிலேயனாய் இருந்தாலும் இவனுடைய செயல்களெல்லாம் யூதேயா எங்கும் தான் நடந்திருக்கிறது. அவனை நீங்கள் கைது செய்தது கூட பிலாத்துவின் ஆளுகைக்கு உட்பட்ட எருசலேமில் தானே. எனவே பிலாத்துவிடமே இவனைக் கொண்டு செல்லுங்கள். இவனுக்கு நீங்கள் என்ன தண்டனை வழங்கினாலும் அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’ ஏரோது சொல்ல அன்னா பெருமூச்சு விட்டான்.

‘ம்ம்… ஆகட்டும்.. மன்னனை இழுத்துச் செல்லுங்கள்.. வீரர்களே அவர் அரசர் .. மரியாதை செலுத்தி அழைத்துச் செல்லுங்கள்’ என்று ஏரோது ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்தான்.

இயேசுவும் கூட்டத்தினரும் வெளியேறியதும் ஏரோதின் மனதுக்குள் பொறி தட்டியது. அவனுடைய புருவங்கள் விரிந்தன. கண்களில் திகில் படர்ந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இயேசுவைக் கொல்ல ஏரோது மன்னன் முயன்றபோது இயேசு சொல்லியிருந்தார். எருசலேமில் தான் தன்னுடைய மரணம் நிகழும் என்று !. எப்படி மூன்று ஆண்டுகளுக்குப் பின் நடப்பதை அவரால் அத்தனை சரியாய் சொல்ல முடிந்தது ? எரோது மன்னனிடம் அதுவரை இருந்த சிரிப்பு மறைந்து விட்டிருந்தது. பயமும் திகிலும் அவனுடைய முகத்தை அப்பின.
மரண தண்டனை
___________

கூட்டம் இயேசுவைக் கூட்டிக் கொண்டு மீண்டும் பிலாத்துவின் மாளிகைக்கே வந்தது.

‘இவனுக்கு நீர் தான் தண்டனை வழங்க வேண்டுமாம். என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்கலாம் என்று ஏரோது அனுமதி வழங்கியிருக்கிறார்.’ அன்னா சொன்னார்.

பூமராங் போல தன்னை நோக்கியே மீண்டும் வந்த வழக்கைக் கண்டு பிலாத்து வருந்தினான். அவன் அன்னா வை அழைத்தான்.

‘இதோ.. இந்த மனிதனிடத்தில் நீங்கள் சாட்டும் குற்றச் சாட்டுகள் எதையும் நான் காணவில்லை’

‘இல்லை. இவன் குற்றவாளிதான். இதோ, இத்தனை மக்கள் கூறுகிறோமே. எங்கள் தலைமைச் சங்கத்திலும் முடிவாகி விட்டது இவன் குற்றவாளி தான் ‘ அவர்கள் கத்தினார்கள்.

‘நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆனால் என்னுடைய விசாரணையிலோ, ஏரோது மன்னனின் விசாரணையிலோ எதுவும் தெரியவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுவிப்பேன்’ பிலாத்து சொன்னான்.

‘விடுவிப்பதா ? முடியாது. இவன் மரணதண்டனை அனுபவிக்க வேண்டும்’ அவர்கள் உறுதியாய்ச் சொன்னார்கள்.

‘மரண தண்டனையா ? சாவுக்குரிய தண்டனை ஏதும் இவனிடம் நானோ, ஏரோது மன்னனோ காணவில்லை. எனவே இவனை சித்திரவதை செய்து விடுவிப்பேன். எனவே மீண்டும் இப்படி ஒரு தவறை இவன் செய்யமாட்டான்’ பிலாத்து சொன்னான்.

அன்னாவும், கயபாவும் மக்களிடையே இயேசுவைக் கொல்லவேண்டுமெனக் கத்துங்கள் என்று தூண்டினார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பதாக வாக்களித்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்ற இயேசுவின் ஆதரவாளர்களை அவர்கள் கூட்டத்துக்கு வெளியே தள்ளினார்கள்.

பிலாத்து மீண்டும் இயேசுவை விசாரித்தான்.

திடீரென பிலாத்துவுக்கு ஒரு யோசனை. அவர்களுடைய வழக்கப்படி பாஸ்கா விழாவின் போது கைதி ஒருவரை விடுதலை செய்யலாம். குறைந்த குற்றம் செய்த ஒரு மனிதனை விடுதலை செய்வது வழக்கம். அப்போது சிறையில் அதிபயங்கரக் கொலை குற்றவாளி ஒருவன் இருந்தான். அவன் பெயர் பரபா. அவன் ரோம அரசுக்கு எதிராக பலத்த கலகம் செய்தவன். பல கொலைக் குற்றங்களும் அவனுடைய பெயரில் உண்டு.

அவனோடு ஒப்பிட்டால் இயேசு செய்ததாகச் சொல்லப்படுபவையெல்லாம் வெறும் சாதாரண குற்றங்கள் தான். எனவே பரபாவை விடுதலை செய்யவா இயேசுவை விடுதலை செய்யவா என்று கேட்போம். மக்கள் கண்டிப்பாக இயேசுவைத் தான் கேட்பார்கள் என்று பிலாத்து நினைத்தான். அவனுடைய முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பிறந்தது.

‘அமைதி… அமைதி…’ பிலாத்து மக்கள் முன்னிலையில் எழுந்து நின்றான்.

கூட்டம் அமைதியானது.

‘உங்களுக்கு நான் ஒரு கடைசி வாய்ப்பு தருகிறேன். நல்ல முடிவு எடுங்கள். பாஸ்கா விழாவை முன்னிட்டு நான் ஒரு கைதியை விடுதலை செய்யப் போகிறேன். நன்றாகக் கேளுங்கள். பரபா என்னும் கொலையாளியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். மாபெரும் கலகக் காரன். கொலையாளி. அவனை நான் விடுதலை செய்வதா ? இதோ இந்த குற்றமற்ற இயேசுவை விடுதலை செய்வதா ? சொல்லுங்கள்’ பிலாத்து கேட்டான்.

‘பரபாவை…. ‘ கூட்டத்தினரைக் கத்த வைத்தனர் கூட்டத்தில் கலந்திருந்த குருக்களின் ஆதரவாளர்கள்.

‘என்ன பரபாவையா ? அவன் எப்படிப்பட்ட குற்றவாளி தெரியுமா ? அவனையா விடுதலை செய்யவேண்டும்’ பிலாத்து மீண்டும் கேட்டான்.

