“இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்” ( புதிய மொழி பெயர்ப்பு மார்க் 4 : 30, 31, 32 )
தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது; விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.
இயேசு இறையாட்சியை இந்த முறை ஒரு கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார். கடுகு விதையைக் குறித்து வரலாறு பல பதிவுகளைச் சொல்கிறது.
இயேசு வாழ்ந்த பகுதியில் வளர்ந்த கடுகு புதர்கள் சுமார் 30 அடி உயரம் வரை வளரக் கூடியவனவாக இருந்தன என்பது ஒரு செய்தி. மண்ணில் போட்டால் முளைக்கக் கூடிய மிகச்சிறிய விதை கடுகு விதை தான். அதை விடச் சிறிய செடிகள் தானாக வளரும் தன்மையற்றவை என்கிறது ஒரு ஆய்வு.
இறையரசின் துவக்கம் மிகச்சிறிய விதையளவுக்கு இருந்தாலும் அதன் விஸ்வரூபம் அதன் வளர்ச்சியில் தெரியும். ஒரு பழத்தில் இருக்கும் விதைகளை எண்ணிவிட நம்மால் கூடும். ஆனால் ஒரு விதையில் இருக்கும் பழங்களை எண்ணிவிட இறைவனால் மட்டுமே ஆகும். கடுகு விதை கூட கடவுள் நினைத்தால் பறவைகளின் புகலிடமாய் மாறிவிடும்.
1. கடுகுவிதை எனும் தூய ஆவி
தூய ஆவியானவர் நமது இதயத்தில் நடப்படும் போது, பிறரால் அதை அறிந்து கொள்ள முடிவதில்லை. நமது வாழ்க்கையிலும் உடனடியாக பெரிய மாற்றம் வெளியே தெரிவதில்லை. ஒரு விதை இருப்பதையே நிலம் அறிந்து கொள்வதில்லை. அந்த அளவுக்கு சின்னது கடுகு விதை. ஆனால் அது நமக்குள் பதியமிடப்பட்டு வளர்ந்து பெரிதாகும் போது பலருக்கும் பயனளிக்கிறது. பிறருடைய கண்களுக்கு பளிச் என புலப்படுகிறது. நமது செயல்களின் நிழல்களில் பலர் வந்து இளைப்பாற அது வகை செய்கிறது.
2. விதைக்காத விதை பலனளிக்காது.
கடுகு விதை விதைக்கப்பட்டால் மட்டுமே அதன் பயன் தெரியும். விதைக்கப்படாத விதை விரல்களிடையே நழுவி விழுந்தால் கூட வெளியே தெரிவதில்லை. எனவே விதைக்கப்படுதல் மிகவும் முக்கியம். தூய ஆவியானவரை இறைவன் பூமிக்குக் கொடுத்தார். அவர் எங்கும் நிரம்பியிருக்கிறார். அவரை நமது இதயத்தில் நட்டிருக்கிறோமா ? இந்த கேள்வி மிகவும் முக்கியமானது. நாம் நமது அவரை இதயத்தில் நடவேண்டும்.
3. விதைக்கப்பட்ட பின் பயன்
விதைக்கப்பட்ட தூய ஆவியானவர் மறைவாய் இருந்து பயனளிக்க ஆரம்பிக்கிறார். உள்ளுக்குள் வேர் இறக்கி, வெளியே கிளைகளை விரிக்கிறார். அதனால் நமது செயல்கள் வலுவடைகின்றன. பிறர் பார்க்குமளவுக்கு விரிவடைகின்றன. கிளைகள் விரிக்கின்றன. தூய ஆவியானவர் நம்முள் இருந்தால் நமது செயல்களும் நம்மை அறியாமலேயே தூய்மையடைகின்றன. பிறருக்கு பயனுள்ள வகையில் மாறுகின்றன.
4. விதையின் அளவு முக்கியமில்லை.
விதை என்பதை இறை வார்த்தையோடும் ஒப்பிடலாம். இறை வார்த்தை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது நமது மனதில் நடப்படும் போது நமக்குள் முளைத்து வளர்ந்து பயனளிக்கிறது. நமது வாழ்க்கை பின்னர் பிறருக்கு நிழல் தரும் ஒரு செடியாக மாறிவிடுகிறது.
5. விதையின் அடர்த்தி முக்கியம்.
கடுகளவு விசுவாசம் இருந்தால் மலையைப் பெயர்க்கலாம் என்றார் இயேசு. கடுகின் அளவு என்பதை, கடுகின் அடர்த்தி என கொள்ளலாம். ஒரு கடுகு விதையை உடைத்தால் அது தன்னுள் முழுமையான அளவில் நிரம்பியிருக்கும். நமக்குள்ளும் விசுவாசம் என்பது இடைவெளியின்றி, முழுமையாய் நிரம்பியிருந்தால் பெரிய செயல்களைச் செய்ய முடியும்.
6. இயேசுவே விதை
அந்த விதையை இறை வார்த்தையைப் போல, இறைமகனாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் தான் பயனளிக்கும் என அவரே சொல்கிறார். இயேசு பூமிக்கு வந்து ஒரு விதையாக நடப்படுகிறார். அவரது கிளைகளாக திருச்சபை மக்கள் இணைகின்றனர். வளர்கின்ற அந்தத் திருச்சபை ஒரு பெரிய நிழல் தருவாய் வளர்ந்து விடுகிறது.
இந்த உவமை இப்படி பல்வேறு முகம் காட்டி நம்மை வியக்க வைக்கிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் நமது இதயத்தில் இறைவார்த்தையும், தூய ஆவியானவரும் தங்கியிருக்கும் போது நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் மாறுகிறது. துவக்கம் என்பது கடுகைப் போல சிறிதாய் இருந்தாலும், முடிவு பிறருக்கு நிழல் தரும் மரமாய் விரிவடைகிறது.