பெண்கள்  : பாதுகாப்பு டிப்ஸ் !

Image result for women safety

ஒரு பெண் என்றைக்கு நடு ரோட்டில் தைரியமாக நடந்து போகிறாரோ அன்றைக்கு தான் உண்மையான சுதந்திரம் நாட்டுக்கு வந்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. அந்த சுதந்திரம் வருவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடக்க வேண்டும் என தெரியவில்லை. சொந்த அப்பார்ட்மென்டுக்குள்ளேயே, எந்த பாவமும் செய்யாத‌ ஏழு வயது சிறுமி ஹாசினியின் உயிர் பறிக்கப்படுகிறது. ரெயில்வே நிலையத்திலேயே ஒரு படுகொலை அரங்கேறுகிறது. தலித் எனும் காரணத்தால் நந்தினி எனும் பதினாறு வயதுப் பெண் அதிர்ச்சி மரணத்தை சந்திக்கிறார். அச்சம் எங்கும் நிலவுகின்ற காலகட்டம் இது.

“திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பது உண்மை தான். அதற்காக, திருடன் திருந்தும் வரை காத்திருக்கவும் முடியாது. “ரூம் போட்டு யோசிப்பாங்களோ” என வியக்குமளவுக்கு இன்றைக்கு திருடர்களின் புத்தி வேலை செய்கிறது. இந்த மூளையை அப்படியே அலேக்காய் தூக்கிக் கொண்டு போய் ஒரு நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தினால் நோபல் பரிசே கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

நமது சமூகத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டும் அதே வேளையில் நாமும் எந்த அளவுக்கு பாதுகாப்பாய் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையினர், வல்லுநர்கள், பாதுகாப்பு குழுக்கள் போன்றவர்கள் தொடர்ந்து இத்தகைய அறிவுறுத்தல்களைத் தந்து கொண்டே தான் இருக்கின்றனர்.

  1. அலட்சியம் அகற்றுவோம்

நமக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. “எங்க ஏரியா ரொம்ப சாதுவான, சமர்த்தான, அமைதியான, புனிதமான ஏரியா. இங்கேயெல்லாம் திருடங்க யாரும் வரமாட்டாங்க” என ஓவரா நம்பி விடுவோம். எல்லா பயணத்துக்கும் ஒரு முதல் சுவடு உண்டு. எல்லா திருட்டுக்கும் ஒரு பலியாடு உண்டு. எனவே ‘இதுவரை நடக்கலை, அதனால இனியும் நடக்காது’ எனும் அசட்டு நம்பிக்கைகள் வேண்டவே வேண்டாம்.

அதிலும் குறிப்பாக, வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் திருடர்களின் கழுகுக் கண்களில் முதலில் விழுந்து விடுவார்கள். எப்படியாவது இவர்களுடைய கவனத்தைத் திசை திருப்பியோ, வலுக்கட்டாயமாய் நுழைந்தோ தாக்குதல் நடத்த வியூகம் வகுப்பார்கள் திருடர்கள்.

எப்போதும் கதவையும், கிரில் கேட்டுகளையும் மூடியே வைத்திருக்க வேண்டும் என்பது பால பாடம். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் கதவிலுள்ள எல்லா பூட்டுகளையும் பூட்டி வைக்க வேண்டும் என்கிறார்கள் காவல் துறையினர். பால்கனி, மாடி கதவுகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்துங்கள்.

ஒரே கதவில் நாலு தாழ்ப்பாள் இருந்தால் நாலையும் போடுங்கள் ! திருடன் உள்ளே நுழைய எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறீர்களோ அவ்வளவுக்கு நீங்கள் பாதுகாப்பாய் இருக்கலாம். எனவே அடிப்படை விஷயமான பூட்டு விஷயத்தை மறக்க வேண்டாம்.

  1. வீட்டை பலப்படுத்துவோம்

ஒரு டிவி வாங்க வேண்டுமென்றால் அத்தனை கடைகள் ஏறி, எல்லாவற்றையும் அலசிக் காயப்போட்டு தான் வாங்குவோம். அதே போல தான் ஒரு வாஷிங் மிஷின், ஒரு பிரிட்ஜ் என எல்லா விஷயத்திலும் மண்டையைப் போட்டுக் குடைவோம். ஆனால் பூட்டு விஷயம் வரும்போது மட்டும், பக்கத்தில் இருக்கும் ஹார்ட்வேர்ஸ் கடைக்குப் போய் கம்மி விலையில் ஒரு பூட்டு வாங்கி மாட்டுவோம்.

