ஐடி நிறுவனங்கள் : இன்றைய நிலமையும், மீளும் வழிகளும்

Image result for IT companies

1990களில் புற்றீசல் போல புறப்பட்டு, படிப்படியாய் வளர்ச்சியடைந்து பிரமிப்பூட்டும் வகையில் நிமிர்ந்து நின்ற ஐடி துறை சமீப காலமாக சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தச் சரிவு பெரும் சரிவாகி ஐடி நிறுவனங்களை முழுமையாய் அழித்து விடுமோ எனும் அச்சம் மாணவர்களிடையேயும், ஐடி ஊழியர்களிடையேயும் நிலவுகிறது.

அவர்களுடைய அச்சத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. முன்னணி நிறுவனம் ஒன்று 9 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கப் போவதாகச் சொன்னது. இன்னொரு நிறுவனம் 14 ஆயிரம் பேர்களை வேலையை விட்டுத் தூக்கப் போவதாய் அறிவித்தது. உண்மையில் இந்த நிறுவனங்கள் வெளியேற்றப் போகும் ஊழியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என உள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதனால் ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுடைய வேலை எந்த நேரத்திலும் பறி போய்விடலாம் எனும் பதட்டத்தில் உள்ளனர். படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும், படித்து முடித்து ஐடி கனவுகளோடு திரியும் மாணவர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

ஏன் இந்த நிலமை ? உண்மையிலேயே ஐடி துறை வீழ்ச்சியடைகிறதா ? இந்த சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் ?

ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய சவாலைச் சந்தித்திருப்பது உண்மை தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. சில பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல பசுமையான சூழல் இப்போது ஐடி துறையில் இல்லை.

“டாப் லைன்” என நிறுவனங்கள் பெயரிட்டு அழைக்கும் “நிறுவன‌ வருமானம்” சமீபகாலமாக‌ ஐடி நிறுவனங்களில் அதிகரிப்பதில்லை. முன்பெல்லாம் ஆண்டு தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வளர்ச்சியை வெகு சாதாரணமாக நிறுவனங்கள் அடைந்து வந்தன. இதனால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அவர்களுடைய பணி உயர்வு போன்றவை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தன.

இப்போது அந்த “டாப் லைன்” அதிகரிப்பது குதிரைக்கொம்பாகி விட்டது. மிகக்கடுமையான போட்டி அதன் முக்கிய காரணம். இந்தியா முன்பு இருந்ததைப் போல “அவுட்சோர்சிங்” பணிகளுக்கான ஆதிக்க நிலமாய் இப்போது இல்லை. மெக்சிகோ, சிலி, அர்ஜென்டீனா, பங்களா தேஷ், வியட்னாம், சீனா என பல நாடுகள் இந்த அவுட்சோர்சிங் பணியில் மல்லுக்கட்டுகின்றன. இதனால் இந்திய நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிப்பது மாபெரும் சவாலாய் இருக்கிறது.

அதிகரிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இருப்பது அப்படியே நீடித்தால் கூட நன்றாக இருக்கும். ஆனால் அதுவும் நிச்சயமில்லை. போட்டிகளும், அடுத்தவர் பிஸினஸை தன் பக்கம் இழுக்க நினைக்கும் தொழில் தந்திரங்களும் ஆண்டு தோறும் நிறுவனங்களை அலட்டிக் கொண்டே இருக்கின்றன. இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வதே மாபெரும் சவாலாய் மாறியிருக்கிறது.

இந்த சூழலில் நிறுவனங்கள் கவனம் செலுத்துவது, “பாட்டம் லைன்” எனப்படும் நிகர லாபத்தை. வருமானம் அதிகரிக்காமல் எப்படி லாபத்தை அதிகரிப்பது. அதற்கு ஒரே வழி “செலவுகளைக் குறைப்பது”. ஐடி நிறுவனங்களைப் பொறுத்தவரை செலவுகளைக் குறைக்க மிக எளிய வழி, ஆட்களைக் குறைப்பது தான் ! இது இந்த ஆள் குறைப்புகளுக்கான‌ ஒரு காரணம்.

இரண்டாவது காரணம், தொழில் நுட்ப வளர்ச்சி. தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.

ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய தொழில்நுட்பமே இன்றைக்கு பழசாகிப் போச்சு எனுமளவில் தான் ஐடி துறையின் அசுர வளர்ச்சி இருக்கிறது. இன்றைக்கு எல்லாமே “ஆட்டோமேஷன்” பிரிவுக்குள் தீவிரமாய் நுழைந்து விட்டன‌. பத்து பேர் தேவைப்பட்ட வேலைக்கு, ஆட்டோமேஷன் நுட்பம் தெரிந்த ஒன்றோ இரண்டோ நபர்கள் போதும் என்பதே நிலமை !

