TOP 10 : புகழ் பெறா கண்டுபிடிப்பாளர்கள்

இந்த உலகம் கண்டுபிடிப்புகளினால் வளர்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள் தங்களுடைய சிந்தனைகளைக் கூர்தீட்டி பல்வேறு விஷயங்களைக் கண்டுபிடித்து அழியாப் புகழ் பெற்றிருக்கின்றனர். சில படைப்பாளிகள் படைப்பின் கர்த்தாக்களாக இருந்தாலும், பெயர் பெறாமலேயே போய் சேர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கண்டுபிடிப்பாளர்களில் பத்து பேர் இந்த வாரம்.

Image result for friction light

  1. தீப்பெட்டி

சிக்கி முக்கிக் கல்லைக் கொண்டு தீமூட்டிக் கொண்டிருந்தனர் நமது முன்னோர்கள். தீப்பெட்டி வந்தபின் அது மிக மிக எளிதானது. ஒரு உரசலில் தீ பிடிக்கும் மாயாஜாலம் போல ஆகிவிட்டது. 1827களில் இதைக் கண்டுபிடித்தவர் ஜான் வால்கர். திறமைசாலி. வித்தியாசமான சிந்தனைக்குச் சொந்தக்காரர். அதை தனது ஊரில் தயாராக்கி விற்றார். “ஃப்ரிக்ஷன் லைட்” என அதற்குப் பெயரிட்டார். ஆனால் மக்கள் அதை லூசிஃபர் என்றும் சாத்தான் என்றும் அழைத்தார்கள்.

தனது கண்டுபிடிப்பின் மேல் பெரிய மரியாதை வராததால் அதை அவர் காப்புரிமை பெறவில்லை. அப்படியே சர் ஐசக் ஹொல்டன் என்பவருக்கு விற்று விட்டுப் போய்விட்டார். ஹோல்டன் பிஸினஸ் உத்தி தெரிந்தவர். உலகெங்கும் தீப்பெட்டியைக் கொண்டு போய் விற்பனை செய்தார். தீப்பெட்டி அவரை மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது. அதனால் ஹோல்டன் தான் தீப்பெட்டி கண்டுபிடித்தவர் எனும் பெயர் இன்றும் நிலவுகிறது. உண்மையில் தீப்பெட்டியைக் கண்டுபிடித்த ஜான் வால்கர் பெயர் வெளிவராமலேயே போய்விட்டது.

  1. நீராவி எஞ்சின்

நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் வாட் என்பது எழுதப்பட்ட வரலாறு. பெஞ்சமின் ஃப்ராடி என்பது மறந்து போன வரலாறு. காரணம் அவர் ஒரு அடிமை ! அடிமை நிலையில் அமெரிக்காவில் இருந்த அவர் கடின உழைப்பின் மூலம் தனது பிள்ளைகளைப் படிக்க வைத்தார். சம்பாதிக்கும் பணமெல்லாம் தனது எஜமானுக்கே கொடுக்கும் நிலை அவருக்கு. கிடைத்த வேஸ்ட் பொருட்களை வைத்து அவர் நீராவி எஞ்சினை உருவாக்கினார்.

அமெரிக்க கடற்படையில் பின்னர் சேர்ந்த அவர், நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அவர் அடிமை என்பதால் எதற்கும் காப்புரிமை பெற அவரால் முடியவில்லை. அமெரிக்காவின் முதல் போர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட நீராவி எஞ்சின் இவரது கண்டுபிடிப்பு தான். கடைசி வரை தனது கண்டுபிடிப்புகளின் மூலம் எந்த பயனையும், புகழையும் பெறாமலேயே மறைந்து போனார் இவர்.

  1. கார்ட் ஐடியா

எல்லோரும் கார்ட் பயன்படுத்துங்கள், அப்போது தான் இந்தியா வல்லரசாகும் என குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் காலம் இது. அதைப்பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் முதன் முதலில் கார்ட் ஐடியாவைக் கண்டுபிடித்தவர் பெயர் ரான் கெலின் என்பவர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் அதிக புகழோ பணமோ இவர் பெறவில்லை.

ஆனால் இவர் மிகப்பெரிய தொழிலதிபர், பேச்சாளர், கண்டுபிடிப்பாளர். அந்த வகையில் நிறைய சம்பாதித்தார். இனிமேல் கார்ட் பயன்படுத்தும் போது ஒரு வினாடி ரான் கெலினையும் மனதில் நினையுங்கள்.