அந்தப் பூட்டுகளெல்லாம் திருடன் வந்து சத்தமாய் இருமினாலே திறந்து போய்விடும். முதலில் பூட்டுகளில் கவனம் செலுத்துங்கள். நல்ல தரமான பூட்டுகளை வாங்குங்கள். விலை அதிகமாய் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். பூட்டு சரியில்லையேல் வீட்டுக்குள் என்ன சமாச்சாரம் இருந்தாலும் அது பாதுகாப்பாய் இருக்காது !

அதே போல ஒருவேளை ஒரு புது வீட்டுக்கு வாடகைக்குப் போனாலோ, குடியேறப் போனாலோ முதல் வேலையாக சகல பூட்டுகளையும் மாற்றுங்கள். பழைய பூட்டுகளைப் பயன்படுத்தாதீர்கள். அதன் சாவிகள் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் எனும் எச்சரிக்கை உணர்வு உள்ளுக்குள் இருக்கட்டும்

முன் பக்கக் கதவில் ஒரு லென்ஸ் பொருத்தி வெளியே நடப்பவற்றைப் பார்ப்பது போல அமைப்பது தனிமையாய் இருக்கும் போது ரொம்பவே பாதுகாப்பானது. ரொம்ப சிம்பிள், ஆனா ரொம்பவே பயனுள்ள விஷயம் இது ! அதுவும், அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில் தங்குபவர்களுக்கு இது ரொம்பவே அவசியம். வீட்டின் வெளியே நிற்பவர் பக்கத்து வீட்டு நபரா இல்லை, தெரியாத நபரா என்பதைக் கண்டு கொள்ள வசதியாக இருக்கும்.

கதவில் ஒரு சங்கிலி மாட்டி வைப்பது கூடுதல் பயனளிக்கும் !

  1. நள்ளிரவு தந்திரங்கள்.

திருடர்கள் இப்போதெல்லாம் ஏகப்பட்ட புத்தம் புதிய தந்திரங்களோடு களமிறங்குகிறார்கள். அதிலும் பெண்கள் தனியாக இருக்கும் விஷயம் தெரிந்தால் எப்படியாவது அவர்களை ஏமாற்றி கிடைப்பதை லபக்கிக் கொண்டு போக எல்லா வழிகளிலும் முயல்வார்கள்.

நள்ளிரவில் திடீரென உங்கள் வீட்டுக் கொல்லையிலோ, அல்லது வேறு ஏதோ ஒரு பக்கத்திலோ இருக்கும் தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டோ கொட்டென கொட்டும். இரவு ஆனதால் அந்த சத்தம் உங்களை எழுப்பியும் விடும்.

“அடடா…. டேப்பை மூட மறந்துட்டேன் போலிருக்கு” என அரக்கப் பரக்க பாதி தூக்கத்தில் கதவைத் திறந்து கொண்டு வெளியே போகாதீர்கள். இதற்காகவே காத்திருக்கும் திருடர்களுக்கு வேலை படு சுலபமாகிவிடும்.

அதே போல இரவில் வெளியே சத்தம் கேட்கிறது, குழந்தை அழுகிறது, லைட் எரிகிறது, பூனை கத்துகிறது என எதுவாய் இருந்தாலும் தனியே வெளியே போகாதீர்கள்.

அதே போல, அதிகாலை வேளைகளில் இரட்டைக் கவனம் அவசியம். திருட்டுகள் அதிகம் நடப்பது அதிகாலை வேளையில் தான். காலையில் நாலுமணிக்கு எழும்பி கொல்லைப் பக்கம் போவது, கதவைத் திறந்து வெளியே வருவது போன்ற நேரங்களில் அலர்ட் அவசியம் . பெரும்பாலும் அந்த நேரங்களில் நமது மூளை ரொம்ப அலர்ட்டாய் இருக்காது !

திருடர்கள் உள்ளே நுழையவோ, கத்தி முனையில் மிரட்டவோ அந்த சில நிமிட அசதியும், கவனமின்மையுமே போதும் ! எனவே அதிகாலை வேளையில் வெளியே வரவேண்டியிருந்தால், முழு பாதுகாப்பு உணர்வுடனும், அளவுக்கு மீறி லைட்களை எரியவிட்டும் வருவதே நல்லது !

கையில் செல்போனை எப்போதுமே வைத்திருப்பது கூடுதல் பிளஸ் !

  1. கர்ட்டன் போடுங்க !

உங்க வீடு, பெரிய பெரிய சன்னல்களுடைய வீடா ? சன்னல்களுக்கு நல்ல கடினமான திரைச்சீலை வாங்கிப் போடுங்கள் ! திரைச்சீலைகளால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு.

