இயேசு சொன்ன உவமைகள் 10 : இரக்கமற்ற பணியாளர்

இரங்கிய தலைவனும், இரங்காத பணியாளனும்.

Image result for unmerciful servant parable

மத்தேயு 18:21.35

பேதுரு இயேசுவை அணுகி,

“ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து⁕ கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம்⁕ கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.

அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.”


“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்” என இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பேதுரு இந்தக் கேள்வியைக் கேட்டார்.

“ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார். ”

பேதுரு, யூத சட்டங்களின் படி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். பழைய ஏற்பாட்டில், “காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்” என கடவுள் கூறியிருந்தார். ஏழு என்பது பழைய ஏற்பாட்டில் முழுமை எனும் பொருளைக் குறிப்பதாய் இருந்தது.

ஏழு முறை நீர் தெளித்து தொழுநோயால் ஏற்பட்ட தீட்டை அகற்றுவது, ஏழு நாள் கூடாரத்துக்கு வெளியே அமர்ந்து தீட்டைக் கழிப்பது, குரு எண்ணையை ஏழு முறை ஆண்டவர் முன் தெளிப்பது, ஏழு நாள் புளிப்பற்ற அப்பம் உண்பது, ஏழு நாட்கள் கூடார விழா தொடர்வது என எல்லாவற்றிலும் ஏழு என்பது பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த யூத பின்னணியிலிருந்து வந்த பேதுரு மன்னிப்பையும் அந்தச் சட்டத்துக்குள் அடக்கிவிட நினைத்து அந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

இந்த கேள்வியில் இரண்டு சிந்தனைகள் இருக்கின்றன.

1. தனக்கு எதிராகப் பாவம் செய்து வரும் சகோதரனை மன்னிக்க வேண்டும் எனும் பேதுருவின் மனம்.

2. தன் சகோதரன் பாவம் செய்கிறான் எனும் தொனியில், தான் பாவம் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தும் சுயநீதிச் சிந்தனை.

தனக்கு எதிராய்ப் பாவம் செய்து வரும் சகோதரனை மன்னிப்பது அழகான செயல். ஆனால் தன்னிடம் பாவம் இல்லை, அடுத்த சகோதரன் தான் தனக்கு எதிராகப் பாவம் செய்கிறான் என்று சொல்வது தவறான பார்வை. “நம்மிடம் பாவம் இல்லை என்போமானால், நாம் பொய்யர்கள்” என்கிறது விவிலியம்.

இயேசு இந்த கேள்விக்கு அழகான ஒரு பதிலாக இந்த உவமையைச் சொல்கிறார். இந்த உவமையில் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலாத பணியாளனை அரசன் மன்னிக்கிறார். ஆனால் அந்த பணியாளரோ ஒரு சின்ன தொகைக்காக இன்னொரு பணியாளரை கடுமையாகத் தண்டிக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் மன்னன், மன்னிப்பை வாபஸ் வாங்கிவிட்டு, இரக்கமற்ற பணியாளரைத் தண்டிக்கிறார். “இரக்கமுடையோர் இரக்கம் பெறுவர்” எனும் இயேசுவின் போதனையைப் போல.

உலக பொருளாதார ஒப்பீட்டின் படி அந்த அரசனுக்கு பணியாளன் கொடுக்க வேண்டிய தொகை பத்தாயிரம் தாலந்துகள். இன்றைய மதிப்பில் சுமார் நூறு கோடி ரூபாய் என வைத்துக் கொள்ளலாம். அந்த பணியாளனின் பணியாளன் கொடுக்கவேண்டிய தொகையோ நூறு தெனாரியம். வெறும் 1200 ரூபாய்கள் மட்டுமே. அன்றைய தினக் கூலியின் அடிப்படையில், முதல் மனிதன் தனது கடனை அடைக்க வேண்டுமெனில் 1,50,000 இலட்சம் ஆண்டுகள் உழைக்க வேண்டும். இரண்டாவது நபரோ 4 மாதங்கள் உழைத்தால் போதும். இதுவே அந்த இரண்டு கடன்களுக்கும் இடையேயான ஒப்பீடு.

தன்னுடைய நூறு கோடிரூபாய் கடன்கள் மன்னிக்கப்பட்டது. ஆனால் அந்த மனிதன் ஒரு 1200 ரூபாய் கடனை மன்னிக்க மனம் இல்லாமல் இருக்கிறான்.

இயேசு நமது பாவங்களை மன்னிக்க மனிதனாக மண்ணிற்கு வந்து, பாவமில்லாமல் வாழ்ந்து இறுதியில் தன்னையே பலியாகக் கொடுத்தார். அதன்மூலம் மனிதனின் பாவக் கடன்களை அவர் தீர்த்தார். அந்த அன்பும், அந்த பலியும் மிக உயர்ந்தவை. விலைமதிப்பற்றவை. அந்த அரசன் அளித்த மன்னிப்பு போல. அந்த அரசனிடம் கடன்பட்டவர்கள் நாம். நம்மால் எந்தக் காலத்திலும் தீர்க்கமுடியாத தொகை அது. அந்த தொகையை தனது இரத்தத்தினால் அழித்துவிட்டார் இறைவன்.