‘ஆம். பரபாவை விடுதலை செய்தால் போதும். இயேசுவை விடுவிக்க வேண்டாம்’ கூட்டம் கத்தியது.

பிலாத்து குழம்பினார். ‘அப்படியானால் உங்கள் இயேசுவை நான் என்ன செய்வது ?’

கூட்டத்தினர் ஒருவினாடி மெளனமானார்கள்.

‘சிலுவையில் அறையும்’ ஒரு குரல் ஓரமாய் ஒலித்தது. அந்த ஒலியைப் பிடித்துக் கொண்டே பல ஒலிகள் உயர்ந்தன. சில வினாடிகளில் கூட்டத்தினர் ஒரே குரலில் கத்தத் துவங்கினார்கள்

‘சிலுவையில் அறையும்… ‘
‘சிலுவையில் அறையும்…. ‘
‘சிலுவையில் அறையும்….’

‘சிலுவையில் அறையுமளவுக்கு இவன் செய்த தவறு என்ன ?’ பிலாத்துவின் கேள்வியைக் எதிர்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்கள் விடாமல் கத்திக் கொண்டே இருந்தார்கள்

‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’

பிலாத்து தளர்ந்து போய் ஆசனத்தில் அமர்ந்தான்.

‘இவனைக் கொண்டு போய் சித்திரவதை செய்து கூட்டி வாருங்கள்’ பிலாத்து அரைமனதுடன் ஆணையிட்டான்.

படைவீரர்கள் இயேசுவைச் சித்திரவதைக் கூடத்துக்கு இழுத்துச் சென்றார்கள்.

இரும்புச் சங்கிலிகள், முள்கம்பிகள், இரும்பு உருண்டைகள் என்று கையில் கிடைத்த ஆயுதங்களயெல்லாம் வீரர்கள் கைகளில் எடுத்துக் கொண்டார்கள். இயேசு அவர்கள் முன்னிலையில் நிராயுதபாணியாய் நின்றார்.

இயேசுவைச் சங்கிலியால் கட்டி ஒரு தூணில் பிணைத்த வீரர்கள் அவரை அடிக்கத் துவங்கினார்கள். முள்கம்பிகள் அவருடைய முகத்தையும் உடம்பையும் இழுத்துக் கிழித்தன. சங்கிலிகளும் கூர்மையான முள் சாட்டைகளும் இயேசுவின் உடம்பில் இரத்தக் கோடுகளை வரைந்தன. இயேசு வலியால் துடித்தார். ஆனாலும் மனம் தளரவில்லை.

வீரர்கள் தங்கள் கை ஓயும் வரை இயேசுவை அடித்தார்கள். இயேசு இரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

பின் அவர்கள் அவருக்கு ஒரு சிவப்பு அங்கியை அணிவித்து
‘யூதரின் ராஜாவே வாழ்க…’ என்று சொல்லிக் கொண்டே எட்டி உதைத்தார்கள். இயேசுவின் காயமான உடம்பு மண்ணில் உருண்டது.

அவர்கள் கூர்மையான முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி இயேசுவின் தலையில் வைத்தார்கள். தலையில் வைத்த கிரீடத்தின் மேல் தடிகளால் அடித்தார்கள். முட்கள் அவருடைய தலையைத் துளைத்தன. நெற்றியைக் கிழித்தன. தலை இரத்தத்துக்குள் அமிழ்ந்தது.

சித்திரவதை முடிந்து இயேசுவைத் தூக்கிக் கொண்டு மக்களின் முன்னிலையில் நிறுத்தினார்கள் படைவீரர்கள்.

‘பாருங்கள். இதோ மனிதன். ‘ பிலாத்து சொன்னான்.

‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’

மக்கள் கத்தினார்கள்.

‘பாருங்கள். இவனுக்கு எவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்கிறேன். இவன் இனிமேல் உங்களுக்கு எதிராகப் பேசுவான் என்று நினைக்கிறீர்களா ? சிலுவையில் அறையக் கூடிய அளவுக்கு இவனிடம் நான் குற்றம் ஏதும் காணவில்லை. எனவே நான் இவனை விட்டுவிடப் போகிறேன்’ பிலாத்து மீண்டும் சொன்னான்.

‘குற்றம் இல்லையா ? எங்களுக்கு ஒரு நியாயப் பிரமாணம் உண்டு. இவன் கடவுளின் மகன் என்று பிரகடனப் படுத்தினான். எனவே இவன் சாகவேண்டும்’ அவர்கள் குரலுயர்த்தினார்கள்.

பிலாத்து இதைக் கேட்டு இன்னும் அதிகமாக வருந்தினான். ஒருவேளை இவர் கடவுளின் மகனாக இருப்பாரோ ? என்ற கவலையும் அவரைப் பிடித்துக் கொண்டது.

‘இவன் செய்த குற்றம் என்ன ?’ பிலாத்து குரலை உயர்த்தினார்.

‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’
‘சிலுவையில் அறையும்….’

மக்கள் விடாமல் கத்திக் கொண்டே இருந்தார்கள்.

‘உங்கள் மன்னனை நான் சிலுவையில் அறையவா ?’ யூதர்களை நோக்கிய ஒரு ரோமரின் கேள்வியாக ஒலித்தது பிலாத்துவின் அந்த கேள்வி.

‘எங்களுக்கு சீசர் மட்டுமே அரசர்’ குரல் கூட்டத்திலிருந்து கிளம்ப, எல்லோரும் அதையே திரும்பச் சொன்னார்கள். அந்த கத்தலில் இருந்த அரசியல் விளையாட்டு பிலாத்துவுக்கு விளங்கியது. இனிமேல் இயேசுவை விடுவிப்பது சாத்தியமில்லை என்பது பிலாத்துவுக்குப் புரிந்தது.

இயேசுவை விடுவிக்க நினைக்கும் தன்னுடைய முயற்சி பெரும் கலவரத்தை நோக்கிப் போவதை அறிந்த பிலாத்து கூட்டத்தினர் முன்னிலையில் தண்ணீரை எடுத்து
‘இவனுடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி தன்னுடைய கைகளைக் கழுவினான்.

மக்கள் முன்னிலையில் தன்னுடைய கைகளைக் கழுவி விட்டு ஆசனத்தில் அமர்ந்தான் பிலாத்து.

‘இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்’ மக்கள் அசரவில்லை.