கூட்டிக் கழித்துப் பார்த்து லாபம் எதுவோ அதைச் செய்வது தான் ஐடி நிறுவனங்களின் திட்டம். லாபம் இல்லையென்றால் அது யாராய் இருந்தாலும் அவர்களுக்கு குட்பை சொல்லி அனுப்பி வைக்க நிறுவனங்கள் தயங்குவதில்லை !

உதாரணமாக, துணி துவைக்க மாதம் ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு வேலையாளை நியமிப்பதா ? நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு மெஷின் வாங்குவதா ? மெஷின் வாங்கினால் எட்டு மாதங்கள் கழிந்து நமக்கு அது லாபம் தர ஆரம்பிக்கும் என கணக்கு போடுகிறோமல்லவா ? அந்த கணக்கைத் தான் நிறுவனங்கள் போடுகின்றன. இதை “ரிட்டன் ஆன் இன்வஸ்ட்மென்ட்” என்கின்றனர். ஒரு செலவைச் செய்தால் அது எப்போது நமக்குப் பயன் தரும் என்பதை மனதில் வைத்து செயல்படுத்துவது.

நவீன தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தத் துவங்கும் போது இப்போது இருப்பதில் வெறும் 10% ஊழியர்களை மட்டும் வைத்துக் கொண்டே, இன்றைக்கு செய்கின்ற அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். இன்றைக்கு இருக்கிற லாபத்தையும் பெற முடியும் என சமீபத்திய ஐடி அறிக்கை ஒன்று தெரிவித்திருந்தது. அந்த பத்து சதவீதம் மக்கள் நல்ல சம்பளத்தோடு வேலையில் இருப்பார்கள். அந்த பத்து சதவீதத்தில் இணைவதில் இருக்கிறது ஐடி ஊழியர்களின் வெற்றி !

கடினமாய் வேலை செய்யுங்கள் எனும் தாரக மந்திரத்திலிருந்து, ஸ்மார்ட்டாக வேலை செய்யுங்கள் எனும் ஒரு புதிய மந்திரத்தினூடாக ஐடி பயணிக்கிறது.

இந்த சவாலான சூழலில் ஐடி நிறுவனங்களில் பணி செய்கின்ற ஊழியர்களானாலும் சரி, புதிதாக ஐடி வேலையைத் தேடி வரும் இளைஞர்களானாலும் சரி, அவர்கள் ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

1. நவீன நுட்பங்களில் பரிச்சயம்.

“ஒன்றை செய், அதை நன்றே செய்” எனும் கூற்று ஐடி துறையில் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி வருகிறது. தெரிந்து வைத்திருக்கும் ஒரு விஷயம் சட்டென காலாவதியாகி விட, அதை மட்டுமே தெரிந்த நபர் செய்வதறியாது திகைக்க வேண்டிய சூழல் உருவாகிறது.

“பன்முகத் தன்மை” இன்றைய மிக முக்கியமான தேவை. நவீன தொழில் நுட்பங்களான டிஜிடல் டிரான்ஸ்பர்மேஷன், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், ரோபோட்டிக்ஸ், ஆகுமென்டர் ரியாலிடி, மொபிலிடி போன்றவற்றில் குறைந்த அளவு பரிச்சயமேனும் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து வைப்பது அவசியம், கூடவே நவீன தொழில் நுட்பங்கள் சிலவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

புதிதாக வேலை தேடுபவர்கள் இத்தகைய நுட்பங்களில் சான்றிதழ் பெறுவது அவசியம். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

2. சூழலுக்கு ஏற்ப பணியாற்றும் தன்மை.
ஐடி துறையின் சவாலான பயணத்தில், “ஃப்ளக்ஸிபிளிட்டி” மிகவும் அவசியம். அதாவது ரொம்ப பிடிவாதமாக இருக்காமல், நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப தங்களுடைய விருப்பு வெறுப்புகளை மாற்றி வைக்கும் குணாதிசயம் இருக்க வேண்டும்.

