இயேசு சொன்ன உவமைகள் : 2 : விதைகளும், களைகளும்

Jesus Loves Xavier
( மத்தேயு 13 : 24..30 )

இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான் பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து,

‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள்.

அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ என்று கூறுவேன்’ என்றார்.”
இயேசுவின் உவமைகள் மிகவும் வசீகரமானவை. எப்போதுமே சாதாரண மக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையவை. பெரிய பெரிய தத்துவார்த்தமான குழப்பங்களை அவர் எப்போதும் சொன்னதேயில்லை. விதைகள், பயிர், பறவை, செடிகள், மேய்ப்பன் என அவருடைய உவமைகள் எப்போதுமே உழைக்கும் வர்க்கத்துக்கு பரிச்சயமான பொருட்கள் மட்டுமே. தன் உவமை எவ்வளவு அழகானது என்பதை விட எவ்வளவு வீரியமாய் மக்களிடம் செல்கிறது என்பதையே அவர் விரும்பினார். கேட்பவர்களுக்கு சட்டென புரிய வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
இந்த உவமையின் விளக்கத்தையும் இயேசுவே விளக்குகிறார். (மத்தேயு 13 : 37..43 )

““நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.” என்பது தான் அவருடைய விளக்கம்.
இந்த உவமை நமக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுத் தருகிறது.

Related image1. இறைமகன் இயேசு விதைக்கின்ற விதைகள் எப்போதுமே நல்ல விதைகள்.

களைகள் சாத்தானின் சந்ததிகள். நாட்டில் நடக்கின்ற கெட்ட விஷயங்களுக்கோ, மனிதனுடைய அசுர சுபாவங்களுக்கோ காரணம் அவர்கள் கடவுளை விட்டு விலகி சாத்தானோடு சகவாசம் வைத்துக் கொள்வது தான்.

உலகில் மனித உயிர்களைப் படைக்கும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உண்டு. சாத்தானால் உயிர்களை உருவாக்க முடியாது. ஆனால் அந்த உயிர்களுக்குள் தனது சிந்தனையை ஊற்றி வைக்க முடியும். ஏவாளைப் பொய் சொல்லி ஏமாற்றிய அதே சாத்தானின் தந்திரம் இன்றும் அமோக விளைச்சலை அறுவடை செய்கிறது.

இறைவனோடு இணைந்து பயணிக்கும் போது அவர் நட்ட விதைகள் பலனளிக்கத் தவறுவதில்லை.

Related image2. பணியாளர்கள் தூங்குகையில் சாத்தான் நுழைகிறான்.

எப்போதெல்லாம் நமது ஆன்மீக வாழ்க்கை வெளிச்சத்தை விட்டு விலகி இருட்டின் பக்கத்துக்குச் சாய்கிறதோ அப்போது இருட்டின் அரசனான சாத்தான் வலிமையடைகிறான். நமது ஆன்மீக வாழ்வின் தொய்வு, நாம் அவனுக்கு அளிக்கும் வரவேற்புக் கம்பளம்.

நமது பலவீனத்தைப் பயன்படுத்தி அவன் இறைவன் விதைத்த வயலில் நுழைகிறான். விதைகளிடையே களைகளை விதைக்கிறான். சாத்தானுடைய அத்தனை உலக ரீதியிலான ஈர்ப்புகளும் இந்தக் களைகள் எனலாம். அல்லது சாத்தானின் சிந்தனைகளை உள்வாங்கிய மனங்களை களைகள் எனலாம்.

Related image3. கதிர்களே களைகளை வேறுபடுத்துகின்றன.

பயிர் முளைத்த போதோ, மெல்ல மெல்ல வளர்ந்த போதோ பயிர்களிடையே வித்தியாசம் தெரியவில்லை. களைகளும் பயிர்களும் ஒன்றே போலவே இருந்தன. கதிர் விட்ட போது தான் களைகள் கண்டறியப்படுகின்றன.