முதலாவது, உங்கள் வீட்டில் யார் இருக்கிறீர்கள் ? என்னென்ன விலையுயர்ந்த பொருட்கள் இருக்கின்றன போன்ற விஷயங்களெல்லாம் வெளியே இருந்து நோட்டமிடும் நபர்களுக்குத் தெரிய வராது !

இரண்டாவது, சூரிய வெப்பம், தூசு போன்ற விஷயங்களிலிருந்தும் உங்களுக்குப் பாதுகாப்பு. மூன்றாவது, உள்ளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும் வெளியே இருப்பவர்களுக்கு வேடிக்கப் பொருள் ஆகாது. இதுவும் ஒரு பாதுகாப்பு அம்சம் தான், எளிமையான பாதுகாப்பு வழி.

ஒருவேளை உங்கள் வீட்டில் எல்லா பாதுகாப்பையும் மீறி திருடன் நுழைந்து விட்டான் என வைத்துக் கொள்ளுங்கள். சத்தம் போடுங்கள். ! சத்தம் திருடர்களுக்கு அலர்ஜி.

சத்தம் போடும்போது கூட திருடன் திருடன் என கத்தாதீர்கள் என்பது பெரியவர்கள் காட்டும் வழி ! அப்புறம் எப்படிக் கத்துவது ? தீ…தீ என கத்த வேண்டுமாம். திருடன் திருடன் என கத்தினால் உதவிக்கு வர பலரும் பயப்படுவார்கள். ஆனால் தீ தீ என கத்தினால் எல்லோரும் தயங்காமல் ஓடி வருவார்கள். திருடனிடமிருந்தும் தப்பி விடலாம் !

  1. அடுத்த வீட்டு நட்பு

கிராமத்துக்கும் நகரத்தும் இடையேயான மிகப்பெரிய வேறுபாடு கூடி வாழ்தல் தான். ஒரு கிராமத்திலுள்ள மொத்த நபர்களும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சு வெச்சிருப்பாங்க. எல்லாருமே சொந்தக்காரங்களாகவோ, நண்பர்களாகவோ இருப்பாங்க. நகரத்துல பக்கத்து வீட்ல யார் இருக்கிறது, எத்தனை பேர் இருக்கிறாங்க, அவங்க பேர் என்ன போன்ற பல விஷயங்கள் தெரியவே தெரியாது.

பக்கத்து வீட்டு நபர் வீட்டைக் காலி பண்ணிட்டுப் போனா கூட நாலு மாசம் கழிச்சு தான் தெரியவரும். இது பாதுகாப்புக்கு கொஞ்சம் இடைஞ்சலான விஷயம். அடுத்த வீட்டு மனிதர்களோடு நல்ல ஆரோக்கியமான நட்பும், அன்பும் கொண்டிருப்பது சிக்கல்களிலிருந்து நம்மை காப்பாற்றும்.

ஒருவருக்கொருவர் உதவுவதும், பாதுகாத்துக் கொள்வதும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் ரொம்பவே அற்புதமான விஷயங்கள்.

  1. கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள்.

ஒரு காலத்தில் ரொம்ப கஷ்டமாய் இருந்து, இப்போது மிக சகஜமாய் மாறியிருக்கும் ஒரு விஷயம் இந்த சி.சி.டி.வி காமெராக்கள். ஐயாயிரம் ரூபாய் முதலே இந்த வசதி இப்போது வந்திருக்கிறது. உங்கள் வசதிக்கு ஏற்ப எத்தனை கேமராக்கள் வேண்டுமோ அதைப் பொருத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் உங்களுடைய மொபைலின் மூலமாக உங்கள் வீட்டைக் கண்காணிக்க இது உதவியாக இருக்கும்.

ஒருவேளை அதற்கும் உங்களுக்கு வசதியில்லாத சூழலெனில், போலி கேமரக்களை வாங்கி பொருத்துங்கள். அதாவது பார்வைக்கு கேமரா போல இருக்கும், ஆனால் உண்மையில் கேமரா அல்ல. சில நூறு ரூபாய்களுக்கே இந்த கேமராக்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு வேளை உங்கள் வீட்டில் கார் இருக்கிறதெனில் அதன் ரிமோட் கன்ட்ரோலரை உங்கள் படுக்கையிலேயே வைத்திருங்கள். இரவில் யாரேனும் அத்து மீறி நுழைவதைப் போலத் தோன்றினால் அதிலுள்ள அலாரம் பட்டனை அமுக்குங்கள். உங்கள் கார் கத்தும்.

திருடர்களுக்கு அலர்ஜியான இரண்டு விஷயங்கள் வெளிச்சமும், சத்தமும். அது உங்களைப் பாதுகாப்பாய் வைக்கும் !

