இயேசு சொன்ன உவமைகள் 21 : மினா நாணயமும், பணியாளர்களும்

மினா நாணயமும், பணியாளர்களும்

Image result for ten minas parable

லூக்கா 19 : 11 முதல் 27 வரை

இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்:

“உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, ‘நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார்.

அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, ‘இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை’ என்று சொல்லித் தூது அனுப்பினர். இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.

முதலாம் பணியாளர் வந்து, ‘ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார். அதற்கு அவர் அவரிடம், ‘நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்றார்.

இரண்டாம் பணியாளர் வந்து, ‘ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்’ என்றார். அவர், ‘எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் சொன்னார்.

வேறொருவர் வந்து, ‘ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்’ என்றார்.

அதற்கு அவர் அவரிடம், ‘பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே’ என்றார்.

பின்பு அருகில் நின்றவர்களிடம், ‘அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்றார். அதற்கு அவர்கள், ‘ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே’ என்றார்கள். அவரோ, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.

மேலும் அவர், ‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக்கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்’ என்று சொன்னார்.”

Image result for ten minas parable

இயேசுவின் போதனைகள் இறையாட்சி உடனே வரப் போகிறது எனும் சிந்தனையை மக்களிடம் உருவாக்கியிருந்தது. அவர்களுடைய பார்வையில் இறையாட்சி என்பது தாவீதின் குலத்தில் தோன்றும் மன்னர் ஒருவர் பொற்கால ஆட்சியைத் தருவார், எதிரிகளை அடியோடு ஒழிப்பார், அடிமை நிலையை மாற்றுவார் என்பதாகவே இருந்தது. இறைமகன் இயேசு சொன்ன இறையாட்சி முற்றிலும் வித்தியாசமானது. தூய ஆவியானவரை நமக்குள் ஏற்று நாம் வாழப்போகும் வாழ்க்கையின் குறியீடு அது. இயேசு மீண்டும் வரப்போகின்ற இரண்டாம் வருகையின் குறியீடு.

அந்த பின்னணியில் இயேசு மக்களிடம் இந்த உவமையைக் கூறுகிறார். இந்த உவமை இறைமகன் இயேசு உலகில் இல்லாத இந்தக் காலகட்டத்தில் அவரது பணியாளர்கள் எப்படிப் பணி செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது. இயேசு மனிதராக பூமியில் இல்லாத இந்த காலத்தில் அவருடைய பணிகளை முழு மனதோடு செய்பவர்களிடம் தான் இறை விசுவாசம் இருக்கிறது, இறை அன்பு இருக்கிறது, நிறை வாழ்வுக்கான தேடல் இருக்கிறது என்பதையே இந்த உவமை விளக்குகிறது. அப்படி முழு மனதோடு உண்மையாய் இறை பணி செய்யும் மக்களுக்கு இறைவன் மேலும் மேலும் வரங்களை அளிக்கிறார்.

இந்த உவமை சில உண்மைகளை நமக்குள் விதைத்துச் செல்கிறது.

Image result for ten minas parable1. தலைவன் தங்களோடு இருக்கும்போது பணியாளர்கள் துணிவுடன் பணி செய்வார்கள். ஆனால் தலைவன் இல்லாதபோது அதே உற்சாகத்தோடு பணி செய்யும் ஊழியக்காரர்களே இறைவன் பார்வையில் சிறப்பானவர்கள். எனவே தான் அவர் தோமாவிடம், “என்னைக் காணாமலேயே விசுவசிப்பவன் பேறு பெற்றவன்” என்கிறார். இயேசு இந்த உலகிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தக் காலகட்டத்தில் பணியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையே இது கூறுகிறது. காரணம் இந்த கால கட்டம் தான் எதிர்ப்புகள் அதிகமாய் உலவும் காலகட்டம், விசுவாசத்துக்கு மிகப்பெரிய சோதனை எழும் காலகட்டம்.

Image result for ten minas parable2. தலைவன் அரசுரிமை பெற்றுவரச் செல்லும்போது ஊழியர்களுக்கு தலா ஒரு மினா வழங்குகிறார். எல்லோருக்கும் சமமாய்க் கொடுக்கப்படுவது “நேரம்” எனலாம். அல்லது “ஒரு ஜீவன்” என்று வைத்துக் கொள்ளலாம். அதை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் ? நமது வாழ்க்கையில் இறைவன் வியக்கும் வகையில் நடக்கிறோமா ? வெறுக்கும் வகையில் நடக்கிறோமா என்பதே கேள்வி.

Image result for ten minas parable3. தலைவர் ஊழியர்களிடம் மினாக்களைக் கொடுக்கும் போது “இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்” என்று தான் சொல்கிறார். மற்ற அனைத்து உரிமைகளையும் ஊழியர்களிடமே கொடுத்து விடுகிறார். என்ன வாணிகம் செய்வது, எப்போது செய்வது, எப்படி செய்வது என ஊழியர்களுக்கு முடிவெடுக்கும் உரிமைகள் அனைத்தையும் அளிக்கிறார். அதே சூழலில் தான் நாமும் இருக்கிறோம். “பணி செய்யுங்கள்” என அழைப்பு விடுத்த இறைவன் “எப்படிப் பணி செய்வது” என்பதை நம்மிடமே விட்டு விடுகிறார். நாம் எப்படி வாழ்கிறோம் ? அடுத்தவர்களை எப்படி வாழ வைக்கிறோம் எனும் கேள்விகள் நம்மிடம் எப்போதும் இருக்கட்டும்.

