புதிய தலைமுறை : குரூப் டிஸ்கஷன்

Image result for Group Discussion

குரூப் டிஸ்கஷனை தமிழில் குழு உரையாடல் என்றோ குழு விவாதம் என்றோ சொல்லலாம். முதன் முதலாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர முயற்சி செய்கிறீர்களெனில் பெரும்பாலும் நீங்கள் இந்த கிணறைத் தாண்டியாக வேண்டும். வேலைக்கு விண்ணப்பிக்கும் ஏராளமான நபர்களிடமிருந்து ஒரு சிலரை மட்டும் பிரித்தெடுக்க பெரும்பாலும் இந்த குழு விவாதம் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு உங்களைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்தும்.  உங்களுடைய குணாதிசயம் என்ன ?, தன்னம்பிக்கை எப்படி இருக்கிறது ? கம்யூனிகேஷன் எப்படி இருக்கிறது ? தலைமைப் பண்பு எப்படி இருக்கிறது ? குழுவாய் செயல்படும் தன்மை உண்டா ? திறந்த மனம் உடையவரா ? என பல்வேறு விஷயங்களை இந்த குழு உரையாடல் புட்டுப் புட்டு வைக்கும்.

ஜாலியா உக்காந்து அரட்டையடிக்கத் தெரியுமா ? ஏதாச்சும் ஒரு தலைப்பைக் கொடுத்தா அதைத் துவச்சு காயப் போடுவீங்களா ? அது தான் குழு விவாதம். குட்டிச் சுவரிலோ, டீக் கடை பெஞ்சிலோ, காபி ஷாப்பிலோ சர்வ சாதாரணமாய் நடக்கிற ஒரு நிகழ்ச்சி தான். அதை அப்படியே ஒரு இன்டர்வியூ முறை என்று சொல்லும் போது பதட்டம் வந்து விடுகிறது.

இது எப்படி நடக்கும் ?

ஒரு அறையில் சுமார் பத்து பேரை அமர வைப்பார்கள். அது பெரும்பாலும் ஒரு வட்ட மேஜை மீட்டிங் போல இருக்கும். ஓரமாய் அமர்ந்து ஒன்றோ இரண்டோ நபர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன பேசுகிறீர்கள் என்பதைக் கண்காணித்து உங்களுக்கு மதிப்பெண் வழங்குவார்கள். யாருக்கு அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றதாய் அறிவிக்கப்படுவர். அவ்வளவு தான் !

உள்ளே நுழைந்ததும் ஒரு தலைப்பு தரப்படும். அந்த தலைப்பு எதுவாகவும் இருக்கலாம். கருப்புப் பணம் ஒழியுமா என்பதாகவோ, கபாலியில் ரஜினி இறந்து விட்டாரா என்பதாகவோ இருக்கலாம். தலைப்பு இங்கே விஷயமில்லை. நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள் என்பது தான் விஷயம். தலைப்பு புரியவில்லையேல் முதலிலேயே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உள்ளே நுழையும்போதே ஒரு பேனா, ஒரு பேப்பர் கையோடு கொண்டு செல்லுங்கள். அது உங்களுக்கு ரொம்பவே கைகொடுக்கும். மனதில் தோன்றும் கருத்துகளை சின்னச் சின்னக் குறிப்புகளாக எழுதி வைத்தால் எதையும் தவற விடாமல் பேச உதவும்.

தைரியமும், மொழிப் பரிச்சயமும், தன்னம்பிக்கையும் உடையவர்கள் பளிச் பளிச் என பேசி ஸ்கோர் செய்வார்கள். தயங்கித் தயங்கி நிற்பவர்கள் அப்படியே திரும்பிப் போக வேண்டியது தான். அதற்காக பேசிக்கொண்டே இருக்க வேண்டுமென்பதில்லை. முப்பது முதல் நாற்பது வினாடிகள் வீதம், மூன்று அல்லது நான்கு முறை பேசுங்கள். அது போதும்.

நிறுவனங்கள் ஒரு குழுவாக இயங்கும் அமைப்புகள். அதில் தனிநபர் சாதனைகளை விட எப்படி குழுவாய் இணைகிறீர்கள் என்பதும் முக்கியம். அதனால் தான் இத்தகைய உரையாடல்கள் உங்களுடைய பன்முகத் தன்மையை உங்களை அறியாமலேயே வெளியே கொண்டு வரும்.

உங்களுக்கு மொழியில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டியது அவசியம். காலேஜ்ல படிக்கும் போதே ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வது இங்கே உங்களுக்குக் கைகொடுக்கும். கிராமத்து இளைஞர்கள் பெரும்பாலும் தடுமாறும் இடம் இது. சிலர் உடைந்த ஆங்கிலத்தை வைத்துக் கொண்டே பிச்சு உதறுவார்கள். அவர்களுடைய தன்னம்பிக்கையும், இலட்சியமும் தான் அதன் காரணிகள்.

