புதிய தலைமுறை : நேர்முகத் தேர்வு

வேலை நமதே தொடர் – 4

Image result for Job Interview

இன்டர்வியூ என்றதும் பலருக்கு கை கால் நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து விடும். எல்லா தெய்வங்களுக்கும் வேண்டுதல் விடுத்தாலும் அவர்களுடைய பயம் போகாது. அந்த பதட்டமே பெரும்பாலும் வேலைக்கு வேட்டு வைத்து விடுகிறது.

இன்டர்வியூ என்பது ஒரு உரையாடல். ஒரு பரிசீலனை அவ்வளவு தான். நிறுவனம் எதிர்பார்க்கும் தகுதிகள் உங்களிடம் இருக்கிறதா என்பதை நிறுவனம் சோதித்துப் பார்க்கும். உங்கள் திறமைக்கு தீனி போடும் நிறுவனம் தானா அது ? என்பதை நீங்கள் சோதித்துப் பார்ப்பீர்கள் அவ்வளவு தான். மற்றபடி இதொன்றும் குற்றவாளியிடம் போலீஸ்காரர் நடத்தும் விசாரணை அல்லை !

இங்கே நிராகரிப்பது நிறுவனங்கள் மட்டுமல்ல. ஏராளமான பணியாளர்கள், “எனக்கு இந்த கம்பெனி புடிக்கல” என கிடைக்கும் வேலையை உதறுகிறார்கள். ஐடி நிறுவனங்க‌ளில் 30% ஊழியர்கள் இப்படி நிறுவனத்தை நிராகரிக்கின்றனர்.  எனவே இது ஒரு புரஃபஷனல் டிஸ்கஷன் எனுமளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்.

சிலர் நேர்முகத் தேர்வுக்கு வந்தமரும் போதே அவர்களுடைய கண்களும் முகமும் அவர்களுடைய பலவீனத்தைக் காட்டிக் கொடுத்து விடும். ஏதோ எஜமானன் வீட்டில் கைகட்டி வாய்பொத்தி நிற்கும், “சொல்லுங்க எஜமான்” டைப் மக்கள் ஒரு ரகம். வேட்டைக்காரன் முன்னால் மிரட்சியுடன் நிற்கும் மான்களைப் போன்ற மக்கள் இன்னொரு ரகம். அவர்களுக்கெல்லாம் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதைப் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மெலிதான புன்னகை. தன்னம்பிக்கையான பார்வை. இவை இரண்டும் மிகவும் முக்கியம். “இந்த வேலை கிடைக்காவிட்டால் உலகமே இருண்டு விடும்” என நினைத்து மனதைப் போட்டுக் குழப்பாதீர்கள். எது நமக்குரியதோ, அது நமக்குக் கிடைக்கும் எனும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை இயல்பாய் செயல்பட வைக்கும்.

எந்த வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறீர்கள் என்பதில் நல்ல தெளிவு அவசியம். அப்போது தான் அந்த வேலைக்குத் தேவையான தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்தவும், அந்த வேலைக்குத் தக்கபடி நம்மை முன்னிலைப் படுத்தவும் முடியும்.

கொஞ்சம் முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். எப்போது இன்டர்வியூ, எங்கே இருக்கிறது ஆபீஸ், எந்த ஃப்ளோர், யாரைச் சந்திக்க வேண்டும் போன்ற விஷயங்களைத் தெளிவாக அறிந்து வைத்திருங்கள். தடுமாற்றங்கள் குறையும், பதட்டமில்லாமல் இன்டர்வியூவைச் சந்திக்க முடியும்.

நேர்முகத் தேர்வு மதியம் நடக்கிறதெனில் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு காலையிலேயே போய் நிற்காதீர்கள். ஒரு பத்து பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு செல்வது போதுமானது. அதிகபட்சம் அரைமணி நேரம். அதற்கு முன் வேண்டாம்.

என்னென்ன கொண்டு செல்ல வேண்டும் என்பதை முதலிலேயே கேட்டு தெரிந்து வைத்திருங்கள். புரஃபைல், போட்டோ, சான்றிதழ்கள் என தேவைகள் எதுவாகவும் இருக்கலாம். தேவைக்குத் தக்கபடி அனைத்தையும் கைகளில் வைத்திருங்கள்.

மிக முக்கியமான ஒன்றைச் செய்யுங்கள். எந்த நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறீர்களோ அந்த நிறுவனத்தைப் பற்றிய தகவல்களை சேகரியுங்கள். இன்றைய டிஜிடல் யுகத்தில் இது ரொம்பவே ஈசி. நிறுவனத்தின் நோக்கம் என்ன ? அவர்கள் என்ன செய்கிறார்கள் ? என்ன செய்ய உத்தேசித்திருக்கிறார்கள் ? என்னென்ன தொழில் நுட்பங்கள் பயன்படுத்துகிறார்கள் போன்ற விஷயங்களைத் தெரிந்து வைத்திருங்கள்.

நிறுவனத்தைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும். நீங்கள் அந்த வேலையை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என நிறுவனம் உங்களை மதிக்கும்.

உங்கள் பயோடேட்டா மிக முக்கியம். அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் அக்கு வேறு ஆணி வேறாக உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும். அது ரொம்ப முக்கியம் அதுவே சரியா தெரியலேன்னா நீங்கள் சொல்வதெல்லாம் பொய் என ஒரு பிம்பம் உருவாகக் கூடும்.

சமூக வலைத்தளங்களில் உங்கள் ஈடுபாட்டை சீர் செய்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை ஃபேஸ்புக், டுவிட்டர், லிங்க்ட் இன் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து உங்களை அறியாமலேயே எடுத்து விடுகின்றன. எனவே அத்தகைய வலைத்தளங்களில் உங்களை ஒரு பாசிடிவ் மனிதனாக காட்டிக் கொள்ளுங்கள்.