 

  1. ஏ.கே 47

“என்னுடைய மனதில் தாங்க முடியாத வேதனை இருக்கிறது. நான் இதை ஏன் கண்டுபிடித்தேன் என வருந்துகிறேன். இலட்சக்கணக்கான உயிர்களின் சாவுக்கு நான் காரணமாய் இருக்கிறேன் எனும் சிந்தனை என்னை அலட்டுகிறது. என்னை மன்னித்துவிடுங்கள். கடவுளே என்னை மன்னித்துவிடும்” என ஒரு கடிதம் எழுதி ரஷ்யாவிலுள்ள ஒரு சர்ச்சுக்கு அனுப்பினார் மிக்காயேல் கலாஷினோவ். அவரது துயரத்துக்குக் காரணம் அவர் கண்டுபிடித்த ஏ.கே.47. இவர் தனது தாய்நாடான ரஷ்யாவுக்காகத் தான் இதை வடிவமைத்தார். தனக்கு எந்த புகழும், பணமும், காப்புரிமையும் வேண்டாம் என அதை மொத்தமாய் அரசுக்கே அதைக் கொடுத்தும் விட்டார்.

ஆனால் ஏ.கே 47 உலகெங்கும் பரவிவிட்டது. இன்றைய கணக்குபடி பத்து கோடி ஏ.கே.47 துப்பாக்கிகள் உலகில் உள்ளன. பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல் தீவிரவாதம், சமூக விரோதிகள், கடத்தல்காரர்கள் என எல்லா இடங்களிலும் இது ஆக்கிரமித்து விட்டது. உலகெங்கும் பிரபலமான கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர். ஆனால் அது அழிவுக்கு வித்திட்டதால் கடைசில் மனம் கலங்கி 2013ல் இறந்தார்.

  1. சிப்ஸ்

“யோவ் என்னய்யா பிரஞ்ச் பிரைஸ் கொண்டு வந்திருக்கே.. பெரிசு பெருசா இருக்கு, மொறு மொறுப்பாவும் இல்லை” என கத்தினார் ஒரு கஸ்டமர். சமையல்காரர் ஜார்ஜ் கிரம் கடுப்பாகிப் போனார். சரி ரொம்ப மெல்லிசா சீவுவோம் என உருளைக்கிழங்கை சீவினார். மெல்லிய தூவல்களாய் வந்தது. அதை வறுத்து கொண்டு போய் வைத்தார். அது கஸ்டமருக்குப் பிடித்துப் போக, மக்கள் பலரும் அதைக் கேட்க ஆரம்பித்தனர். சட்டென சிப்ஸ் பிரபலமானது. நடந்தது 1853ம் ஆண்டு.

சரகோட்டா சிப்ஸ் என அதைப் பெயரிட்டு ஒரு கடையையும் திறந்தார் அவர். வியாபாரம் செழித்தது. ஆனால் அவர் செய்த ஒரு தப்பு, எந்த ஒரு காப்புரிமையும் வாங்காமல் போனது. இதனால் எல்லோரும் அவருடைய ஐடியாவைக் காப்பியடிக்க ஆரம்பித்தனர். நிறுவனங்கள் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை பாக்கெட்களில் அடைத்து விற்று கொழுத்த லாபம் பார்த்தன. ஜார்ஜ் கிரம் மறக்கடிக்கப்பட்டார்.

  1. மௌஸ்

கம்ப்யூட்டர் மௌஸ் எவ்வளவு பிரபலம் என்பது இப்போது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதைக் கண்டுபிடித்த எங்கல்பெர்ட் அதை பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை. தன்னுடைய தனிப்பட்ட பயன்பாட்டுக்காக ஒரு மௌஸை அவர் உருவாக்கி வைத்திருந்தார். பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரரான அவர் 20 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை வைத்திருக்கிறார். ஆனால் மௌஸை அவர் கண்டுகொள்ளவே இல்லை. 1968ம் ஆண்டு அவருடைய பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு விளக்கினார் அப்போதும் மௌஸ் அவரிடமே இருந்தது.

அவர் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனம் நாசூக்காக அந்த மௌஸுக்கான காப்புரிமையை வாங்கியது. பின்னர் அதை ஆப்பிள் நிறுவனத்துக்கு 40 ஆயிரம் டாலர்களுக்கு விற்று மகிழ்ந்தது. அதைக் கண்டுபிடித்தவருக்கு அதிலிருந்து டீ குடிக்க கூட காசு கிடைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

  1. ஸ்மைலி

ஒரு மஞ்சள் வட்டம். அதில் இரண்டு கண் வாய். பார்த்தவுடனே மனதில் புன்னகை எழும். அந்த வடிவத்தை வரைந்தவர் பெயர் ஹார்வே பால் என்பது யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஒரு நிறுவனத்தின் பணிபுரிந்து  கொண்டிருந்த அவர் இந்த ஸ்மைலியை வரைந்தார். 1963ம் ஆண்டு அவருக்கு நிறுவனம் 45 டாலர்கள் கொடுத்து, பாராட்டாய் முதுகில் தட்டிக் கொடுத்தது. அவ்வளவு தான் அவருக்குக் கிடைத்த மரியாதை

நிறுவனமோ, அந்த டிசைனை ஆடை பட்டன்களில் முதலில் பொறித்தது. வரவேற்பு பலமாய் இருந்ததால் அதை அப்படியே டிஷர்ட், போஸ்டர்,பந்து என சகட்டு மேனிக்கு அனைத்திலும் பொறிக்க ஆரம்பித்தனர். பில்லியன் கணக்கில் சம்பாதித்துக் கொட்டிய அந்த ஸ்மைலியை வடிவமைத்தவர் கண்டுகொள்ளப்படவே இல்லை. அவருக்குக் கிடைத்ததெல்லாம் அந்த $45 தான் !