உதாரணமாக, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தான் வேலை செய்வேன். இந்த குறிப்பிட்ட வேலையை மட்டும் தான் செய்வேன். இந்த இடத்திலிருந்து மட்டும் தான் செய்வேன். என்னுடைய வேலையை மட்டும் தான் செய்வேன், அதை எனக்குப் பிடித்த வகையில் தான் செய்வேன்.. போன்ற பிடிவாதங்கள் உடையவர்கள் நிறுவனங்களில் நிலைக்க முடியாது. கொடுக்கப்படும் வேலை சிறிதோ, பெரிதோ அதில் முழுமையான மனசை வைத்து வேலை செய்யும் ஊழியர்களையே நிறுவனங்கள் இப்போது எதிர்பார்க்கின்றன.

3. நல்ல குணாதிசயம்.

ஐடி நிறுவனங்களின் பார்வை மாறிவிட்டது. “கலைஞனுக்கு கர்வம் இருக்கும்” என்று கலை உலகில் சொல்வது போல, “டெக்னிகலில் ஸ்ட்ராங்” ஆக இருக்கும் ஊழியனுக்கு கர்வம் இருக்கும் என தொழில்நுட்ப உலகில் சொல்வார்கள். அத்தகைய மனநிலை இனிமேல் செல்லுபடியாகாது. தொழில்நுட்பங்களே சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி வருவதால், “டெக் ஸாவி” எனப்படும் அறிவு ஜீவிகளை விட நல்ல குணாதிசயம் உடையவர்களையே நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

இன்றைக்கு தொழில்நுட்ப தீர்வுகள் இணையத்திலேயே கிடைக்கின்றன. கேள்விகளுக்கான விடைகளை இணையமே தேடி எடுத்துத் தரும். நல்ல குணாதிசயங்களை இணையம் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே தான் இன்றைய தேவை நல்ல தொழில்நுட்ப பரிச்சயம் என்பதோடு கூட நல்ல குணாதிசயம் எனும் நிலையையும் எட்டியிருக்கிறது.

“இவனுக்கு விஷயம் தெரியும், ஆனா ஆள் சரியில்லை”, ” இவனுக்கு விஷயம் தெரியாது ஆனா கத்துப்பான்” என இரண்டு சூழல் எழுந்தால், இரண்டாவது நபரையே நிறுவனங்கள் தக்க வைத்துக் கொள்ளும் என்பதே எதார்த்தம்.

4. மென் திறமைகள்

இரண்டில் ஒன்றை தேர்வு செய்யச் சொன்னால் எதைத் தேர்ந்தெடுப்பது ? தொழில்நுட்ப ரீதியாக வலிமையான இருவர் இருந்தால் அவரில் ஒருவரை எப்படிப் பிரித்தெடுப்பது ? அத்தகைய சூழல்களில் உதவிக்கு வருவது மென் திறமைகள் ! நல்ல உரையாடல் திறன், நல்ல எழுத்துத் திறன், நல்ல பேரம் பேசும் திறன் போன்றவையெல்லாம் இருந்தால் அவருக்கு அதிக மரியாதை கிடைக்கிறது.

எனவே வேலையில் இருப்பவர்களானாலும் சரி, வேலைக்கு முயற்சி செய்பவர்கள் ஆனாலும் சரி மென் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அது தான் நிறுவனங்களில் ஒரு ஊழியர் இறுக்கமாய் இருக்க உதவி செய்யும்.

5. இன்னோவேஷன் திறமை

அதாவது புதிது புதிதாக எதையாவது கண்டு பிடிப்பது. அல்லது புதிய ஐடியாக்களை வழங்குவது. வழக்கமாய் செய்து கொண்டிருக்கின்ற செயலை எப்படிச் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் ? வழக்கமாய் செய்யும் வேலைகளை விரைவாய் செய்வது எப்படி ? வழக்கமான பணிகளை அதிக தரத்தில் செய்வது எப்படி ? இந்த மூன்று நிலைகளில் புதிய புதிய ஐடியா சொல்பவர்களுக்கு நிறுவனத்தில் எப்போதுமே உயர்ந்த இடமும், மரியாதையும் கிடைக்கும்.

அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங் எனப்படும், யாரும் யோசிக்காத ஒரு கோணத்தில் யோசிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், சவாலான சூழலிலும் உயர்வை எட்டவும் உதவும்.

வாழ்க்கை பூக்களின் பாதை மட்டுமல்ல, அது முட்களின் பாதையும் கூட. பூக்களில் நடக்கும் போது போதையடையாமலும், முட்களில் நடக்கும் போது சோர்வு அடையாமலும் இருந்தால் வாழ்க்கை இனிமையாகும். இலட்சியம் கை வசமாகும். எந்த நிலமையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை இதயத்தில் கொண்டால் தோல்விகளின் முடிவில் வெற்றிகள் துவங்கும்.

*

நன்றி : தினத்தந்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s