புதிய தலைமுறை : ஹைச்.ஆர் இன்டர்வியூ

வேலை நமதே தொடர் – 3

Image result for HR Discussion

அப்பாடா எல்லா தேர்விலயும் ஜெயிச்சாச்சு, எல்லா இன்டர்வியூவிலும் ஜெயிச்சாச்சு, இனிமே வேலைக்கான ஆர்டர் வரவேண்டியது தான் பாக்கி என நினைத்துக் கொண்டிருக்கும் போது சொல்வார்கள். “உங்களுக்கு ஹைச்.ஆர்.இன்டர்வியூ பாக்கி இருக்கு !”

என்னது ஹைச்.ஆர்.இன்டர்வியூவா என ஒரு நிமிடம் குழம்பி வேறு வழியில்லாமல் மீண்டும் பதட்டத்துக்குள் விழுந்து விடுவோம். அதெல்லாம் தேவையில்லை. ஹைச்.ஆர்.இன்டர்வியூ என்றால் என்ன ? அதில் என்னென்ன நடக்கும் ? என்னென்ன கேட்கப்படும் ? போன்ற விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தால் அதையும் மிக எளிதாகக் கடக்கலாம்.

மற்ற இன்டர்வியூக்களுக்கும் இதற்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற இன்டர்வியூக்களிலெல்லாம் என்ன படிச்சோமோ அதைச் சார்ந்து தான் கேள்விகள் இருக்கும். அல்லது வேலைக்கு என்ன தேவையோ அது சார்ந்த கேள்விகள் மட்டும் தான் இருக்கும். ஆனால் எச்.ஆர். இன்டர்வியூவில் எதையுமே யூகிக்க முடியாது ! காரணம், எச்.ஆர்.இன்டர்வியூ உங்களுடைய திறமையைச் சோதிப்பதல்ல, உங்களுடைய இயல்பைச் சோதிப்பது.

எச்.ஆர்.இன்டர்வியூவில் சொல்லும் பதில்களை வைத்து மட்டும் நீங்கள் அளவிடப்படுவதில்லை. சொல்லாத பதில்களும் அங்கே கணக்கில் எடுக்கப்படும். அலுவலக ரிஷப்சனில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் ? பொறுமையாய் அமர்ந்திருந்தீர்களா ? பதட்டமாய் இருந்தீர்களா ? அங்கே இருந்த வரவேற்பாளரிடம் நீங்கள் புரஃபஷனலாக நடந்து கொண்டீர்களா ? அங்கே நின்றிருந்த செக்யூரிடியிடம் கனிவாக நடந்து கொண்டீர்களா ? என எல்லா விஷயங்களும் கவனிக்கப்படலாம்.

எல்லா இடங்களிலும் உங்களை ரகசியக் கேமராவால் கண்காணிப்பார்கள் என்று அர்த்தமல்ல. அப்படி ஒரு கவனிப்புக்கு சகல சாத்தியக் கூறுகளும் உண்டு என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.

கணிதத்தில் 2 + 2 = 4 என்பது போல எச்.ஆர்.இன்டர்வியூவில் இது தான் சரியான‌ விடை என்று எதுவும் இல்லை. நீங்கள் சொல்வதை வைத்து உங்களுடைய குணாதிசயத்தைப் புரிந்து கொள்வார்கள்.

உதாரணமாக, இந்த வேலைக்கு நீ பொருத்தமானவன் என எப்படி நினைக்கிறாய் ? என ஒரு கேள்வி வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பதில் இப்படியும் இருக்கலாம்,

“இது என்னுடைய விருப்ப ஏரியா. நான் இதைக்குறித்து தெரிந்து வைத்திருக்கிறேன். எனக்கு முன் அனுபவம் உண்டு. என்னால் நிச்சயம் இந்த வேலையைச் செய்ய முடியும் என நம்புகிறேன். இதே போன்ற இன்னொரு தொழில்நுட்பமும் எனக்குத் தெரியும், எனவே இந்த வேலையை இன்னும் தெளிவாகச் செய்ய முடியும் என நம்புகிறேன்”

அல்லது, உங்கள் பதில் இப்படியும் இருக்கலாம்.

“வந்து.. இது புது ஏரியா கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு. பட் மேனேஜ் பண்ணிடுவேன். எந்த வேலைன்னாலும் செய்து தானே ஆகணும். லெட்ஸ் சீ.. கொஞ்ச நாள்லயே கத்துக்கலாம்ன்னு நினைக்கிறேன்”

இந்த ரெண்டு பதில்களையும் ஒருமுறை கவனமாய்ப் பாருங்கள். ஒன்றில் தன்னம்பிக்கை தெரிகிறது. தனக்குத் திறமை இருக்கிறது, எதிர்பார்ப்புக்கும் மேலேயே பரிச்சயம் இருக்கிறது என்பதை நாசூக்காய்ச் சொல்லும் தன்மை இருக்கிறது. இந்த வேலைக்கு நான் தகுதியானவன் என்பதை வெளிப்படுத்தும் உறுதி தெரிகிறது. வேலையைப் பெற்றுவிடும் நாசூக்கு இந்தப் பதிலுக்கு இருக்கிறது.