உங்களுடைய தலைமைப் பண்பு எப்படி இருக்கிறது என்பது இங்கே கவனிக்கப்படும். ஒரு தலைப்பைக் கொடுத்தவுடன் முதலில் தைரியமாகப் பேசி தனது கருத்தை முன்வைப்பவருக்கு ஸ்பெஷல் மதிப்பெண் உண்டு. சொல்ல வருகின்ற விஷயம் எதுவானாலும் அதை தெளிவாய்ச் சொல்ல வேண்டும் என்பது பாலபாடம்.

இன்னொருவர் சொல்கின்ற கருத்தை ஒட்டியோ, வெட்டியோ நீங்கள் பேசலாம். உங்களுடைய மனதில் எது சரியெனப் படுகிறதோ அந்தப் பக்கம் நின்று பேசுங்கள். ஆனால் அங்கேயும் இங்கேயுமாக பல்டி அடிக்காதீர்கள். அது உங்களுக்கு எதிராய் முடியலாம். வெட்டிப் பேசுவதாய் இருந்தால் அதற்கான ஜஸ்டிபிகேஷன் ரொம்ப முக்கியம். பேசும்போது மற்றவர்களுடைய கண்களைப் பார்த்து பேசுவது நல்லது.

ஒருவர் சொல்லும் கருத்தை விட்டு முற்றிலும் விலகி, தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களைப் பேசுவது அதிக பயனளிக்காது. கபாலி பற்றிப் பேசச் சொல்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு சினிமா பார்க்கும் வழக்கமே இல்லை. என்ன செய்யலாம் ? “கபாலி எனும் கதாபாத்திரம் இறந்தால் என்ன வாழ்ந்தால் என்ன ? அதனால் சமூகத்துக்கு என்ன மாற்றம் வரப் போகிறது ? திரையரங்கு முதல் நிறுவனம் வரை நாம் அதைப் பற்றிப் பேசவேண்டுமா ?” என்பது போன்ற போல்டான எதிர் கருத்துகளை சொல்லலாம் !

குழு உரையாடல் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தான் நடக்கும். அவ்வளவு நேரமும் வெட்கம், தயக்கம், பயம் எல்லாவற்றையும் ஒதுக்கி வையுங்கள். “அடுத்தவன் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் கவலையில்லை” எனும் மனப்பான்மையை மனதில் கொள்ளுங்கள். தைரியம் தானாய் வந்து விடும்.

லேட்டஸ்ட் விஷயங்கள், புள்ளி விவரங்கள், அறிஞர்களின் கருத்துகள் போன்றவற்றை உங்கள் உரையாடலில் சொருக முடிந்தால் ரொம்ப நல்லது. ஸ்பெஷல் மதிப்பெண்கள் கிடைக்கும். என்ன பேசினாலும் அதை தைரியமாய் பேசுங்கள்.

ஒரு விஷயத்தை மற்றவர்கள் அணுகாத கோணத்திலிருந்து நீங்கள் பேசினால் ரொம்ப நல்லது. அட, இப்படியெல்லாம் சிந்திக்கிறானே, செம கிரியேட்டிவிட்டி என தேர்வாளர் நினைத்தால் நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள்.

ரொம்ப மெதுவாகப் பேசாதீர்கள், ‘உங்களுக்கு தன்னம்பிக்கை இல்லை, சொல்லும் கருத்திலேயே உங்களுக்கு பற்றுறுதி இல்லை’ என்பதன் அடையாளம் அது. ரொம்ப கத்திப் பேசாதீர்கள், “நீங்கள் சர்வாதிகார மனநிலை உடையவர் என்பதன் அடையாளம் அது”. எல்லோருக்கும் கேட்கும் வகையில், தெளிவாக பேசுங்கள். அதுவே சரியானது.

ஒருவர் ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தால் நீங்கள் அவரை இடைமறித்து உங்களுடைய கருத்தைச் சொல்ல ஆரம்பியுங்கள். “மைக்கை அவர் கிட்டே குடுங்க” என யாரும் இங்கே சொல்வதில்லை. வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதை நாகரீகமாய் நாசூக்காய் சொல்ல வேண்டும். அதே போல நீங்கள் அதிக நேரம் நீட்டி முழக்காமல் அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

பேசும்போது குழுவிலுள்ள நபர்களைப் பார்த்து தான் பேச வேண்டும். தேர்வாளர்களைப் பார்த்து பேசக் கூடாது. அது நெகடிவ் மார்க். இது குழு விவாதம் என்பது மனதில் இருக்கட்டும். பேசும்போது தனி நபர் தாக்குதல்கள் கூடவே கூடாது. விவாதம் எல்லாம் தலைப்போடு மட்டுமே இருக்கவேண்டும்.

எல்லா தலைப்புகளும் நமக்கு பிடித்தமானதாய் இருக்க வேண்டுமென்றில்லை. நமக்கு பிடிக்காத தலைப்பு கூட தரப்படலாம். கவலையில்லை. ஏதோ கிடைக்கும் ஒரு சில பாயின்ட்களை வைத்துப் பேசலாம். நல்ல பாயின்ட்ஸ் கிடைச்சா தான் பேசுவேன் என நினைக்கக் கூடாது. சில நேரங்களில் இதெல்லாம் கூட்டமான‌ டவுன் பஸ் என நினைத்து, கிடைக்கும் கம்பியில் தொங்க வேண்டியது தான். அசௌகரியமாய் இருந்தாலும் பயணம் சாத்தியப்படும்.