‘சரி… இவனை உங்கள் விருப்பம்போலச் செய்ய அனுமதிக்கிறேன்’ பிலாத்து சொல்ல மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

பரபா விடுதலை செய்யப்பட்டான்.

இயேசு சிலுவை மரணத்துக்காய் தீர்ப்பிடப்பட்டார்.
சிலுவைப் பயணம்
_____________
அதன்பின் இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கான வேலைகள் மும்முரமாகின. பாரமான சிலுவை ஒன்று வாங்கிவரப்பட்டது.

சிலுவை என்பது பாரமான இரண்டு மரத் துண்டுகளை, இரண்டு இரும்பு கொக்கிகளால் இணைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு கொலைக்கருவி. அவமானச் சாவு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ அவர்களை அந்த சிலுவையில் கிடத்தி, கைகளை விரித்து மரத்தின் இரண்டு முனைகளிலும் வைத்து ஆணியால் அறைந்து, கால்களை கீழே இழுத்து இன்னொரு ஆணியால் அறைந்து தொங்க விடுவார்கள்.

பூமியிலும் ஆகாயத்திலும் இல்லாமல் வருவோர் போவோரெல்லாம் பார்க்கும் விதமாக மலையில் அவர்களை சிலுவையில் சாகும் வரைத் தொங்க விடுவார்கள்.

சிலுவைச் சாவு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ, அவர்கள் தாங்களாகவே அந்த சிலுவையைத் தோளில் சுமந்து கொண்டு தங்கள் மரணம் நிகழப்போகும் இடம் வரை தூக்கிக் கொண்டும் வரவேண்டும். ஒரு கொடுமையான சாவு. சாவு பற்றிய பயம் ஒருபுறம், அவமானம் ஒரு புறம், நினைத்துப் பார்க்க முடியாத வலி ஒருபுறம் என சிலுவைச் சாவுக் குற்றவாளிகள் படும் அவஸ்தை விவரிக்கக் கூடியதல்ல.

சிலுவையில் தொங்கவிட்டபின் மாலை வரை சிலுவையிலேயே தொங்கியும் முழுமையாய் இறக்காத மனிதர்களும் இருப்பார்கள். படைவீரர்கள் வந்து அவர்களுடைய கால்களை வெட்டி எறிவார்கள்.

இதோ, இயேசுவின் தோளிலும் இப்போது ஒரு சிலுவை வைக்கப்படுகிறது. இயேசுவை ஏற்கனவே இரவு முழுவதும் சித்திரவதை செய்திருந்ததால் அவரால் நேராக நிற்கவும் முடியவில்லை. ஆனால் கண்களிலும், மனதிலும் மட்டும் அதே உறுதி.

இயேசுவை கொல்கொதா என்று அழைக்கப்பட்ட மலையை நோக்கி நடக்கவைத்தார்கள். கொல்கொதா என்பதற்கு மண்டைஓடு என்பது பொருள்.

படைவீரர்கள் கூட்டத்தினரை விலக்கி வழிஏற்படுத்த, நடக்கவே வலுவில்லாத குற்றுயிரான நிலையில் இயேசு பாரமான சிலுவையைச் சுமந்து கொண்டு மலையை நோக்கி நடந்தார்.

இயேசுவால் நடக்க முடியவில்லை. தடுமாறி விழுந்தார்.

படைவீரர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த சாட்டையால் அவரை அடித்தார்கள். இரண்டு பேர் அவரை எழுப்பி விட மீண்டும் சிலுவை அவருடைய தோளில் போடப்பட்டது.

இயேசு அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே வந்தார்.

வெளியே நன்றாக விடிந்திருந்தது.

விஷயம் எப்படியோ பரவி விட்டிருக்க. வெளியே பாமரமக்கள் ஏராளமானோர் குழுமியிருந்தார்கள். இயேசுவின் தீவிர சீடர்கள் தலைமறைவாகிவிட்டிருக்க, இயேசுவின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட பாமர மக்கள் அவருக்காகக் கண்ணீர் விட்டார்கள்.

இயேசு தொடர்ந்து நடந்தார்.

சாலைகளின் இருபுறமும் மக்கள் ஓடி வந்தனர். ஊர் முழுதும் தகவல் சட்டென்று பற்றி எரிந்தது. இயேசுவின் ஆதரவாளர்களும், சீடர்களும், இயேசுவை நேசிப்பவர்களும் சாலைகளின் இருபுறமும் திகில் அலையும் கண்களோடும், குமுறும் நெஞ்சத்தோடும் பார்த்துக் கொண்டே நின்றார்கள்.

அவர்களால் நம்ப முடியவில்லை. நேற்று வரை எல்லோருக்கும் பார்வை கொடுத்துக் கொண்டிருந்தவர், தொழுநோயாளிகளைக் குணமாக்கிக் கொண்டிருந்தவர், ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தவர், சிங்கம் போல சீடர்களுடன் உலா வந்து கொண்டிருந்தவர் இன்று என்ன ஆயிற்று. அது இயேசு தானா அல்லது வேறு யாரோவா ? தண்ணீரில் கூட தடுமாறாமல் நடந்தவர், தரையில் நடக்க முடியாமல் தடுமாறுகிறாரே ! மக்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்கள்

இருபுறமும் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

இயேசு சுற்றியிருந்த மக்களின் பார்வைகளைப் படித்தார். பெண்களின் அழுகுரல் அவரைக் கரைத்தது. தன்னிடம் எஞ்சியிருந்த வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி பேசினார்.
‘எருசலேம் மகளிரே… எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’.

சொன்ன இயேசுவின் பார்வை கூட்டத்தினரிடையே அழுவதற்கும் திராணியில்லாமல் என்ன செய்வதென்றே அறியாமல் பித்துப் பிடித்து நின்ற ஒரு முகத்தின் மீது பட்டது.

அவருடைய தாயார் !

எந்த ஒரு தாயால் தன் மகனை இந்த கோலத்தில் பார்க்க முடியும் ? காலில் கல் இடித்து விட்டாலே கலங்கிப் போகும் தாய்மை மரணத்தைத் தோளிலேற்றி மகன் செல்வதை கண்டு கரையாமல் இருக்க முடியுமா ?

அந்தப் பார்வையைத் தாங்க முடியாத இயேசு தடுமாறித் தரையில் விழுந்தார். பூமி அவருடைய இரத்தத்தைக் கொஞ்சம் துடைத்துக் கொடுத்தது.