இரண்டாவது பதிலைப் பாருங்கள். தன்னம்பிக்கை ஆட்டம் காண்கிறது. எப்படியாவது இந்த வேலை எனக்குக் கிடைக்கணும் எனும் எதிர்பார்ப்பு தான் தெரிகிறதே தவிர, தான் அந்த வேலைக்கு தகுதியானவன் எனும் வெளிப்பாடு இல்லை. இத்தகைய பதில்கள் வேலையைப் பெறுவது கடினம்.

சுருக்கமாக, நீங்கள் எச்.ஆர் இன்டர்வியூவில் தன்னம்பிக்கை நிறைந்தவராக, குழுவாக இணைந்து செயல்படக் கூடியவராக தோற்றமளிக்க வேண்டும் !

பொதுவான சில கேள்விகளைக் கேட்பார்கள். அவற்றில் ஒன்று, “உங்களுடைய குறுகிய கால, நீண்டகால திட்டங்கள் என்ன ?” என்பதாய் இருக்கலாம்.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, பொருளாதார திட்டம் எதையும் இங்கே உளறி வைக்காதீர்கள். அலுவலில் உங்களுடைய இலட்சியங்கள் என்ன என்பது தான் நீங்கள் சொல்ல வேண்டியது. உங்கள் கனவுகள் நேரானதாக, நேர்த்தியானதாக இருக்கட்டும். இப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு நீங்கள் பதில்களை ஏற்கனவே தயாரித்து வைப்பது சாலச் சிறந்தது !

அடிக்கடி கம்பெனி தாவும் ஊழியர்களை நிறுவனங்களுக்குப் புடிக்காது. நாளைக்கு நம்மையும் விட்டு விட்டு ஓடி விடுவான் என அவர்கள் நினைப்பார்கள். எனவே நீங்கள் அந்த வகையறாவில் வருவீர்களெனில் கவனமாய் இருங்கள். ஒரு பக்கா பதிலைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு பழைய கம்பெனியையும் தரக்குறைவாய் பேசாதீர்கள். எந்த ஒரு பழைய தலைவரையும் ஏளனமாய் அல்லது இளக்காரமாய்ப் பேசவே பேசாதீர்கள். இங்கேயும் நீங்கள் அப்படித் தான் நடந்து கொள்வீர்கள் என்றே கருதப்படும். அதற்குப் பதிலாக பாசிடிவ் பதில்களையே சொல்லுங்கள்.

உதாரணமாக, “ஏன் வேலையை விட்டீங்க ?” என கேட்டால்

“என்னுடைய திறமையைப் பயன்படுத்தும்படியான வேலை அங்கே இல்லை. எனக்குப் பிடித்த, எனக்குத் திறமை இருக்கிற ஏரியாவில் வேலை செய்ய விரும்புகிறேன். அப்போது தான் என்னுடைய வளர்ச்சியும், நான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்” என்பது போன்ற ஒரு பதிலைச் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு, “அதென்ன சார் கம்பெனி, அங்கே இருக்கிறவனுக்கு விஷயமே தெரியாது” என்றெல்லாம் பேசாதீர்கள். வேலை அதோ கதியாகி விடும்.

இத்தகைய கேள்விகளில் எச்.ஆர் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா ?. நீண்டகாலம் இந்த நபர் நம்முடைய நிறுவனத்தில் பணியாற்றுவான், தெளிவான இலக்கை வைத்திருக்கிறான், நிறுவனத்தின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டிருக்கிறான். எனும் தொனி வெளிப்படுவது தான்.

“என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீங்க ?” எனக் கேட்டால் கொஞ்சம் உஷாராகி விடுங்கள். ஏற்கனவே ஒரு வேலையில் இருந்தால் அந்த சம்பளத்தை விட ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதிகம் கேட்கலாம். அதற்காக கொஞ்சம் சந்தை மதிப்பையும் அலசி வைத்திருங்கள். 25 விழுக்காடு உயர்வு எதிர்பார்க்கிறேன் என்பது போன்ற பதிலே சரியானது.

அவர்கள் உடனே ஒத்துக் கொள்ள மாட்டார்கள், “15 பர்சன்ட் தான் எங்களோட நிறுவன நிறுவனத்தின் எல்லை, என்ன சொல்றீங்க‌” என இழுப்பார்கள். “நான் மார்க்கெட் வேல்யூ தான் கேட்டேன். பட் சேலரி ரொம்ப முக்கியம் இல்லை. எனக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதற்காக உங்கள் நிறுவன சம்பளத்தோடு ஒத்துக் கொள்கிறேன்” என சொல்லலாம். விருப்பமில்லையேல், “சாரி, நான் குறைந்த பட்சம் 20% ஆவது எதிர்பார்க்கிறேன்” என்றும் சொல்லலாம்.