நாமோ, நம்மிடம் சக மனிதர்கள் கொண்டிருக்கும் சின்னச் சின்ன கடன்களை மன்னிக்க மனம் இல்லாமல் இருக்கிறோம். இது மிகப்பெரிய பாவம். இதையே இறைவன் இந்த உவமையில் விளக்குகிறார்.

நாம் விண்ணகம் செல்லவேண்டுமெனில் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமெனில் நாம் மற்றவர்களை மன்னித்தாக வேண்டும். நாம் பிறரை மன்னிக்காவிடில், இயேசு நம்மை மன்னிப்பதில்லை. நாம் மன்னிக்கப் படாவிடில் விண்ணரசில் நுழைய முடிவதில்லை. இதுவே இந்த உவமை சொல்லும் சேதி.

மூன்று விஷயங்களை சிந்திப்போம்.

Image result for unmerciful servant parable1. அரசன் மன்னித்த‌ கடனின் அளவு எவ்வளவு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், நாம் மன்னிக்க வேண்டிய செயல்கள் எவ்வளவு சிறியவை என்பது புரியும். எனவே நமது முதல் தேவை இறைவன் நமக்காக செய்த தியாகங்களை, மன்னிப்பின் விலையை புரிந்து கொள்வது. அந்த மன்னிப்பின் விஸ்வரூபம் தெரியும் போது மற்ற அனைத்துமே சிறியதாகிப் போய்விடும்.

Image result for unmerciful servant parable2. அரசனின் அன்பைப் புரிந்து கொள்வோம். அரசன் தன்னிடம் வேண்டிக்கொள்ளும் பணியாளனை மன்னிக்கிறார். அதுவும் மிக மிகப்பெரிய தொகை. அதில் மன்னனுடைய அன்பின் விஸ்வரூபம் தெரிகிறது. அந்த அன்பைப் புரிந்து கொண்டால் தான் அடுத்தவர்களிடம் நாம் அன்பை பகிர முடியும். இரண்டாவது வேலைக்காரன் தன்னிடம் கெஞ்சியவனிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை. “பரவாயில்லை, பிறகு கொடுத்துவிடு” என்று சொல்கின்ற மனித சிந்தனை கூட அவனிடம் எழவில்லை.

Image result for unmerciful servant parable3. மன்னிப்பை நிராகரித்தால் முடிவில்லா அழிவு வந்து சேரும் என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை. தான் மன்னிப்பை நிராகரித்தால் தன்னுடைய அரசரும் தனது மன்னிப்பை நிராகரிப்பார். தன்னை அழிவில் தள்ளுவார் என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. அவனுடைய சுயநலம் அவனுடைய சிந்தனையை அழித்தது. “எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் மன்னிப்பது போல” என போதிக்கக் கற்றுத் தந்தவர் இயேசு. மன்னிப்பை நிராகரித்தால், வாழ்க்கை உங்களை நிராகரிக்கும்.

மன்னிப்பு என்பது சாய்ஸ் அல்ல, அது ஒரு கட்டளை. மீட்பில் நுழைய விரும்பும் அனைவருக்குமான கட்டாயக் கட்டளை அது. மன்னிப்பை நிராகரிக்கும் மனிதர்களுக்கு மீட்பின் பயணத்தில் இடமில்லை. “எழுபது தடவை ஏழுமுறை” என்பது முடிவில்லா மன்னிப்பைப் போதிக்கிறது. நமது வாழ்க்கையில் நம்மை சொற்களாலோ, செயல்களாலோ, பொருளாதாரத்தாலோ காயப்படுத்திய நபர்களை நாம் முழுமையாய் மன்னிக்க வேண்டும்.

மன்னிப்பு இயல்பாக வருவதில்லை. அது இறைவனின் மீதான அன்பினால் மட்டுமே வரமுடியும். தனது கணவர் ஸ்டெயின்ஸையும், இரண்டு பிள்ளைகளையும் எரித்துக் கொன்றவர்களை அவருடைய மனைவியான கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் மன்னித்தார். அதற்குக் காரணம் அவர் இயேசுவின் அன்பை புரிந்து கொண்டது தான்.

நாமும் இயேசுவின் அன்பைப் புரிந்து கொள்வோம். மன்னிப்பை எல்லோருக்கும் வழங்குவோம். நாம் தப்பு செய்யாத சூழல்களிலும் மன்னிப்பை வழங்க தயங்காதிருப்போம்.

கணக்கு பார்த்துக் கொடுப்பது தண்டனை
கணக்கு பார்க்காமலேயே கொடுப்பதே மன்னிப்பு.

மன்னிக்கத் தயங்கும் ஒவ்வொரு கணமும், இயேசு மன்னித்த நமது பாவங்களின் பட்டியலை நினைத்துப் பார்ப்போம். மன்னிக்கும் மனம் நமக்கு வாய்க்கும்.

*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.