அக்கினி வெயில் : என்ன செய்ய வேண்டும் ?

Image result for Hot summer in chennai

“யப்பா… வெயில் தாங்க முடியல” !! இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது பெரும்பாலும் இப்படித் தான் ஆரம்பிக்கின்றனர். அக்கினி வெயில் கோடிக் கைகளோடு நம்மை சுற்றி இறுக்குகிறது.

தினசரி வாழ்வை வியர்வைகளுக்கும், வெப்பத்துக்குமிடையே நடத்திச் செல்லும் நாம் வெயிலைப் பற்றிய ஒரு வித எரிச்சலுடனேயே வெயில் காலத்தை ஆரம்பிக்கிறோம்.

வெயில் நாட்களில் உடம்பின் வெப்பம் அதிகரிக்கும்போது அது அதிகப்படியான வெப்பத்தை தோலுக்கு அனுப்புகிறது, தோல் சுற்றுப் புறத்திலுள்ள குளிர்காற்றைக் கொண்டு வெப்பத்தைக் குறைக்கிறது. அல்லது வியர்வை மூலமாக வெப்பத்தை வெளியேற்றுகிறது. ஒரு துளி வியர்வை உடம்பிலுள்ள ஒரு லிட்டர் இரத்தத்தைக் குளிர்விக்கிறது என்பது வியப்பூட்டும் செய்தி.

ஆனால் வியர்க்காத வெயில் வீசும் பிரதேசங்களில் உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் உள்ளுக்குள்ளேயே தேங்கிவிடுகிறது. இது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலுக்கு உடலைத் தள்ளி உயிருக்கே ஆபத்தான நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்கிறது. வெளியே உள்ள காற்று வியர்வையையும், உடல் வெப்பத்தையும் உறுஞ்சும் தன்மையற்றிருப்பதே இதன் காரணமாகும்.

சிலருக்கு வியர்க்காத உடல் இயல்பிலேயே அமைந்திருக்கும், அல்லது பிற நோய்களின் தாக்கத்தால் வியர்க்காத தன்மையை உடல் பெற்றிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிது நேரம் குளிர் அறைக்குள் இருக்க முடிந்தால் மிகவும் பயனளிக்கும்.

குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய், குறைந்த இரத்த அழுத்தம் உடையோர் போன்றவர்களின் உடல் வெப்பத்தினால் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகும்.

நகர்ப்புறங்களில் கிராமப் புறங்களை விட வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாய் இருப்பதற்கு அங்குள்ள மக்கள் தொகையும், தொழிற்கூடங்களும், போக்குவரத்தும் சில முக்கிய காரணங்களாகும். குளிர்சாதனப் பெட்டி வெளிவிடும் வெப்பமும் நகர்ப்புற சுற்றுச் சூழலை வெப்பப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நகர்ப்புறங்களில் வெப்பத்தை எதிரொளிக்கும் தன்மையுடைய பொருட்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. சாலைகள் போன்றவை வெப்பத்தைப் பெருமளவில் கிரகித்துக் கொள்ளும் தன்மை படைத்தவையாக இருப்பதனால் நகருக்கு வெளியே இருக்கும் வெப்பத்தை விட ஐந்து முதல் எட்டு ஃபாரன்கீட் வரை நகருக்குள் வெப்பம் அதிகமாக இருக்கிறது.

நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதற்கு நாம் கணிப்பது போலவே மரங்களின் குறைவும் ஒரு முக்கியமான காரணம். வெப்பத்தை உள்ளிழுத்து அதை ஆவியாகாமல் தடுக்கும் மரங்களும், நிலப்பரப்பும் குறைவாக இருப்பது வெப்ப அதிகரிப்புக்குக் காரணமாய் இருக்கிறது.

வெப்ப காலங்களில் ஃபுட் பாய்சனிங் எனப்படும் உணவு உட்கொள்வதனால் வரும் நோய்கள் மிகவும் அதிகரித்து விடுகின்றன. அதற்கு ஒரு காரணம் பாக்டீரியாக்கள் வெப்ப காலத்தில் வேகமாக வளர்வது. அதுவும் ஈரத்தன்மையுள்ள, வெப்ப நாட்கள் பாக்டீரியாவை மிகவும் வேகமாகப் பரப்புகின்றன. இதனால் உணவுப் பொருட்களில் தொற்றிக் கொள்ளும் பாக்டீரியாக்கள் வெப்பத்தால் சட்டென்று பல மடங்கு பரவி நமது உணவைக் கெடுத்து, அதை உண்ணும் நம்மையும் படுக்க வைத்து விடுகிறது.