  1. விமானம்

விமானத்தைக் கண்டு பிடித்தது யார் என்று கேட்டால் ரைட் சகோதரர்கள் என்று சொல்வோம். உண்மையில் அவருக்கு முன்பே ஒருவர் விமானம் செய்து ஓட்டிப் பார்த்தார் என்று சொன்னால் வியப்பாக இருக்கும். அந்த மேதையின் பெயர் ரிச்சர்ட் பியர்ஸ். நியூசிலாந்து நாட்டுக்காரரான இவர் ரைட் சகோதரர்கள் தங்கள் விமானத்தை வெள்ளோட்டம் விடுவதற்கும் ஒன்பது மாதங்களுக்கு முன்பே விமானத்தைப் பறக்க விட்டார். ரைட் சகோதரர்கள் விமானம் ஓட்டியது 1903ம் ஆண்டு டிசம்பர் 17ம் தியதி. ரிச்சர்ட் ஓட்டியது அதே ஆண்டு மார்ச் 31ம் தியதி !

மட்டுமல்லாமல், இன்றைய நவீன விமானத்துக்கும் ரிச்சர்ட் ஓட்டிய விமானத்துக்கும் அதிக ஒற்றுமை உண்டு. ரைட் சகோதரர்களின் விமானம் முற்றிலும் வேறுபட்டது. நவீன விமானத்தின் முன்னோடியான விமானத்தின் சொந்தக்காரரான ரிச்சர்ட் பியர்ஸ் மறக்கடிக்கப்பட்டு, ரைட் சகோதரர்கள் கொண்டாடப்படுவது காலத்தின் கோலம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல ?

  1. ரேடியோ

ரேடியோவைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி என்பது தான் வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம். உண்மையிலேயே மார்க்கோனி தான் ரேடியோவை முதன் முதலாய்க் கண்டுபிடித்தாரா என கேட்டால் இல்லை என்பதே வியப்பூட்டும் பதில். நிக்கோலா டெஸ்லா என்பவருக்கே அந்த புகழ் போய் சேர வேண்டும். மார்க்கோனி தனது கண்டுபிடிப்பு என மார்தட்டிக் கொண்ட ரேடியோவைப் பற்றியும், ஒலி அலைகள் பாயும் விதம் பற்றியும் டெஸ்லா ஏற்கனவே எழுதியிருந்தார்.

நிக்கோலா டெஸ்லா வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் தந்தை என அழைக்கப்படுபவர். மார்க்கோனிக்கு முன்பே ரேடியோ சிக்னல்களை வெற்றிகரமாய் பயன்படுத்தியிருந்தாலும் முந்திக் கொண்டு பெயர் வாங்கிச் சென்றவர் மார்க்கோனி. 1893 ல் டெஸ்லோ கண்டு பிடித்தது, 1895ல் மார்க்கோனியால் சொந்த கண்டுபிடிப்பாய் பதிவு செய்யப்பட்டது.

  1. மின்விளக்கு

மின்விளக்கைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால் தாமஸ் ஆல்வா எடிசன் என சின்னக் குழந்தையும் சொல்லும். அந்த அளவுக்கு மின் விளக்கு நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. தாமஸ் ஆல்வா எடிசனின் பெயர் எல்லா பாடபுத்தகங்களிலும் அலசி ஆராயப்பட்டது. ஆனால் உண்மையில் மின்விளக்கை முதலில் கண்டறிந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் அல்ல ! சர் ஹென்ரி டாவி என்பவர் !

1802ம் ஆண்டு பிளாட்டினம் இழைகளின் ஊடே மின்சாரத்தைச் செலுத்தி மின்விளக்கை உருவாக்கினார் அவர். பிளாட்டினம் வெப்பத்தை அதிகம் உள்ளிழுக்கும் என்பது தான் அதன் காரணம். ஆனால் இது மிக விலையுயர்ந்தது. பெரிய அளவில் விற்பனைக்குரிய வகையில் உருவாக்கும் சாத்தியங்கள் அற்றது. எனவே இது வெற்றியடையவில்லை. அதன்பின் 75 ஆண்டுகளுக்குப் பின்பு 1879ல் தான் தாமஸ் ஆல்வா எடிசனின் மூலம் அது வெற்றியடைந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.