இயேசு சொன்ன உவமைகள் 14 : விருந்துக்கான அழைப்பு

Image result for the great feast parable

லூக்கா 14 : 15..24

இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்றார். இயேசு அவரிடம் கூறியது:

“ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ‘வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது’ என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்.

முதலில் ஒருவர், ‘வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார். ‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார் வேறொருவர். ‘எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது’ என்றார் மற்றொருவர்.

பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், ‘நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்’, என்றார். பின்பு பணியாளர், ‘தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது’ என்றார்.

தலைவர் தம் பணியாளரை நோக்கி, ‘நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்’ என்றார்.”

கதையின் பின்னணி இது தான் :

இயேசுவை ஒருவர் விருந்துக்கு அழைக்கிறார். அங்கே எல்லோரும் முதன்மை இடங்களுக்குப் போட்டி போடுகிறார்கள். இயேசு அவர்களிடம், எப்போதும் கடைசி இடங்களையே தேர்ந்து கொள்ளுங்கள். தாழ்மையை விரும்புவதே மேன்மையின் முதல்படி என்கிறார். பின் விருந்து ஏற்பாடு செய்திருந்தவரிடம், விருந்துக்கு அழைக்கும்போது ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டோர் ஆகியோரை அழையுங்கள். அப்போதுதான் அவர்கள் உமக்கு கைமாறு செய்ய மாட்டார்கள். கடவுள் உம்மை ஆசீர்வதிப்பார் என்கிறார்.

இந்த சூழலில் தான் பந்தியிலிருந்த ஒருவர் இந்த வாக்கியத்தைச் சொல்கிறார்.

“இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்”. மரணத்துக்குப் பிந்தைய வாழ்வைப்பற்றியும், அந்த மறுவுலக விருந்தைப் பற்றியும் யூதர்களும், ஆபிரகாமின் வழித்தோன்றல்களும் அறிந்திருந்தனர். எனவே தான் தாங்கள் ஏற்கனவே அழைக்கப்பட்டவர்கள் எனும் மெல்லிய கர்வத்தில் அவர் அதைச் சொல்கிறார்.

இயேசு பதிலாகச் சொன்ன கதையோ அவர்களைக் குழப்பமும் கோபமும் அடையச் செய்திருக்க வேண்டும். இப்போது அந்தக் கதையை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்.

இந்தப் பகுதி சொல்லும் சிந்தனைகள் இவைதான்.

Image result for Jesus drawing1. இறையாட்சி விருந்துக்கு “அழைக்கப்பட்டவர்கள்” மட்டுமே கலந்து கொள்ள முடியும். அழைப்பு பெரும்பாலும் இறைவனின் பணியாளர்கள் மூலமாகவே வரும். அவர்களே நற்செய்தியை அறிவிக்கும் உரிமையாளர்கள். அழைப்பு கிடைக்காதவர்கள் இறையாட்சி விருந்தில் நுழைய முடியாது.

Image result for Jesus drawing2. அழைப்பு வந்ததும் ஏற்றுக் கொள்ளும் மக்களுக்கே நித்திய வாழ்வு கிடைக்கும். அழைப்பை நிராகரிப்பவர்களை இறைவன் நிராகரிக்கிறார். இயேசு எனும் ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டு, மாபெரும் மீட்பின் விருந்து தயாராகியிருக்கிறது. அந்த விருந்துக்கான அனுமதி இலவசமாய் தரப்படுகிறது. அந்த விருந்தை நிராகரிப்பவர்கள் இறைவனின் தியாகத்தையும், மீட்பின் திட்டத்தையும் முழுமையாய் புறக்கணிப்பவர் ஆகின்றனர்.

Image result for Jesus drawing3. ஒரு காலம் உண்டு, அதன்பின் அழைப்பு கிடைப்பதில்லை. நிராகரித்தவர்கள் விலக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. விருப்பமே முக்கியம். அரசரின் விருந்தானது பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். அழைப்பு பல வாரங்களுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும். எனினும் மக்கள் அதை உதாசீனம் செய்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் அழைப்பு கிடைப்பதில்லை.