வெயில் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு இன்னொரு காரணம் இந்த காலங்களில் நமக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் போவது. இதனால் சோர்வு, தலைவலி, எரிச்சல், மன உளைச்சல் போன்ற பல பிரச்சனைகள் நம்மை பிடிக்கின்றன.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாய் இருக்கும்போது தவிர்க்க முடியாமல் வாங்கிக் குடிக்கும் சுகாதாரமற்ற சாலையோர பானக் கடைகள் நோயையும் சேர்த்தே விற்கின்றன. அவசரமாக நமது உடலின் வெப்பத்தையும், சோர்வையும் நிறுத்துகையில் நிதானமாய் நோயை உள்ளே அனுமதிக்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேனிற்காலத்தில் கைகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகளைக் கழுவாமல் எதையும் உண்ணக் கூடாது. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கைகளைச் சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். வெளியே சுத்தமான தண்ணீர் கிடைக்காது என நினைத்தால் முன்னமே தண்ணீரை எடுத்துச் செல்வது அவசியம்.

கொசுக்களால் பரவும் நோய்களும் வெயில் காலங்களில் சகஜம் எனவே அதற்குரிய பாதுகாப்புடன் இருத்தல் அவசியம்.

போலியோ நோய் வெயில்காலத்தில் பரவும் ஒரு கொடிய நோயாக இருந்தது. 1940 களிலெல்லாம் வெயில்காலங்கள் போலியோவின் பயத்துடனே கழிந்தன. தற்போது அரசுகள் முன்னின்று நடத்தும் போலியோ விழிப்புணர்வினால் அந்த ஆபத்து நீங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

வெயிலில் அதிக நேரம் அலைவதும், நேரடியாக சூரிய ஒளியில் நிற்பதும் பல கண்நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் இருபத்தைந்து இலட்சம் பேர் கண் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் பெரும்பாலும் வெயில் காலத்தில் வருவது குறிப்பிடத் தக்கது. புற ஊதாக்கதிர்கள் கண்களைப் பாதித்து கண்ணுக்குள் நோயின் வேர்களைப் பதித்துவிட்டால் அது நீண்ட நாட்களுக்கு வெளியே தெரியாமல் இருந்து பிற்காலங்களில் பார்வையையே பறித்து விடும் என எச்சரிக்கிறார் நியூஆர்லாண்ட் கண் மருத்துவ நிபுணர் டாக்டர். மோனிகா.

கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வெள்ளெரிக்காயை சிறு சிறு மெல்லிய வட்ட வடிவமாக வெட்டி கண்களில் வைத்து கண்களைக் குளிரச் செய்வது நமக்குப் பழக்கமான வைத்தியம். வெளிநாடுகளில் ஐஸ்கட்டிகளை கண்களில் வைத்து கண்களைப் புத்துணர்ச்சியாக்குகிறார்கள்.

சீனாவில் வெயில் காலத்தில் இதய நோய்களாலும், வெப்ப நோய்களாலும் ஏராளமானோர் இறந்து விடுவதாகச் சொல்கிறது ஒரு கணக்கெடுப்பு.

அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில் குழந்தைகளைக் காரில் உட்கார வைத்துவிட்டு பெற்றோர் வெளியே செல்வதால் சுமார் ஐம்பது குழந்தைகள் வெப்ப நோய் தாக்கி இறந்திருக்கிறார்கள் என தெரிய வந்தது. எனவே வெப்ப காலத்தில் நல்ல காற்றோட்டமான இடங்களில் இருப்பது மிகவும் அவசியம். கொஞ்சம் நேரம் தானே என்று அசிரத்தையாய் செய்யும் செயல்கள் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்திவிடக் கூடும்.

வெயில் காலங்களில் அணியும் உடைகள் வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளக் கூடியதாக இல்லாமல் இருப்பதே சிறந்தது. ஆடைகள் உடலை இறுக்கிப் பிடிக்காமல் அணிவதும் மிகவும் அவசியம். மெலிதான வண்ணங்களில் ஆடைகள் அணிவதும் நல்லது.