மீண்டும் எழுந்தார். தொடர்ந்து நடந்தார். இயேசுவால் நடக்க முடியவில்லை. கொல்கொதா மலை இன்னும் தொலைவில் இருந்தது.

இயேசு மூன்றாவது முறையாகக் கீழே விழுந்தார். இனிமேல் எழும்புவதற்கு உடம்பில் வலு இல்லை. சிலுவையை யாராவது ஒருகை தூக்கி விட்டால் நன்றாக இருக்குமே, இயேசுவின் பார்வையில் தன்னுடைய பாரத்தைச் சுமக்கும் தோள்கள் ஏதாவது தென்படுகிறதா என்ற ஏக்கம்.

‘இவனால் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாது. என்ன செய்யலாம் ?’

‘யாரையாவது பிடித்து சிலுவையைச் சுமக்கச் செய்வோம், இல்லையேல் இவன் மலையை அடையும் முன் மரணத்தை அடைந்துவிடுவான்’

படைவீரர்கள் பேசிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தார்கள். சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் அவர்களுடைய கண்களில் தட்டுப்பட்டான்.

‘ஏய்… நீ யார்..’

‘நான் சீமோன். சீரேன் ஊரைச் சேர்ந்தவன். எனக்கு இந்த மனிதனைத் தெரியாது… நான் ஒன்றும் அறியாதவன்’ அவன் பயந்து நடுங்கினான்.

‘எங்கிருந்து வருகிறாய்’

‘வயலில் வேலை செய்துவிட்டு வருகிறேன்’

‘சரி… சரி.. வந்து இவனுடைய சிலுவையைச் சுமந்து கொண்டு வா…’

‘ஐயா… என்னை விட்டுவிடுங்கள். வேறு யாரையாவது அழையுங்கள்’ சீமோன் நழுவப் பார்த்தார். சிலுவையில் அறையப்படுபவர்கள் தான் சிலுவையைத் தூக்கிச் செல்வார்கள். தான் சிலுவையைத் தூக்கிச் சென்றால் அந்த அவமானம் தனக்கும் வருமே என்று பயந்தாரோ அல்லது தான் இயேசுவின் மறைமுக ஆதரவாளர் என்பதை படை வீரர்கள் அறிந்து கொண்டார்களோ என்ற பயமோ சீமோனை நழுவச் சொன்னது.

அவர்கள் விடவில்லை. அவரைக் கட்டாயப் படுத்தி சிலுவையைச் சுமக்க வைத்தார்கள். இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமந்தான் சீமோன் !.

கொல்கொத்தா மலை இயேசுவின் வருகைக்காகக் காத்திருந்தது. குற்றவாளிகளின் இரத்தம் சுமந்து சுமந்து அழுக்காகிக் கிடந்த கொல்கொதா மலையில் இயேசுவின் இரத்தத் துளிகள் விழுந்தன.

இயேசுவையும் சிலுவையையும் மலையுச்சியில் கொண்டுபோய் போட்டார்கள்.

இயேசுவை மட்டும் சிலுவையில் அறையாமல் அவருடன் இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்து குற்றவாளிகளோடு குற்றவாளியாக அவரை நிற்கவைக்கவேண்டும் என்று ஏற்கனவே அலுவலர்கள் முடிவு செய்திருந்தார்கள். அந்த இரண்டு குற்றவாளிகளும் கூட இப்போது கொல்கொதா மலையுச்சியில் வந்து சேர்ந்தார்கள்.

இயேசுவுக்கு திராட்சை இரசத்தில் கசப்பைக் கலந்து ஒருவன் குடிக்கக் கொடுத்தான். இயேசு அதைக் குடிக்கவில்லை.

பெரிய நீளமான ஆணிகள் தயாராய் இருந்தன.

இயேசு சிலுவையில் கிடத்தப்பட்டார். அவருடைய கைகளை இழுத்து மரத்தோடு சேர்ந்து ஆணிகளால் அறைந்தார்கள்.

பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் வீறிட்டு அலறியது. இயேசு வலியால் துடித்தார். இயேசுவின் கால்கள் இரண்டையும் சேர்த்து பாதங்களைத் துளைத்தபடி நுழைந்தது மூன்றாவது நீளமான ஆணி. சொல்லமுடியாத வலி இயேசுவைத் துடிதுடிக்க வைத்தது. தனக்கு ஆதரவாய்ப் பேச யாராவது வருவார்களா என்று இயேசுவின் கண்கள் பார்த்தன. கடைசிவரை யாரும் வரவேயில்லை.

ஒவ்வொரு கைதியையும் சிலுவையில் அறைந்த பின் சிலுவையில் அந்த கைதியில் பெயரை எழுதி வைப்பது வழக்கம். அதன் படி பிலாத்துவின் கட்டளைப்படி “யூதர்களின் அரசன்” என்னும் குறிப்பைத் தாங்கிய பலகை, சிலுவையில் இயேசுவின் தலைக்கு மேலாக அறையப்பட்டது.

பெயர்ப்பலகையைப் பார்த்த கயபா எரிச்சலடைந்தான். பிலாத்துவின் முன்னிலைக்கு விரைந்தான்.

‘அரசே.. இது சரியில்லை. ‘யூதர்களின் அரசன்’ என்று பெயர்ப்பலகையில் எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதினால் அவர் உண்மையிலேயே யூதர்களின் அரசன் என்பதை நாம் ஏற்றுக் கொள்வதாகிவிடும். ‘யூதர்களின் அரசன் நான்’ என்று எழுத வேண்டும். அப்போது தான் இவன் போலித் தீர்க்கத் தரிசி என்பது தெரியும் என்றான்’

பிலாத்து கோபத்தில் எழுந்தான். ‘நான் எழுதியது எழுதியது தான்.. நீர் போகலாம்’. பிலாத்துவின் கோபம் கயபாவை சட்டென்று பின் வாங்க வைத்தது.
பிலாத்து நம்பினானா ! இயேசு தான் உண்மையில் யூதர்களின் அரசர் என்னும் கூற்றை பிலாத்து நம்பினானா ? கேள்விகள் கயபாவைக் கலங்கடித்தன.

சிலுவை மரம் நேராக நிமிர்த்தப்பட்டது !

‘மோசே பாலைவனத்தில் வெண்கலப் பாம்பை உயர்த்தியது போல மானிடமகனும் உயர்த்தப் படவேண்டும்’ இயேசு சொல்லியிருந்த வார்த்தைகள் அவருடைய சீடர்களின் மனதுக்குள் எதிரொலித்தன.

இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் கழற்றி வைக்கப்பட்டிருந்த இயேசுவின் அங்கியை யார் சொந்தமாக்குவது என்று படைவீரர்களுக்குள்ளே தர்க்கம். அந்த அங்கி மேலிருந்து கீழ் வரை ஒரே துணியால் உருவாக்கப்பட்டிருந்தது.

‘நான் தான் மூத்த வீரன்.. எனக்குத் தான் இந்த ஆடை வேண்டும்’

‘நான் தான் இவனை அதிகமாய்த் துன்புறுத்தினேன். எனக்குத் தான் இந்த ஆடை !’

‘இவனை ஆணியில் அறைந்தது நான் தான்… எனக்குத் தான் இந்த ஆடை வேண்டும்’ அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள்.

‘இந்தச் சண்டை முடியப்போவதில்லை. ஒன்று செய்யலாம். நம்முடைய பெயர்களையெல்லாம் எழுதிச் சீட்டுப் போடலாம். யாருடைய பெயர் வருகிறதோ, அவருக்கே இந்த ஆடை… என்ன சொல்கிறீர்கள் ?’ ஒருவர் கேட்க, மற்றவர்கள் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்கள்.

‘என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிந்து கொண்டார்கள். என் உடை மீது சீட்டுப் போட்டார்கள்’ என்று மறைநூலில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் உள்ளத்துக்குள் எதிரொலித்தன.

இயேசுவின் வலப்புறமும் இடப்புறமும் இரண்டு கள்வர்கள் சிலுவையில் அறையப்பட்டு தொங்கினார்கள்.

‘திருக்கோயிலை இடித்து மூன்றாவது நாளில் கட்டுவோனே. இந்த மூன்று ஆணிகளின் கட்டுகளிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்’

‘பிறரை விடுவித்த மகானே… உன்னை விடுவிக்கத் தெரியவில்லையா ?’

‘இப்போது நீ சிலுவையிலிருந்து இறங்கி வா. உன்னை நாங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்கிறோம்’

சிலுவைக்குக் கீழே இருந்தவர்கள் இயேசுவை நோக்கி இகழ்ந்தார்கள்.

‘தந்தையே இவர்களை மன்னியும். இவர்கள் தாங்கள் செய்வது என்னவென்பதை அறியாமல் செய்கிறார்கள்’ இயேசுவின் உதடுகள் மன்னிப்பை வேண்டின. கண்கள் சுற்றுமுற்றும் பார்த்தன. எங்கே என் நம்பிக்கைக்குரிய சீடர்கள் ?

அதுயார் ? யோவானா ? அருகில் யாரது ?  என்னுடைய திருச்சபையைக் கட்டுவேன் என்று நான் உறுதியளித்திருந்த பேதுருவா ? எங்கே என் மற்ற சீடர்கள் ? மற்ற ஒன்பது நண்பர்கள் எங்கே ? ஒரு நண்பனுக்காக உயிர்கொடுக்க வேண்டாம் . அவனுடைய மரணப் பயணத்தில் கூட அருகிருக்கப் பயந்து ஓடி விட்டார்களா ? இயேசுவின் பார்வையில் நிராகரிப்பின் வலி.

இயேசுவின் இடப்பக்கத்தில் அறையப்பட்டிருந்த கள்ளன் இயேசுவை நோக்கி தலையைத் திருப்பினான்

‘ இயேசுவே… நீர் கடவுளின் மகனானால் நீரும் விடுதலையாகி என்னையும் விடுவியும்’ என்றான்.

அப்போது அவருடைய வலப்பக்கத்தில் அறையப்பட்டிருந்தவனோ
‘நீ இன்னும் திருந்தவில்லையா ? நாம் குற்றம் செய்தோம் தண்டனை அனுபவிக்கிறோம். இவர் குற்றமே செய்யாதவர். நாம் தண்டனை பெறுவது நியாயம். ஆனால் இவர் கடவுளின் மகன். தண்டனைக்குரியவரல்ல. எனவே நீ இயேசுவை இகழாதே.’ என்று கூறிவிட்டு இயேசுவின் முகத்தைப் பார்த்து

‘இயேசுவே என் தவறுகளை மன்னித்து என்னையும் உமது விண்ணரசில் சேர்த்துக் கொள்ளும்’ என்றான்.

இயேசு அவனிடம்,’ நீ என்னுடன் வான்வீட்டில் நிச்சயம் இருப்பாய்’ என்றார்.
விடைபெறுகிறார் இயேசு
_________________

jesus cross

நண்பகல்.

திடீரென நாடெங்கும் இருள் பரவியது. வெயில் கொளுத்த வேண்டிய நண்பகலில் நாடே இருண்டதைக் கண்ட மக்களும், தலைவர்களும் பதட்டமடைந்தார்கள். அந்த இருள் மூன்று மணி வரை நீடித்தது.

சிலுவை மரத்துக்குக் கீழே இயேசுவின் தாயார் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் தன் அன்பு மகனை உயிருக்குள் இரத்தம் வழிய உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவளுடைய உடலும் உள்ளமும் ஒட்டுமொத்தமாய் சோர்ந்துபோய் வலியால் துடித்துக் கொண்டிருந்தது.

சிலுவையின் கீழே மூன்று மரியாக்கள் நின்றிருந்தார்கள். ஒன்று அன்னை மரியாள். இன்னொருவர் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாய் மரியாள் இன்னொருவர் மகதலா மரியாள். மகதலா மரியாள் விபச்சாரத் தொழில் புரிந்து வந்தவள். அவளிடமிருந்து இயேசு ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். அதன்பின் அவள் அவருடைய சீடரானவர்.

இயேசு தன் தாயைப் பார்த்தார். அருகிலே நின்றிருந்த தன் சீடர் யோவானைப் பார்த்தார். இயேசுவிடம் மிகவும் நெருக்கமான அன்புடையவர் யோவான். அவர்தான் அன்னையை இங்கே வரவழைத்திருக்க வேண்டும்.

இயேசு தன் தாயை நோக்கி

‘அம்மா….’ என்று அழைத்தார்.

தாய் கதறினாள். அவளால் ஏதும் பேச முடியவில்லை. மரணத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் மகனை ஏறிட்டுப் பார்க்கவும் அவளால் முடியவில்லை.

‘அம்மா… அதோ உன் மகன்’ என்று சீடரை நோக்கிக் கூறினார்.

