உலகெங்கும் மக்களின் ரசனையின் தெர்மாமீட்டர் வெடித்துச் சிதறுமளவுக்கு வெப்பம் கூட்டிய படம் பாகுபலி. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது அதன் வசூல் கணக்கு பல புதிய சரித்திரங்களை திருத்தி எழுதியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய தேதியில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களின் பட்டியலில் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் ராஜமௌலி. ஆளானப்பட்ட இயக்குனர் ஷங்கரையே சிறிதாக்கி விஸ்வரூபமெடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.
ஒரு திரைப்படத்தை இடைவேளையோடு முடித்து விட்டு, “முடிந்தது போயிட்டு வாங்க.. மிச்சம் அடுத்த பாகத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என ரசிகர்களை அனுப்பி விட ஏகப்பட்ட தில் வேண்டும். அப்படிப்பட்ட தில்லுடன் முதல் பாகத்தை முடித்தார் இயக்குனர். அதையும் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு, அடுத்த பாகம் எப்போது வரும் என காத்திருந்தார்கள். ‘ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார் ?’ என்பதை சமூக வலைத்தளங்கள் அலசிக் காயப்போட்டன.
இப்போது இரண்டாம் பாகத்தில் அதற்கான விடைகளுடனும், வியப்புகளுடனும் வலம் வருகிறார் இயக்குனர். ஹைதர் காலத்துக் கதை தான் இது. கதையின் அடி நாதம் என்று பார்த்தால் இதில் புதுமையாக எதுவும் இல்லை. ஆனால் அதை பரபரப்புகளுடனும், விறுவிறுப்புடனும் காவிய வாசனை தெளித்து, கிராபிக்ஸின் கரங்களைப் பிடித்து, இசையின் தோளில் அமர்ந்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர்.
மகிழ்மதி தேசத்தின் கோட்டைகளுக்குள் புகுந்து, அந்த வனத்துக்குள் விளையாடி, மேகத்தில் பறந்து, நரம்புகள் புடைக்க இருக்கைகளை இறுகப்பிடித்து, நீதி வென்றதென புன்னகையுடன் எழும்பும் போது தான் திரையரங்கில் இருக்கிறோம் எனும் உணர்வே வருகிறது. அந்த அளவுக்கு அந்த பிரம்மாண்டத்தின் படிக்கட்டுகளில் பசை போட்டு அமர்த்தி வைக்கிறார் இயக்குனர்.
இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் என ஒருவரைக் கை காட்டி விட முடியாது. பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா என பல பெயர்களைச் சொல்ல வேண்டும். அத்தனை பேரும் சேர்ந்து இந்தப் பிரம்மாண்டத்தை, நம்பும் படி செய்து விடுகின்றனர். நாயகனுக்கு இணையாக வில்லன். விசுவாசமான சத்தியராஜுக்கு இணையாக நயவஞ்சக நாசர், மிரட்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக கம்பீர அனுஷ்கா என கதாபாத்திரங்கள் உழவு மாடுகளைப் போல வெகு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கின்றன.
அதிக பட்ச மிகைப்படுத்தலுடன் செய்யப்பட்டிருக்கும் சண்டைக் காட்சிகளும், சாகசக் காட்சிகளும் ஸ்பைடர் மேன்களை வெட்கமடையச் செய்யும். ஆனாலும் ரசிகர்கள் அதை கைதட்டி ரசிக்கின்றனர். சண்டைக் காட்சிகளின் நீளம் அனுமர் வால் போல நீண்டு கொண்டே இருக்கும் ஆனாலும் ரசிகர்கள் ஆர்வமாய் பார்க்கின்றனர். காரணம் காட்சிப்படுத்தலும், இசையும். மரகதமணியின் இசை மிரட்டல் ரகம் என்பது அதைக் குறைத்து மதிப்பிடுவது. அது படத்தின் மிகப்பெரிய பலம் என்பதே சரியாக இருக்கும்.
பாடல்காட்சிகளை படத்தோடு இணைய விட்டிருப்பது படத்தின் வேகம் தடைபடாமலிருக்க உதவுகிறது. பாடல்களைப் படமாக்கிய விதம் ரசிகனை சிகரெட் புகைக்க வெளியே அனுப்ப மறுக்கிறது. அதிலும் குறிப்பாக பாய்மரப் படகுப் பயணமும், அதன் பாய்களே துடுப்புகளாக மாறி மேக அலைகளில் மிதந்து வருவதும் கண்களுக்கு வியப்பு.