நமது வாழ்க்கை கனிகொடுக்கிறதா ? கனிகொடுக்காத வாழ்க்கையெனில் களைகளோடு களைகளாய் களையப்படுவோம். நல்ல விதையாய் விழுந்தவர்கள், நல்ல பலனைக் கொடுக்கவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.

Related image4. களைகளைக் கண்டால் இறைவனிடம் கேட்போம்.
வயலில் களைகள் ஒன்றிரண்டு காணப்படுவது இயல்பு. அவற்றை பணியாளர்களே பிடுங்கி எறிவது தான் வழக்கம். ஆனால் இங்கே பணியாளர்கள் தலைவனிடம் சென்று முறையிடுகிறார்கள். “நல்ல விதையல்லவா விதைத்தீர்? ” என வியப்புடன் கேட்கின்றனர்.

இது வழக்கத்துக்கு மாறான செயல். இரண்டு விஷயங்கள் இங்கே நமக்குப் புலனாகின்றன. ஒன்று, வயலில் இருந்த களைகள் ஒருவேளை பயிர்களை விட அதிகமாய் இருக்கலாம். அல்லது ஏறக்குறைய சம எண்ணிக்கையில் இருக்கலாம். எது எப்படியோ, வழக்கத்துக்கு மாறான அளவில் அங்கே எக்கச்சக்கமான களைகள் இருந்தன என்பது கண்கூடு.

ஒரு திருச்சபையிலோ, இறைமக்கள் குழுவிலோ களைகள் இருப்பதைக் கண்டால் அதை உடனடியாக இறைவனிடம் தான் சொல்ல வேண்டுமே தவிர அதைக்குறித்த விமர்சனங்களில் ஈடுபடக் கூடாது என்பது ஒரு பாடம்.

Related image5. இரண்டையும் வளரவிடும் இறைவன்.

இறைவனின் பதில் அவருடைய அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது. பயிர்கள் காயமடைந்து விடக் கூடாது எனும் அவருடைய அளவிலா அன்பு அங்கே வெளிப்படுகிறது. களைகளும், பயிர்களும் இணைந்தே வளரட்டும் என்கிறார்.

அறுவடை என்பது நமது பணியல்ல, அது வான தூதர்களின் பணி. அவர்கள் அதில் எக்ஸ்பர்ட். பயிர்கள் பாதிக்கப்படாமல் களைகளை அறுத்து எறிவது அவர்களுடைய பணி.

களைகளைக் களைதலோ, அவர்களைத் தீர்ப்பிடுவதோ நமது பணியல்ல. பாரபட்சம் இல்லாமல் இறைவனின் அன்பை அறிவிப்பதும், பறைசாற்றுவதுமே நமது பணி. இறைவனின் கட்டளைப்படி வாழ்வதே நமது பணி.

Related image6. தீர்ப்பிடுவது இறைவனே

கடைசி நாள் என்று ஒன்று உண்டு. மரணத்துப் பிந்தைய வாழ்க்கை நிஜம். இதை இன்று அறிவியலும் ஒத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. நமது பிரபஞ்சமே ஒரு இரு பரிமான சிமுலேஷன் எனும் வாதங்களும் அதன் நிரூபணங்களும் பரவலாகத் துவங்கியிருக்கின்றன.

கனி கொடுப்பவர்கள் மட்டுமே இறைவனின் அன்பில், பரலோக வாழ்வில் இணைய முடியும். மற்றவர்களுக்கு நரக நெருப்பே முடிவு.

சுருக்கமாக, இந்த வாழ்வில் நமது பயணம் பயிர்களும் களைகளும் கலந்த சூழலிலேயே இருக்கும். விழிப்பாய் இருந்து இறைவனுக்கேற்ற கனிகளைக் கொடுப்பவர்களாக நாம் வாழவேண்டும். இறைவனின் குணாதிசயங்களைப் பிரதிபலிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.