சம்பள விஷயம் பேசும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை தான். ஒன்று, நீங்கள் சம்பளத்துக்காகத் தான் நிறுவனங்களை மாற்றுகிறீர்கள் எனும் எண்ணம் வரக் கூடாது. இரண்டு, நிறுவனத்தின் பார்வையிலிருந்து நீங்கள் யோசிக்க மறுக்கிறீர்கள் எனும் எண்ணம் வரக் கூடாது. மூன்று, பேராசை பிடித்தவன் அல்லது பிடிவாதக்காரன் எனும் எண்ணம் வரக் கூடாது. அதில் கவனமாய் இருங்கள்.

“இந்த நிறுவனத்தை ஏன் தேர்வு செய்தீர்கள் ?” என கேட்கலாம். “சும்மா தான், ஓப்பனிங் இருந்துச்சு மற்றபடி உங்க கம்பெனி பற்றி ஒண்ணும் தெரியாது” என்று சொல்லாதீர்கள். “உங்கள் நிறுவனத்தின் இலட்சியம், இலக்கு, தொழில்நுட்பங்கள் போன்றவை எனக்குப் பிடித்திருக்கிறது. சமீபத்தில் நீங்கள் இந்த தொழில்நுட்பத்தில் நுழைந்திருப்பதை அறிந்தேன், அது என்னை வசீகரித்தது. மட்டுமல்ல, உங்கள் நிறுவனத்துக்கு சந்தையில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது.” என சில விஷயங்களைச் சொன்னீர்களெனில் உங்களுடைய மரியாதை கூடும். அதற்கு நீங்கள் இன்டர்வியூ செல்லும் நிறுவனம் பற்றி நிறைய விஷயங்களை இணையம் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

“உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கா ?” என கடைசி கேள்வி வரும். கேளுங்கள். உங்களுடைய கேள்வியை வைத்துக் கூட உங்களை அளவிடுவார்கள். அதனால் கேட்பதை கவனமாய்க் கேளுங்கள். அபீஸை ரொம்ப தூரமா வெச்சிருக்கீங்களே, பஸ் கிடைக்குமா ?” என்பது போன்ற சில்லறைத்தனமான‌ கேள்விகளை ஒதுக்குங்கள். உங்களுடைய வேலை சார்ந்தவற்றை, அல்லது நிறுவனத்தில் இலக்கு சார்ந்தவற்றைக் கேளுங்கள்.

“இந்த வேலையில் சேரும் ஒருவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள் ? அல்லது என்ன ஆலோசனை கொடுப்பீர்கள்” என்பது போன்ற எளிய கேள்விகளையும் கேட்கலாம்.

இன்டர்வியூ முடிந்ததும் நன்றி சொல்லி கைகுலுக்க மறவாதீர்கள். தன்னம்பிக்கையோடு வெளியே வாருங்கள். நிறுவனம் உங்களைப் பார்த்து பிரமித்து அந்த வேலையை உங்களுக்குத் தரவேண்டுமே தவிர, பரிதாபப்பட்டு தரக்கூடாது. எனவே நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாய் இன்டர்வியூவை முடியுங்கள்.

Image result for HR Discussion

பத்து கட்டளைகள்

  1. எச்.ஆர் இன்டர்வியூ என்பது உங்கள் குணாதிசயத்தைப் பார்ப்பது.

  1. சரியான விடை, தவறான விடை என்பதை விட நேர்மையான விடை, வசீகரமான விடை என்பதே தேவை.

  1. எதையும் பாசிடிவ் ஆக அணுகும் மனநிலை வரவேற்கப்படும்.

  1. தன்னம்பிக்கை ரொம்ப ரொம்ப முக்கியம். நேர்த்தியான ஆடை, தெளிவான பார்வை இருக்கட்டும்.

  1. எதிர்பார்ப்புகளைப் பற்றிப் பேசும்போது சதவீதம் மற்றும் சந்தை மதிப்பீடு வைத்துப் பேசுவது நல்லது

  1. பழைய நிறுவனங்களைப் பற்றி தவறாய்ப் பேசாதீர்கள். நேர்மையான காரணங்கள் இல்லையேல் கம்பெனி மாறாதீர்கள்.

  1. புது நிறுவனம் பற்றிய விஷயங்களைத் தெரிந்து வைத்திருங்கள்.

  1. நேர்மையாய் இருங்கள், நிறுவனத்தின் வளர்ச்சியில் ஆர்வம் உடையவராய் இருங்கள்.

  1. நல்ல ஒரு கேள்வி கேட்டு உங்கள் மரியாதையை உயர்த்துங்கள்.

  1. நன்றி சொல்லி தன்னம்பிக்கை கலந்த புன்னகையோடு விடை பெறுங்கள்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s