கார் இல்லாதவர்களுக்கு, வீட்டுப் பாதுகாப்புக்கான அலாரம் சிஸ்டம்கள் கடைகளிலேயே விற்பனைக்கு வருகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி !

  1. வழக்கத்தை விலக்குங்கள்

ஏதோ ரொம்ப பத்திரமா இருப்பதாக நினைத்துக் கொண்டு ஏமாறும் விஷயங்களில் நாமெல்லாம் கில்லாடிகள். வீட்டை விட்டு வெளியே போகும் போது செருப்புக்கு உள்ளேயோ, மிதியடிக்குக் கீழேயோ, தொட்டிச் செடியிலோ எங்கேயாவது சாவியை வைத்து விட்டு உலக மகா பாதுகாப்பாய் இருப்பது போல கற்பனை செய்து கொள்வோம். திருடர்கள் முதலில் சாவியைத் தேடும் இடங்களே இவை தான்.

அப்படியே சாவி இல்லாவிட்டால் திருடன் திரும்பிப் போவான் என்று நினைக்க வேண்டாம், எனவே அடுத்தடுத்த பாதுகாப்பு அம்சங்களும் அவசியம்.

சாவியை யாரும் கணிக்க முடியாத இடத்தில் மறைத்து வைக்கலாம். அல்லது ரொம்பவே நம்பிக்கைக்குரிய நபரிடம் கொடுத்து வைக்கலாம்.

ஒருவேளை அலுவலகத்துக்கு சாவியை எடுத்துப் போனால், கார்சாவி, அலமாரா சாவி, வீட்டுச் சாவி என எல்லா சாவியையும் ஒரே கொத்தில் போட்டு வைக்காதீர்கள். வாலெட் பார்க்கிங் போன்ற இடங்களில் இந்த விஷயத்தில் இரட்டைக் கவனம் அவசியம்.

நகையையும் பணத்தையும் பீரோவிலோ, தலையணைக்கடியிலோ வைத்துக் கொள்வது ஹைதர் கால பழக்கம். இந்த காலத்தில் வங்கி லாக்கர் தான் ஒரே சிறந்த வழி. மாத தவணை கட்ட வேண்டுமே, ஆண்டுக் கட்டணம் உண்டே என்றெல்லாம் முரண்டு பிடிக்காமல் ஒரு லாக்கர் வாங்கிவிடுவது உசிதம் !

வீட்டில் இருக்கும் அலமாராக்களைக் கூட சன்னலோரத்திலோ, வெளிப்பக்கச் சுவரின் அருகிலோ வைக்காதீர்கள். கொஞ்சம் பாதுகாப்பான உள் அறைகளில் வைத்து விடுவது நல்லது !

  1. பக்கமோ, தூரமோ…

பலரும் செய்யும் ஒரு மாபெரும் தவறு “பக்கத்துல தானே போறேன்.. இப்போ வந்துடுவேன்ல..” என வெகு அலட்சியமாய் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு போவது. பொதுவாக எதிர் தெருவில் இருக்கும் மீன் கடையோ, அடுத்த தெருவில் இருக்கும் காய்கறிக்கடையோ போகும் போது இது நடக்கும் !

கதவைச் சும்மா சாத்திவிட்டுப் போவது, கொல்லைப் பக்கக் கதவைக் கவனிக்காமல் போவது போன்ற பல தவறுகள் நடக்கும். புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா ? பெரும்பாலான விபத்துகள் வீட்டுக்குப் பக்கத்தில் தான் நடக்கிறதாம். காரணம் அப்போது தான் ஹெல்மெட் ஏதும் போடாமல் அலட்சியமாக மக்கள் வண்டியை எடுத்துக் கொண்டு போவார்கள்.

அதே போல் தான் திருட்டும். “டெய்லி போறது தானே…” என போகாதீர்கள். தினமும் உங்களைக் கவனிக்கும் ஒருவனுக்கு அந்த ஐந்து நிமிட இடைவெளியே போதுமானது !

கையில் ஒரு செல் போன் இருக்க வேண்டியது இப்போதெல்லாம் தவிர்க்கக் கூடாததாகி விட்டது. கையில் இருக்கும் செல்போனில் உங்கள் ஏரியா காவல் நிலைய எண்கள், ஆம்புலன்ஸ் நம்பர், மருத்துவமனை எண்கள் என எல்லாம் இருக்க வேண்டியது கட்டாயம்.

நம்பிக்கையான நபர்களுடைய எண்கள் “ஸ்பீட் டயல்” செய்ய வசதியாய் இருந்தால் ரொம்ப நல்லது. எமர்ஜன்சி எண், போன் லாக்காகி இருந்தால் கூட தெரிவது போல அமைத்துக் கொள்ளுங்கள்.

