உழைப்பைக் கழித்தால்
வாழ்க்கை
வடிகட்டியில்
எதுவும் மிஞ்சுவதில்லை.
வாழ்வா சாவா
போராட்டத்தில் மட்டுமே
உயிரைக் கொடுத்து
உழைத்தல் நியாயமில்லை.
வாசலைப் பெருக்குவதிலும்
உன்
திறமையைத் தெரிவி.
விளையாட்டைக் கூட
அலுவலாய் பாவித்தல்
விலக்கி விடு,
அலுவலைக் கூட
விளையாட்டுபோலப் பாவித்தலே
அவசியமானது.
பணி பல்லக்கல்ல
படுத்துத் துயில,
அது தேர்
அதை நீ தான் இழுக்க வேண்டும்.
இழு.
வியர்வை
உடலின் புன்னகை.
தவறாமல் புன்னகை செய்.
பல்கலைக் கழகங்கள்
வேலைக்கான ஒத்திகை மேடைகளல்ல
அவை
தானியங்கி மனிதர்களைத்
தயாரிக்கும்
தயாரிப்பு நிலையம்.
வாசக சாலைக்கும்
வாகன சாலைக்கும் இடையே
பதறாமல் நடக்க
பாதங்களைப் பழக்குமிடம்.
எனவே,
கல்லூரியின் வழியனுப்பல் கதவு
அலுவலக
வரவேற்பறையில்
முடிதல் சாத்தியமில்லை.
கவலை துற.
ஆயுள்கால
அடிமை எண்ணங்களை
உழைப்பு
நிரந்தர வெளியேற்றம் செய்கிறது.
உழை.
செரிக்க மறுக்கும்
உணவைப்போல,
சில பணிகள்
தொண்டைக் குழிக்குள் திணறும்.
வேப்பங்காய் வைத்தியமாய்
சில
உள்நாக்கில் கசக்கும்.
ஆனாலும்,
மனது மட்டும் மனது வைத்தால்
அறுசுவையில் ஒன்றே
கசப்பென்பது புரியும்.
பணி,
பணிவையும் கூடவே
வளர்க்க வேண்டும்.
யாரோ சொல்லக் கேட்டதுண்டு.
“கீழ்ப்படி”,
பிறகே மேல்படி.
வேலை தேடும்
நண்பர்களே,
கவலை வேண்டாம்.
வேலையிலேயே கடினமான வேலை,
வேலை தேடும் வேலை தான்.
மிக மிக அருமை
மிகக் குறிப்பாய் எதைச் சொல்வது ?
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
LikeLiked by 1 person