காதலும் காதல் சார்ந்த இடங்களும் முதல் பாகம் என்றால், வீரமும் வீரம் சார்ந்த இடங்களும் பிற்பாதி. இரண்டுமே வசீகரிக்க வைத்திருக்கிறது. கவிப்பேரரசின் இரத்தம் கார்க்கி வசனங்களை நேர்த்தியாக எழுதியிருக்கிறார். பாடல் வரிகளும் ரசிக்க வைக்கின்றன.
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் எனும் மில்லியன் டாலர் கேள்விக்கான விடையை சொல்லி, அதை ரசிகர்கள் ஏற்கும்படி செய்து, அதன்பின்பும் சத்தியராஜை ரசிக்கும்படி செய்ததில் இருக்கிறது இயக்குனரின் பிரம்மாஸ்திரம் ! அந்த இடத்தில் அவர் சறுக்கியிருந்தால் பாகுபலி, பலியாகியிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
அதே போல கதா நாயகன் அரசனாக இருந்தாலும், சாமான்யனாக இருந்தாலும் அவன் மீதான கம்பீரமும் மரியாதையும் சற்றும் குலையாமல் இருப்பது திரைக்கதையின் லாவகம்.
லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், ஹாரி பாட்டர், அவதார் என விஸ்வரூபங்களையும் வியப்பான கற்பனைகளையும் ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு அது உள்ளூரிலேயே கிடைத்திருப்பது இனிய ஆச்சரியம். இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் இன்னும் ஒரு பத்து மடங்கு செலவாகியிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
வெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி வலம் வராமல், கதாபாத்திரங்களுக்கிடையே உணர்வுப் பிணைப்பை உருவாக்கி உயிருடன் உலவ விட்டிருப்பதில் படம் உயிரோட்டம் பெறுகிறது. நீதி வெல்ல வேண்டும், வஞ்சம் வீழ வேண்டும் எனும் திரையுலக விதி ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்புகிறது.
சிவகாமியைக் கொல்ல நாசர் சதித்திட்டம் இடுவதை அறிந்தாலும் கட்டப்பா அதை சிவகாமியிடம் சொல்லாமல் விடுகிறார். விசுவாசத்தின் வெளிச்சமாக உலவும் கட்டப்பாவின் கதாபாத்திரத்தில் அங்கே சிறிய இடைவெளி விழுகிறது. அதே போல, மக்கள் கூட்டத்தை எப்போது காட்டினாலும் குறிப்பிட்ட பத்து பேரை மட்டுமே கேமரா சுற்றி வருவதும் இந்த பிரம்மாண்டப் படத்தில் நெருடலாகவே இருக்கிறது. இருபத்து ஐந்து வருடங்களுக்குப் பின்பான கூட்டத்திலும் அதே தலைகளை நரை முடியுடன் பார்ப்பது உறுத்துகிறது.
மூன்று மொழிகளில் என்று சொல்லிவிட்டு தெலுங்கில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேசித் திரிகின்றன. உதடுகள் மட்டுமே அசையும் நெருக்கமான குளோசப் காட்சிகளில் கூட பன்மொழி படமாக்கல் நிகழவில்லை என்பது கண்கூடு. அதே போல, பாடல் வரிகள் ரசிக்க வைத்தாலும் வாயசைவுக்கு வானளாவ இடைவெளி.
முதல் பாகத்தில் தீர்க்கமாய் யோசித்து சாசனம் பேசும் சிவகாமி இந்தப் படத்தில் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுக்கிறார். அதுவும் திரைக்கதையின் முக்கிய முடிவுகளைக் கூட சற்றும் விசாரிக்காமல் முடிவெடுக்கிறார் என்பது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது.
இவைகளெல்லாம் குறைகள் என்பதை விட தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள் என்று சொல்வதே சரியானது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், பாகுபலி இந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத திரைப்படம். மருதநாயகத்தை படமாக்கினால் இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதன் நம்பிக்கை. பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் ஒரு நாள் உலகை மிரட்டும் என்பதன் உத்தரவாதம்.
எதிர்பாராத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் வாழ்க்கை
நம்ப முடியாத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் திரைப்படம்.
பாகுபலி !
ரசனைகளின் அதிபதி !
*
You must be logged in to post a comment.