சீடரை நோக்கி
‘இதோ உன் தாய்…’ என்றார். சீடர் கண்ணீருடன் தலையாட்டினார். அன்னையின் கரங்களைப் பற்றினார். அந்த வினாடி முதல் அன்னையை அந்த சீடர் தன்னுடைய சொந்த அன்னையாகப் பார்த்தார் என்பதை அந்த பற்றிய கரங்கள் பறை சாற்றின. இயேசுவின் இந்த தாய்ப்பாசம் சீடரை பெரும் வியப்புக்குள்ளாழ்த்தியது. எப்போதுமே எதற்குமே கவலைப்படாத் இயேசு அன்னையைக் குறித்துக் கவலையடைகிறாரா ? தாய்ப்பாசத்தை தரணிக்கு உணர்த்துகிறாரா ?

‘தாகமாய் இருக்கிறேன்’ இயேசுவின் குரல் சிலுவை உச்சியிலிருந்து மெல்லியதாய் விழுந்தது.

படைவீரர்கள் உடனே கடற்காளானைக் காடியிலே தோய்த்து ஒரு ஈட்டியில் குத்தி அவரிடம் நீட்டினார்கள். அவர் அதைக் குடிக்கவில்லை. அவருடைய ‘தாகமாயிருக்கிறேன்’ என்னும் வார்த்தையின் பொருளை உணர்ந்து கொள்ளுமளவுக்கு படைவீரர்கள் பக்குவமடைந்திருக்கவில்லை.

காலை ஒன்பது மணியளவில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிற்பகல் மூன்று மணிவரை சிலுவையில் தொங்கினார்.

மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் கத்தினார்
‘எலோயி.. எலோயி… லெமா சபக்தானி…’. என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் ? என்பதே அதன் பொருள். சிலுவையின் கீழ் அதைக் கேட்டுக் கொண்டிருந்த இயேசுவின் சில ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டார்கள்.

படைவீரர்களோ சிரித்தார்கள்.

‘ஏய்.. இவன் இறைவாக்கினர் எலியாவைக் கூப்பிடுகிறானா ?’

‘ஒருவேளை எலியா வந்து இவரைக் காப்பாற்றுவாரோ ?’

‘பார்ப்போம்… ஒருவேளை ஏதாவது சுவாரஸ்யம் நிகழலாம்…’

அன்னாவும் கயபாவின் காதுகளிலும் இந்த வார்த்தைகள் விழுந்தன. கயபா அன்னாவை நோக்கிச் சிரித்தான்.

‘பாருங்கள்… இவன் தான் கடவுளின் மகன் என்றான், பிறகு இவனே கடவுள் என்றான். இப்போது கடவுளே என்னை ஏன் கை விட்டீர் என்கிறான் !… இவன் ஒரு பைத்தியக்காரன் தான்’ கயபா சத்தமாய்ச் சிரித்தான். சரியான தீர்ப்பைத் தான் வழங்கியிருக்கிறோம் என்று அவனுடைய மனசு அவனை சமாதானப் படுத்தியது.

அன்னா கயபாவைப் பார்த்தான்.

‘கயபா… உனக்கு மூளை மழுங்கிவிட்டதா ? மறை நூல் சொல்லியிருக்கும் தீர்க்கத் தரிசனங்கள் நிறைவேறுகின்றன. நீ சிரிக்கிறாயே ? ‘ அன்னாவின் குரல் நடுங்கியது.

‘என்ன சொல்கிறீர்கள் ?’ கயபாவின் சிரிப்பு சட்டென்று காணாமல் போயிருக்க குரலில் பதட்டமிருந்தது.

‘உன்னதப்பாடல் இருபத்து இரண்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என் இறைவா என் இறைவா என்ன் என்னைக் கை நெகிழ்ந்தீர். அந்த தீர்க்கத் தரிசனம் இன்று இங்கே நிறைவேறியிருக்கிறது போல் தெரிகிறது.. அப்படியானால்…’ அன்னா இழுத்தார்

‘தலைவரே… நீங்கள்…. ‘

‘நான் வீட்டுக்குப் போகிறேன்… ‘ அன்னா நிற்காமல் விரைந்தார். கயபா குழப்பத்தில் விழுந்தான்.

‘தந்தையே… உமது கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்’ இயேசு உரத்த குரலில் மீண்டும் கத்தினார். அதைச் சொன்னதும் இயேசுவின் தலை சாய்ந்தது.

இயேசு உயிர்விட்டார் !

முப்பது ஆண்டுகாலம் வெளியுலகுக்குத் தெரியாத தனி வாழ்க்கை நடத்திய இயேசு, தன்னுடைய மூன்று ஆண்டு புயல் போன்ற பணிகளால் இலட்சக் கணக்கான மக்களை தன் பால் ஈர்த்து மக்களுக்கு வாழ்வின் தத்துவங்களையும், போலித்தனமான வாழ்க்கையில் அடையாளங்களையும் விளக்கினார். இன்று நல்லது செய்தார் என்ற காரணத்துக்காக சிலுவையில் உயிர்விடுகிறார்.

இயேசுவின் எதிர்ப்பாளர்கள் இதை வெற்றி என்று ஆர்ப்பரித்தார்கள், இயேசுவின் ஆதரவாளர்களுக்குத் தான் இது தான் வெற்றி என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அதே நேரத்தில் எருசலேம் தேவாலயத்தின் திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. அங்கே கூடியிருந்த குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

பாறைகள் வெடித்துச் சிதறின. பெரும் மலைகள் பிளந்தன. பல கல்லறைகள் திறந்தன. இறந்த பலருடைய உடல்கள் உயிருடன் எழும்பின !

கொல்கொத்தா மலையில் சிலுவையருகே நின்றிருந்த படைத்தலைவர்களும் படைவீரர்களும் நடு நடுங்கினார்கள். மலையே கவிழ்ந்து விடுவதுபோல ஆடியது.

இயேசுவைப் பழித்தவர்கள் எல்லாம்
‘இ…இவர் உண்மையிலேயே இறைவாக்கினர் தான்’

‘ஐயோ இவர் கடவுளின் மகனே தான்….’  என்று நடுக்கத்துடன் அலறினார்கள்.