Image result for Jesus drawing4. மூன்று விதமான மனிதர்கள் இங்கே இருக்கின்றனர். முதல் வகையினர் , “தாங்கள் ஏற்கனவே நீதிமான்கள். நிச்சயம் விண்ணகம் செல்வோம்” எனும் கர்வத்தில் இருப்பவர்கள். இரண்டாவது வகையினர், “பிற இன மக்கள்” மீட்பின் திட்டத்துக்கு வெளியே இருந்தவர்கள். அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் போது அதற்காய்த் தயாராகி வந்து விடுகின்றனர். மூன்றாவது வகையினர், “தாங்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள்” என புழுங்கிக் கிடப்பவர்கள். அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் போது அவர்களால் அதை நம்ப முடியவில்லை.

Image result for Jesus drawing5. மூன்று விதமான அழைப்புகள் விடுக்கப்படுகின்றன. முதல் குழுவினருக்கு விருந்து தயாராகிவிட்டது என “அறிவிக்கப்படுகிறது”. இரண்டாவது பிரிவினரிடம் அழைப்பு மட்டும் விடுக்கப்படவில்லை, அவர்களைக் கையோடு “கூட்டி வரும்” முயற்சி நடக்கிறது. மூன்றாவது பிரிவினரை “வற்புறுத்திக் கூட்டி வருகின்றனர்”. ஏனென்றால் அவர்கள் தங்களுக்கு மீட்பின் திட்டத்தில் பங்கில்லை என நினைத்திருப்பவர்கள். அவர்களுக்கு மீட்பைப் புரியவைக்க அதிக அழுத்தம் தேவைப்படுகிறது.

Image result for Jesus drawing6. மூன்று சாக்குப் போக்குகள் இங்கே சொல்லப்படுகின்றன. ஒருவர் வயல் வாங்கியிருக்கிறார், ஒருவர் மாடுகள் வாங்கியிருக்கிறார், இன்னொருவர் திருமணம் செய்திருக்கிறார். இது மனிதன் கடவுளின் அழைப்பை விட உலக செல்வங்களை அதிகமாய் நேசிக்கிறான் என்பதன் வெளிப்பாடு. வயலை நீண்ட கால சொத்தாகவோ, ஒரு தொழிலாகவோ கொள்ளலாம். மாடுகள் தற்காலிக இன்பங்கள், திருப்திகள் எனக் கொள்ளலாம். திருமணம் என்பது உறவுகளுக்குத் தரும் முன்னுரிமை எனலாம். அழைப்பா, உலகா எனும் கேள்வி இங்கே கேட்கப்படுகிறது. சாக்குப் போக்கு சொல்பவர்கள் உலகு என்கின்றனர்.

Image result for Jesus drawing7. இறைவனின் விருந்தொன்றும் பெரிதல்ல, தங்களுடைய வாழ்க்கை அதை விட இனிமையானது என கருதும் மக்கள் மீட்படைவதில்லை. அவர்கள் விருந்தை நிராகரிக்க சாக்குப் போக்குகளைத் தேடுகின்றனர்.

Image result for Jesus drawing8. அழைப்பு விடுக்கப்படுவதால் மட்டும் ஒருவர் மீட்பில் நுழைவதில்லை. அழைப்பை ஏற்றுக் கொண்டு பயணிக்கும் போது தான் இரட்சிப்பில் இணைய முடியும். அழைப்புக்குச் செவி கொடுக்காத எவருமே இறை விருந்தில் பங்கு கொள்வதில்லை.

Image result for Jesus drawing9. அழைப்பை நிராகரிக்கும் போது இறைவனின் சினம் நம்மீது விழும் எனும் உண்மை வெளிப்படுகிறது. அழைப்பு எளிமையானதல்ல. அது இறைமகனின் மரணத்தின் மீது உருவாக்கப்பட்டது. அதை நிராகரிப்பது என்பது இறைவனின் அதிகபட்ச அன்பை உதாசீனம் செய்வது போல. அங்கே இறைவனின் கோபம் வெளிப்படுகிறது.

Image result for Jesus drawing10. எல்லாம் ஏற்பாடு செய்தபின்பே அழைப்பு விடுக்கப்படுகிறது. அந்த விருந்துக்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் எதுவுமே இல்லை. அழைப்பை ஏற்பதும், அழைப்பின்படி நடப்பதும் மட்டுமே நாம் செய்ய வேண்டிய காரியங்கள்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம். அழைப்புக்கு செவிமடுக்கத் தயாராய் இருப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s