Image result for ten minas parable4. “அவருடைய குடிமக்கள் அவரை வெறுத்தனர்” எனும் சொற்றொடர் இறைமகன் இயேசுவின் மக்கள் அவரை வெறுத்தனர் என்கிறது. இயேசுவை வெறுப்பது என்பது அவருடைய கட்டளைகளை நிராகரிப்பதே. என்னை அன்பு செய்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிப்பான் என்கிறார் இயேசு. அப்படியானால் என்னை வெறுப்பவன் என் கட்டளைகளை அன்பு செய்ய மாட்டான் என்பதே அதன் பொருள். அதாவது இயேசுவை வெறுப்பது என்பது அவர் கட்டளைகளை நிராகரிப்பதே. நாம் இறைவனை அன்பு செய்கிறோமா ?

Image result for ten minas parable5. தலைவன் அரசுரிமையோடு திரும்பி வரும்போதும் அன்பான மனதுடனே வருகிறார். “ஈட்டியது” எவ்வளவு என்பதை அறியும் ஆவல் தான் அவரிடம் இருந்தது. இவ்வளவு ஈட்டினாயா ? என அவர் கேட்கவில்லை. எவ்வளவு ஈட்டினாய் என்றே கேட்கிறார். நாம் எவ்வளவு ஈட்டினோம் எனும் கேள்வியை நம் மனதில் நாளும் கேட்கவேண்டும். இல்லையேல் இன்றே நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க ஆரம்பிக்க வேண்டும்.

Image result for ten minas parable6. முதலாவது ஊழியன் தனது மினாவை பத்து மடங்காக்குகிறான். இவர் தனது நாட்கள் முழுவதும் தலைவனின் மினாவைக் குறித்த கவனத்திலேயே இருந்த முழு நேரப் பணியாளர் எனலாம். முழு நேரப் பணியாளர் என்பது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் வாழ்வது எனக் கொள்ளலாம். அவர் தன் தலைவனுக்கு அதிகபட்ச பலனைக் கொடுக்க வேண்டும் எனும் சிந்தனையில் உழைத்துக் கொண்டிருந்தவர். அவருடைய பதில் தலைவனை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அவரை பத்து நகர்களுக்கு அதிகாரியாக்குகிறார். இவருக்குத் தான் மேலும் மினாக்கள் அளிக்கப்படுகின்றன. சிறியவற்றில் நம்பிக்கையாய் இருந்தாய் எனும் தலைவனின் பாராட்டும் கிடைக்கிறது.

Image result for ten minas parable7. இரண்டாவது பணியாளர் ஐந்து மினாக்கள் சம்பாதித்தார். அவருக்கும் தலைவனின் பரிசு கிடைக்கிறது. ஐந்து நகர்களுக்கு அவர் அதிகாரியாகிறார். ஐந்து மினாக்கள் சம்பாதித்தவர் பகுதி நேரப் பணியாளர் எனலாம். அவர் தனது உலகப் பணிகளுக்கு பாதி நேரம் செலவிட்டு விட்டு மீதி நேரம் தலைவனின் பணியைச் செய்தார் எனலாம். ஆனால் செய்த வேலையை அவர் கவனமாய்ச் செய்ததால் தலைவனின் மினாவை ஐந்து மடங்காக்க முடிந்தது.

Image result for ten minas parable8. மூன்றாவது வகைப் பணியாளர் தலைவரின் மினாவை கைக்குட்டையில் பொதிந்து வைக்கிறார். பிறர் பார்க்கும் விதமாகத் திறந்து கூட வைக்கவில்லை. இவர் தலைவன் கடினமானவன் என தலைவனையே குற்றம் சாட்டுகிறார். இவருக்கு தலைவரைக் கண்டு பயம் இருக்கிறது ஆனால் அந்தப் பயம் தலைவனுக்கு ஏற்புடைய செயல்களைச் செய்யத் தூண்டவில்லை. மாறாக தலைவன் தந்ததை தலைவனிடம் அப்படியே திரும்ப‌ கொடுக்க வைக்கிறது. தலைவனோ கோபமடைகிறார். இறைவன் நமக்குத் தரும் வாழ்க்கையை, கொடைகளை, வரங்களை பயன்படுத்தாமல் அப்படியே இறைவனிடம் திருப்பிக் கொடுத்தால் இறைவன் விரும்புவதில்லை. நமது வரங்களை நாம் பயன்படுத்துகிறோமா ?

Image result for ten minas parable9. “உன் வாய்ச்சொல்லைக் கொண்டே உன்னைத் தீர்ப்பிடுகிறேன்” என்கிறார் தலைவர். ஒருவேளை அந்த பணியாளர், “மன்னிக்கவும் நான் முயன்றேன் என்னால் வாணிகத்தில் வெற்றி பெற முடியவில்லை ” என சொல்லியிருந்தால் தலைவனின் கருணை கிடைத்திருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் சொல்லவில்லை. அவன் தனது வாய்ச்சொல்லின் மூலம் தனது செயலை நியாயப்படுத்த முயன்றான். எனவே தலைவனின் கோபத்துக்கு ஆளானான்.

Image result for ten minas parable10. “சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தால், பெரியவற்றுக்கு இறைவன் நம்மை அதிகாரியாக்குவார்” எனும் மிகப்பெரிய வாக்குறுதி இதனால் வெளிப்படுகிறது. இறைவன் நமக்கு சிறிய சிறிய வாய்ப்புகளை முதலில் வழங்குகிறார், சிறிய சிறிய பணிகளைத் தருகிறார். அவற்றில் நாம் முழு ஈடுபாட்டுடன் இருக்கும்போது நமக்கு பெரிய பெரிய அங்கீகாரங்களைத் தருகிறார். எனவே இறைவன் தருகின்ற சிறிய பணிகளைக் கூட ஆத்மார்த்தமாய்ச் செய்ய வேண்டும்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.