மடியில் நெருப்பைக் கட்டி
அலைவதாக
கிராமத்துத் தாய்
வலியுடன் சொன்னாள்
வயது வந்த மகளைப்பற்றி
விறகடுப்பில் ஊதி ஊதி
வியர்க்கும் முகத்தோடும்
எரியும் விழிகளோடும்
தங்கை சிரித்தாள்.
எங்கோ
ஸ்டவ் வெடித்து
ஏதோ ஓர் இளம் பெண்
இன்னும் இறந்து கொண்டிருக்கிறாள்.
நாங்கள் கனல்கள்
நீரையும் எரிக்கும் அனல்கள்
என்று
பெண்ணியக் கவிதைகள்
சுட்டுக் கொண்டிருக்கின்றன.
நங்கையர்
நெருப்பாக இருக்கிறார்கள்.
நெருப்புக்கு
நெருக்கமாகவும்.