 

  1. சந்தேகம் நல்லது.

தெரியாத நபர் விற்பனைக்காகவோ, வேறு ஏதாவது விஷயம் சொல்லிக் கொண்டோ வந்தால் கதவைத் திறக்காமல் இருப்பது புத்திசாலித் தனம். “அம்மா, வாட்டர் ஃபில்டர் சரி பண்ண ஆபீஸ்ல இருந்து வந்திருக்கேன்” என வருவது ஒரு திருட்டு ஐடியா. அந்த நபரை வெளியிலேயே நிற்க வைத்து விட்டு அந்த அலுவலகத்துக்குப் போன் பண்ணி விஷயம் உண்மை தானா என தெரிந்து கொள்ளுங்கள்.

ஏசி சர்வீஸ், வாஷிங் மெஷின் சர்வீஸ் என்பதெல்லாம் கப்சாவாகக் கூட இருக்கலாம். அலுவலக எண்களையெல்லாம் ஒரு இடத்தில் பத்திரமாய் எழுதி வையுங்கள்.

எக்காரணமும் கொண்டும் வருபவனிடமே “உன் ஆபீஸ் நம்மர் என்னப்பா ?” என அப்பாவியாய்க் கேட்காதீர்கள். ஏமாந்து விடுவீர்கள்.

இப்போது புதிது புதிதாக போலியோ ஊசி போடணும், கணக்கெடுக்கணும், ஈபி வேலை செய்யுதா, வாட்டர் டேங்க்ல குளோரின் போடணும் இப்படி என்ன ஐடியாவோடு வந்தாலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பட்டியலில் இருக்கலாம் !

அதே போல, உங்கள் வாழ்க்கையையும் ஒரு அட்டவணைக்குள் அடக்காதீர்கள்.  “ஷார்ப்பா 8 மணிக்கு கோயில் போவாங்க,, 9.45 க்கு வருவாங்க” என்பது போல ஒரு பக்கா பிளான் போட்டு வாழும் பார்ட்டிகள் எதிராளிக்கு எளிதானவர்கள். எப்போ எங்கே போவாங்க, எப்போ வருவாங்க என்பதே தெரியாதபடி இருப்பது ஒரு வகையில் எதிராளியைக் குழப்பும். ஒரே வழியில் போவது, ஒரே மாதிரி செயல்படுவது இதையெல்லாம் தவிர்த்தல் நலம்.

  1. குரல்கள் ஏமாற்றும்.

வீட்டுக்கு யாராச்சும் தொலைபேசினால் உங்கள் ஜாதகத்தையெல்லாம் அங்கே கூறிக்கொண்டிருக்காதீர்கள். வங்கியிருந்து பேசுகிறேன், இன்சூரன்ஸ் நிலையத்திலிருந்து பேசுகிறேன், டெலபோன் ஆபீஸ்ல இருந்து பேசுகிறேன் என்றெல்லாம் கால்கள் வரக் கூடும். என்ன விஷயம் என்பதை முழுமையாய் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எக்காரணம் கொண்டும் போனில் உங்களுடைய கார்ட் நம்பர், பாஸ்வேர்ட், பிறந்த நாள், பின் நம்பர் போன்றவற்றையெல்லாம் கொடுக்கவே கொடுக்காதீர்கள். முடிந்தால் போனை கட் பண்ணி நீங்களே மீண்டும் வங்கிக்குத் தொடர்பு கொள்ளுங்கள். பேசுங்கள்.

நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா ? தனியாக இருக்கிறீர்களா ? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நோக்கில் போன் கால்கள் வரக் கூடும் !

மொபைலிலோ, வீட்டு போனிலோ மிஸ்ட் கால் வந்திருப்பதைப் பார்த்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்வோம் இல்லையா ? அதில் கூட எச்சரிக்கை தேவை. எதிர் நபர் நமக்குத் தெரியாத நபர் எனில் துவக்கத்திலேயே ‘சாரி.. ராங் நம்பர்” என்று சொல்லி வைத்து விடுங்கள். “நீங்கள் யார், எங்கே இருக்கிறீர்கள்” என மறு முனை விசாரித்தால் பதிலளிக்க மறுத்து விடுங்கள்.

மிஸ்ட் கால்கள் உங்களை தவறை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். அல்லது உங்கள் வீட்டு ரகசியங்களை அறிந்து திருடத் திட்டமிடும் தில்லாலங்கடி யுத்திகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*

நன்றி : பெண்மணி மாத இதழ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.