பாடி லேங்குவேஜ் எனப்படும் உடல் மொழி ரொம்ப ரொம்ப முக்கியம். அடுத்தவர் பேசும்போது கவனிப்பது, நாம் பேசும்போது ஒரு சின்ன புன்னகையுடன் நமது கருத்துகளை எடுத்து வைப்பது, கையை ஆட்டியபடியோ, புருவத்தை உயர்த்தியபடியோ, மேஜையில் மெதுவாய் தட்டியபடியோ நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கவனிக்கப்படும். ஏன் நாம் எப்படி அமர்ந்திருக்கிறோம் என்பது கூட கவனிக்கப்படும். எனவே ரோபோ மாதிரி அமர்ந்து, உணர்ச்சியில்லாமல் பேசவே பேசாதீர்கள். ஒப்பிப்பது போலவும் பேசாதீர்கள்.

குழு விவாதம் என்பது குழாயடிச் சண்டையல்ல. சாதிச்சண்டையல்ல. அரசியல் சண்டையல்ல. இது ஒரு புரஃபஷனல் டிஸ்கஷன். எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழந்து கத்துவதோ, சாதி, இன, மத, மொழி, அரசியல் பிரிவினைகள் சார்ந்து பேசுவதோ கூடவே கூடாது. அது சொந்தக் காசில் சூனியம் வைப்பதற்குச் சமம்.

தாழ்மையுடன் பேசுங்கள். அதே நேரம் வலிமையாய் உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள். பேசிய அதே கருத்தை திரும்பத் திரும்ப பேசாதீர்கள். அது சலிப்பையே உருவாக்கும். அடுத்தவர்கள் பேசும்போது கவனியுங்கள், தலையாட்டுங்கள் அவையெல்லாம் நீங்கள் குழுவாய் செயல்படும் குணாதிசயம் உள்ளவர்கள் என காண்பிக்கும்.

கேட்பதற்கு எளிமையாய் தோன்றினாலும் சரியான பயிற்சி இல்லையேல் குழு உரையாடல் பதட்டத்தையே வருவிக்கும். எனவே உங்கள் நண்பர்கள் நான்கைந்து பேராக அமர்ந்து கொண்டு இத்தகைய குழு விவாதங்களை நடத்திப் பாருங்கள். உங்களுடைய பலம் பலவீனம் உங்களுக்குத் தெரியவரும்.

யூடியூப் போன்ற தளங்களில் குரூப் டிஸ்கஷன் டிப்ஸ் நிறைய கிடைக்கும். அவற்றைப் பார்த்தால் அதைக்குறித்த அதிக புரிதல் கிடைக்கும். இணையம் எனும் கடலில் மூழ்கி குரூப் டிஸ்கஷன் முத்தையும் எடுங்கள்.

நமது நோக்கமெல்லாம், அந்த பத்து பதினைந்து நிமிடங்களில் தேர்வாளர்களை வசீகரிக்க வேண்டும். அவ்வளவு தான். வசீகரியுங்கள் வாழ்த்துகள்.

Image result for Group Discussion

பத்து கட்டளைகள்

  1. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறருடைய விமர்சனங்களுக்குப் பயப்படாமல் தைரியமாய் பேசுங்கள்.

  1. உரையாடலை முதலில் துவங்குவது சிறப்புக் கவனம் பெறும். அதற்கு முயற்சி செய்யுங்கள்.

  1. பதினைந்து முதல் இருபது வினாடிகள் வீதம், மூன்று அல்லது நான்கு முறை பேசுங்கள்.

  1. செவிமடுங்கள். அடுத்தவர்கள் பேசும் கருத்துகளைக் கவனமாய்க் கேட்டு அதை ஒட்டியோ, வெட்டியோ பேசுங்கள்.

  1. உடல் மொழி ரொம்ப முக்கியம். நிமிர்ந்து அமர்வது, கண்களைப் பார்த்து பேசுவது, அசைவுகளால் பேசுவது என உடல்மொழியில் கவனம் செலுத்துங்கள்.

  1. நிறைய பயிற்சி எடுங்கள். ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். யூடியூப் போன்ற தளங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  1. வித்தியாசமான கோணத்திலிருந்து ஒரு விஷயத்தைப் பேச முடியுமா என பாருங்கள்.

  1. சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்ப சொல்லாதீர்கள். உங்கள் கருத்தையே நீங்கள் மறுத்தும் பேசாதீர்கள்.

  1. தெளிவாய், நேர்த்தியாய் பேசுங்கள். அதே நேரம் தாழ்மையாய் பேசுங்கள். சண்டைகள், தனிநபர் சண்டைகள் தவிருங்கள்.

  1. பேசும்போது குழுவிலுள்ள நபர்களின் கண்களைப் பார்த்து அவர்களோடு பேசுங்கள். அந்த பத்து பதினைந்து நிமிட குழு உரையாடலில் நீங்கள் தேர்வாளர்களால் கவனிக்கப்படுவதை உறுதி செய்யுங்கள்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s