மரணம் மரித்துப் போனது !
__________________
இயேசு வாழ்ந்த காலத்தில் அவரை இரகசியமாய்ப் பின்பற்றிய சீடர்கள் பலர் இருந்தார்கள். பொதுமக்களிடையே தங்களின் மேல் ஒரு முத்திரை விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவும், உறவினர்களிடையே பிரிவு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதை வெளியே யாருக்கும் சொன்னதில்லை.

அவர்களில் ஒருவர் யோசேப்பு. அவர் அரிமத்தியா என்னும் ஊரைச் சேர்ந்தவர். மிகப்பெர்¢ய செல்வந்தர். அவர், தான் இயேசுவின் சீடர் என்பதை வெளிப்படையாகச் சொன்னதில்லை. ஆனால் இயேசுவின் போதனைகள்¢ன் மீதும், மறுவாழ்வு, விண்ணகம் பற்றிய கொள்கைகளின் மீதும் நல்ல பிடிப்பு வைத்திருந்தார். இயேசு இறந்துவிட்டார் என்னும் செய்தி அவருடைய தயக்கங்களையெல்லாம் உடைத்து விட்டது. அவருடன் நிக்கதேம் என்னும் சீடரும் இருந்தார். அவரும் இயேசுவை இரகசியமாய்ப் பின்பற்றியவர். இருவரும் பிலாத்துவின் தலைமைச் சங்கத்தின் உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள் தான். இவர்கள் இருவரும் இயேசுவின் சீடர்கள் என்பதை பிலாத்து அறிந்திருந்தான்.

அவர்கள் பிலாத்துவிடம் சென்று இயேசுவின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கேட்டார்கள்.

இயேசு உயிருடன்  வாழ்ந்த காலத்தில் அவருடைய சீடர் என்பதை வெளியே சொல்ல தயங்கியவர்கள். இப்போது இயேசுவின் மரணம் அறிந்தபின் தைரியமாக முன்வருகிறார்கள். இயேசுவுடன் இருந்த சீடர்கள் தலைமறைவாகவும், உயிருக்குப் பயந்தும் ஒளிந்து கொண்டிருக்கையில் இரண்டு இரகசியச் சீடர்கள் வெளிச்சத்துக்கு வந்தார்கள்.

பிலாத்து வீரனை அழைத்தான்.

‘இயேசு இறந்து விட்டாரா?’

‘இறந்து விட்டார் மன்னா. அவருடைய விலாவை ஈட்டியால் குத்திப் பார்த்து அவர் இறந்ததை உறுதிப்படுத்தினோம். அவர் ஏற்கனவே இறந்து விட்டிருந்ததால் அவருடைய கால்களை முறிக்கவில்லை’ வீரன் சொன்னான்.

‘அவருடைய எலும்புகளில் ஒன்று கூட உடைபடாது’ என்னும் மறை நூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. ஆனால் யாரும் அதை அறியவில்லை.

‘சரி… நீங்கள் போய் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து எடுத்துப் போய் அடக்கம் செய்யுங்கள்’ அனுமதி கொடுத்தான் பிலாத்து.

அவர்கள் இருவரும் சென்று சிலுவையில் ஆணிகளில் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவைப் பார்த்தார்கள். அவர்கள் கண்கள் கலங்கின. எத்தனையோ அரும் பெரும் விளக்கங்களைச் சொன்னவர். எத்தனையோ அற்புதங்களின் சொந்தக்காரர். அவருடைய முடிவு இப்படியாகிவிட்டதே என்று அவர்கள் கலங்கினார்கள்.

சிலுவையைத் தரையில் சாய்த்து, ஆணிகளைப் பிடுங்கி இயேசுவின் உடலை அவர்கள் தனியே எடுத்தார்கள். கைகளும் கால்களும் ஆணிக் காயங்களினால் பிளந்திருந்தன. விலாவில் ஆழமாய் ஓர் ஈட்டிக் காயம்.

அன்னை மரியாள் இயேசுவின் உடலை மடியில் ஏந்தினாள். தொழுவத்தில் பிறப்பு. வசதிகளில்லாமல் மடியிலும், ஆவின் கொட்டிலிலும் துயின்ற மகன். இப்போது மரணம். இப்போதும் சொந்த ஊரில் இல்லை. சொந்த வீட்டில் இல்லை. ஏதோ ஒரு மலையில், ஒரு கொடுமையான சாவுக்குள் சென்று இறந்து போய் கிடக்கிறான் மகன். அன்னையின் கண்களில் அழுகை கூட ஆவியாகியிருந்தது.

அவர்கள் இயேசுவின் உடலை மெல்லிய துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். சுமார் முப்பது கிலோ வெள்ளைப்போளமும், சந்தனத் தூளும் அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள். அவற்றையும் இயேசுவின் உடலோடு வைத்துக் கட்டினார்கள்.

கல்வாரி மலையருகே ஒரு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு கல்லறை இருந்தது. அதை யோசேப்பு தனக்காக உருவாக்கியிருந்தார். அந்தக் காலத்தில் பழைய கல்லறைகளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் வழக்கமும் இருந்தது. ஆனால் இந்தக் கல்லறை அப்படிப்பட்டதல்ல. புத்தம் புதிதாக செல்வந்தர் யோசேப்பு தமக்காய் உருவாக்கி வைத்திருந்த கல்லறை.

அந்தக் கல்லறையில் இயேசு அடக்கம் செய்யப்பட்டார். கல்லறை வாயில் ஒரு மிகப்பெரிய கல்லினால் அடைக்கப்பட்டது.

இயேசுவின் மரணம் சீடர்களுக்கு அதிர்ச்சியாகவும், கலக்கமாகவும் இருந்த அதே நேரத்தில் மூப்பர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும், குருக்களுக்கும் கொண்டாட்டத்தின் நாளாக இருந்தது.

‘ஒருவழியாக ஒரு மிகப்பெரிய தொல்லை இன்றுடன் தீர்ந்தது. இனிமேல் பிரச்சினையில்லை. நாம் இழந்துபோன பெயரும் புகழும் இனிமேல் நமக்கு திரும்பவும் கிடைக்கும்’

‘அவன் பின்னால் சென்ற மனிதர்களையும் நாம் சும்மா விடக்கூடாது. அவர்களையும் நாம் ஏதாவது செய்ய வேண்டும்.’

‘அதெல்லாம் எதற்கு ? அவன் செத்ததும் அந்த கூட்டம் காணாமலேயே போய்விட்டது. இனிமேல் அந்தக் கவலை நமக்கு வேண்டாம். அவனுடைய சீடர்கள் சாதாரணமானவர்கள், அவர்களுக்கு ஆற்றலோ, திறமைகளோ எதுவும் கிடையாது. எனவே அவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இனிமேல் தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். மீன் பிடிக்கவோ, வரி வசூலிக்கவோ.’ சிரிப்பொலிகள் அலைந்தன.