வெயில் காலங்களில் புழுதியின் அகோரத் தாண்டவத்தைக் காணலாம், இத்தகைய சூழலில் இருக்கும் ஆஸ்த்மா போன்ற நோயாளிகள் மிகவும் கவனத்துடன் இருத்தல் அவசியம். பெரும்பாலும் புழுதி நிறைந்த இடங்களுக்கு தேவையில்லாமல் செல்வதைத் தவிர்த்தல் நலம் பயக்கும்.

காலணி பயன்படுத்தும் போது காட்டன் சாக்ஸ் பயன்படுத்துவது காலில் தேவையற்ற வியர்வை தேங்கி வரும் நோய்களுக்கும், அலர்ஜிகளுக்கும் நம்மை விலக்கிப் பாதுகாக்கும்.

வெப்பநோய் தாக்கி யாரேனும் பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் இருப்பதைக் கண்டால் அவர்களை உடனே நல்ல காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்து, தண்ணீரையோ, ஈர துணியையோ கொண்டு முகம், கை கால்களை ஈரப்படுத்த வேண்டும்.

இந்திய ஆயுர்வேதிக் அறிவுரைகளைப் பார்த்தால் தினமும் இரண்டு முறை குளிப்பது, காலையில் நேரமே எழும்பி வேலைகளை ஆரம்பிப்பது மதியம் சற்று நேரம் தூங்கி ஓய்வெடுப்பது, இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரத்தில் தூங்கச் செல்வது, அதிக நேரம் கண் விழித்திருப்பதைத் தவிர்ப்பது என நீள்கிறது பட்டியல்.

ஆயுர்வேதம் இன்றைய அவசர உலகில் திணிக்கப்பட்டுள்ள மேல் நாட்டுப் பானங்களை ஒதுக்குகிறது. இளநீர், நன்னாரி சர்பத், மோர், தண்ணீர், எலுமிச்சை பானம், பார்லி தண்ணீர் போன்றவற்றையே பரிந்துரைக்கிறது.

தொப்பியோ, நல்ல குளிர் கண்ணாடியோ அணிவது வெப்பத்திலிருந்து தற்காலிகத் தப்பித்தலைத் தரும்.

குறிப்பாக வெயில் காலங்களில் அதிகம் காய்கறிகளையும், பழங்களையும், பானங்களையும் உணவாகக் கொள்ளவேண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளையும், இனிப்பு வகைகளையும் வெயில் காலங்களில் தவிர்க்க வேண்டும்.

வெயில் காலங்களில் மது அருந்துபவர்கள் அதை நிறுத்துவதும் மிக  முக்கியம். காரணம் மது உடலிலுள்ள ஈரப்பதத்தை குறைத்து ஆபத்தான சூழலை உருவாக்கி விடும். போதைப் பொருட்களையும் அறவே நிறுத்த வேண்டும்.

இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளை மிகவும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அவர்களுடைய உடல் வெகு வேகமாக வெப்பமடைந்து விடும். எனவே வெப்பமான பகுதிகளில் குழந்தைகளை அழைத்துச் செல்வதையோ, தனியே விளையாட விடுவதையோ தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்பவர்கள், குறிப்பாக வயதானவர்கள்,  அதிகாலையிலோ அல்லது சூடு குறைந்த இரவிலோ உடற்பயிற்சி செய்ய வேண்டுமென அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

வெயிலில் உலவும் போது சிறிது சிறிதாக உலவுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வெயிலுக்கு உடலைப் பழக்குவது வியர்வை போன்றவை சரியான அளவில் வெளியேற்றவும், வெப்பத் தாக்குதலிலிருந்து தப்புவதற்கும் உதவும்.

வெயிலில் அலையும் போது தாகம் எடுக்கட்டும் தண்ணீர் குடிக்கலாம் என்று நினைக்காமல், அடிக்கடி தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வெயில்க் காலங்களில் ஒரு நாளைக்கு என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி நடப்பது வெயிலில் தேவையின்றி அலைவதைக் குறைக்கும். காலையில் செய்ய முடிகின்ற வேலைகளை வெயிலுக்கு முன்பே செய்யவும் இந்த திட்டமிடல் உதவும்.

வெயில் காலம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் வெயிலினால் வரும் நோய்கள் நிச்சயம் தடுக்கக் கூடியவையே. வெயில் காலத்தில் கவனிக்க வேண்டிய சிறு சிறு விஷயங்களைக் கவனித்து நடந்தால், வெயில் காலம் என்பது அச்சுறுத்தலாக இல்லாமல் அமைதியாகக் கடந்து செல்லும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s