‘அது சரிதான்…’

‘நம்முடைய திட்டம் கனகட்சிதம்… அதுவும் பரபாவையா, இயேசுவையா யாரை விடுதலை செய்யவேண்டும் என்று மன்னன் கேட்டபோது ஒருவினாடி பயந்துவிட்டேன். எங்கே மக்கள் இயேசுவைக் கேட்பார்களோ என்று. நல்லவேளை நாம் கூட்டத்தைச் சரியாகக் கட்டுப்படுத்திவிட்டோம்’..

அவர்கள் ஆனந்தமாய் உரையாடிக் கொண்டிருந்தார்கள். தங்கள் முதுகை அழுத்திக் கொண்டிருந்த தேவையில்லாத ஒரு பாரம் இறங்கிப் போன நிம்மதி அவர்களிடம் தெரிந்தது.

‘ஏய்… எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது..’

‘என்ன ?’

‘இயேசு உயிருடன் இருந்தபோது, மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவேன் என்று சொல்லியிருந்ததாய் ஞாபகம்’

‘அவனாவது உயிர்த்தெழுவதாவது… அதைப்பற்றியெல்லாம் ஏன் கவலைப்படுகிறாய் ? அதெல்லாம் நடக்காது.’

‘நடக்காது என்பது தான் என் நம்பிக்கையும்… ஆனால் ‘

‘என்ன ஆனால்..’

‘ஒருவேளை அந்த சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டு இயேசு உயிர்த்தார் என்று கதை கட்டலாம் அல்லவா ?’

அவன் சொன்னதும் எல்லோரும் நிமிர்ந்தார்கள்.

‘அப்படி நடந்தால். அது மிகப்பெரிய எழுச்சியை மக்களிடையே உண்டாக்கிவிடும். இயேசு உண்மையிலேயே கடவுள் தான் என்று மக்கள் கூட்டம் நம்பி விடவும் வாய்ப்பிருக்கிறது இல்லையா ?’

‘அட… ஆமாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் நாம் உடனே மன்னனிடம் போய், அந்தக் கல்லறையைக் காவல் காக்க ஏற்பாடு செய்யவேண்டும். என்ன சொல்கிறீர்கள் ?’

‘கண்டிப்பாக… ‘

அவர்கள் நேராக பிலாத்துவிடம் ஓடினார்கள்.

‘மன்னா… இயேசுவைக் கொன்றது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால்…ஒரு விண்ணப்பம்’

‘என்ன விண்ணப்பம்’ பிலாத்துவின் குரலில் எரிச்சல் தெரிந்தது. இயேசு குற்றமில்லாதவர் என்றும் இந்தக் கூட்டத்தினரின் பொறாமை தான் அவரைக் கொன்றது என்றும் பிலாத்து அறிந்திருந்தான். எனவே அந்தக் கூட்டத்தினரைப் பார்ப்பதையே வெறுத்தான். முதலில் இயேசுவைக் கொல்லவேண்டும் என்று உயிரை வாங்கினார்கள், பின் யூதர்களின் அரசன் என்ற பெயர்ப் பலகைக்கு பிரச்சினை செய்தார்கள். இப்போது என்ன பிரச்சினையோடு வந்திருக்கிறார்கள் ?

‘மன்னா.. அந்த இயேசு உயிரோடு இருந்தபோது இறந்தாலும் மூன்றாவது நாளில் உயிர்ப்பேன் என்று சொல்லியிருந்தான்’

‘சரி.. அதற்கென்ன இப்போது ? அவர் உயிர்த்தால் பார்த்துக் கொள்ளலாம்’

‘அதில்லை மன்னா. அவனுடைய சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்து எங்கேயாவது போட்டு விட்டு அவன் உயிர்த்துவ்¢ட்டான் என்று கதை கட்டிவிடலாம் அல்லவா’

‘நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை’ பிலாத்து கேட்டான்.

‘மன்னா.. இந்த மூன்று நாட்களும் அந்தக் கல்லறையைக் காவல் காக்கவேண்டும். மூன்று நாளில் உயிர்த்தெழுவேன் என்பது தான் அவனுடைய பேச்சு. எனவே மூன்று நாட்கள் மட்டும் காவலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே எங்கள் விண்ணப்பம்’

‘உங்களிடமே வீரர்கள் உண்டே. அவர்களைக் கொண்டு நீங்கள் காவல் புரியுங்கள். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்’ பிலாத்து எரிச்சல் குறையாமல் பேசினான்.

‘உங்கள் அனுமதிக்கு நன்றி அரசே’ கூட்டத்தினர் கலைந்தனர்.

உடனே சென்று படைவீரர்களை ஏற்பாடு செய்தனர். படைவீரர்கள் இயேசுவின் கல்லறைக்குச் சென்று அவருடைய உடல் கல்லறையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தினார்கள். பின் கல்லறையை மூடி அதை சங்கிலிகளால் பொருத்தி சீல்வைத்தனர். இரண்டு காவலர்கள் அந்தக் கல்லறை வாசலில் கண்விழித்துக் காவல் இருந்தார்கள்.

மூன்றாவது நாள் காலை !

திடீரென நகரில் நிலநடுக்கம் ஒன்று உருவானது. எங்கும் நிலம் அதிர்ந்தது. கல்லறையைக் காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்களும் பயந்து போனார்கள். அந்த மலையே குலுங்குவது போலானது.

திடீரென வெள்ளுடை அணிந்த இரண்டு வானதூதர்கள் விண்ணிலிருந்து இறங்கி வந்து கல்லறையின் அருகே நின்றார்கள். காவலர்கள் செத்தவர்களைப் போலானார்கள்.

சட்டென்று கல்லறையைக் கட்டிவைத்திருந்த சங்கிலிகள் உடைந்து தெறித்தன. கல்லறையை மூடி வைத்திருந்த கல் உருண்டோடியது.

இயேசு உயிருடன் வெளியே வந்தார் !

காவலர்கள் வெலவெலத்துப் போய் கிடைத்த திசையில் ஓடி மறைந்தார்கள்.
*

சேவியர்

இயேசு என்றொரு மனிதர் இருந்தார் நூலில் இருந்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.