நல்ல நேர்த்தியான ஆடை உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்கிறது உளவியல். எனவே இன்டர்வியூ செல்லும்போது எது உங்களுக்கு அதிகம் பிடித்தமானதாய் இருக்கிறதோ அந்த ஆடையை அணிந்து கொள்ளுங்கள். நிறுவனத்தில் எல்லைக்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து உங்களுடைய இன்டர்வியூ தொடங்குகிறது என நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அங்கே நடந்து கொள்ளும் விதம், பேசும் விதம், மற்றவர்களுடன் பழகும் விதம் எல்லாமே கவனிக்கப்படலாம்.

இன்டர்வியூ நடக்கும்போது தெளிவாய் இருங்கள். தெரிந்த அனைத்தையும் சொல்வதற்கானதல்ல நேர்முகத் தேர்வு. கேட்கும் விஷயங்களுக்கான பதிலைச் சொல்வது மட்டும் தான். ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் இரண்டு மூன்று நிமிடங்களில் சொல்லுங்கள். விரிவாகச் சொல்லும்படி கேட்டால் மட்டும் விலாவரியாய் சொல்லுங்கள்.

கேள்விகளை கவனமாய்க் கேட்கவேண்டும் என்பது பாலபாடம். கேள்வி முடியும் முன் பதில் சொல்ல ஆரம்பிக்காதீர்கள். அதே போல, இடைமறித்துப் பேசும் பழக்கமும் வேண்டாம். கேள்வி கேட்டு முடித்தபின் அது புரிந்தது என உள்ளுக்குள்ளே ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு பதிலைச் சொல்லுங்கள்.

பழைய நிறுவனத்தைப் பற்றி எந்த எதிர்மறை கருத்துகளையும் சொல்லாதீர்கள். நிறுவனம் மாறியதற்கான காரணம் உங்களுடைய வேலையின் முன்னேற்றம் சார்ந்ததாகவோ, உங்களுடைய எதிர்கால திட்டம் சார்ந்ததாகவோ இருப்பது நல்லது.

“உங்களைப் பற்றி சொல்லுங்கள்” எனும் கேள்வி நிச்சயம் எழும். அப்போது உங்களுடைய பலம், உங்கள் ஸ்பெஷல் குணாதிசயங்கள், படிப்பு, திறமை போன்ற முக்கியமான அம்சங்களைப் பேசுங்கள். உங்களைப் பற்றி என்றதும், நீங்கள் சின்ன வயதில் ஓடி விளையாடிய கதைகளைப் பேசி போரடிக்காதீர்கள். அதுவல்ல இங்கே எதிர்பார்க்கப்படுவது !

உங்களுடைய கல்வி நாட்கள், அல்லது வேலை நாட்களில் ஏதேனும் சிறப்பு அங்கீகாரங்கள், விருதுகள், சாதனைகள் பெற்றிருந்தால் அதை நிச்சயம் குறிப்பிடுங்கள். அவை உங்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரிக்கும்.

எந்த இன்டர்வியூவுக்குச் செல்லும் முன்பும் ஒரு சோதனை இன்டர்வியூ நடத்திப் பாருங்கள். நண்பரை உதவிக்கு அழையுங்கள். யாரும் கிடைக்கவில்லையேல் உங்கள் வீட்டுக் கண்ணாடியே கூட போதும். குறிப்பாக இன்டர்வியூக்களில் கேட்கப்படும் பொதுவான கேள்விகளை மாதிரியாய் வைத்துப் பயிற்சி செய்யுங்கள். அப்படிப்பட்ட கேள்விகளை எழுதி வைத்துக்கொண்டு அதற்கு எப்படி பதிலளிக்கலாம் என பயிற்சி எடுங்கள். நிறைய பயிற்சி எடுத்தால் உங்களுக்கு நேர்முகத் தேர்வுகள் பதட்டம் தராது.

ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையே இடைவெளி இருந்தால் காரணத்தை நிச்சயம் கேட்பார்கள். சரியான ஒரு பதிலைச் சொல்லுங்கள். அது உண்மையாகவும், அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்திலும் இருக்கட்டும்.

உங்களுடைய பலவீனம் எது என்பதைத் தெரிந்து வைத்திருங்கள். ஒருவேளை அந்த வேலை உங்களுக்கு செட் ஆகாது என தோன்றினால் முதலிலேயே சொல்லி விடுங்கள். பிடிக்காத வேலையில் பிரகாசிக்காமல் போவதை விட, பிடித்த வேலையில் கலக்குவதே நல்லது.

ஒன்றை மறந்து விட்டேன், உடல் மொழி ! நேர்முகத் தேர்வின் மிகப்பெரிய பலம் உங்களுடைய உடல் மொழி தான். புன்னகை, உற்சாகம், நேரடியாகப் பார்த்துப் பேசுவது, தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து அமர்வது என உங்கள் உடலைப் பேச விடுங்கள் !

நேர்மையாகவும், உண்மையாகவும் பதிலளியுங்கள். தவறான தகவல்களைத் தருவதோ, தவறான நம்பிக்கைகளை உருவாக்குவதோ தேவையற்றது. அலுவலகப் பணி என்பது நீண்டகால பந்தம். வாழ்க்கை பொருளாதாரத்தினால் அளவிடப்படுவதல்ல, உங்கள் நேர்மையான வாழ்வின் அழகினால் அளவிடப்படுவது. எனவே வேலைக்காக உங்கள் மதிப்பை குறைக்க வேண்டாம்.

“ஏதாவது கேள்வி இருக்கிறதா ? ” என உங்களிடம் கேட்டால் நல்ல ஒரு கேள்வியைக் கேளுங்கள். உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை உயர்த்தும் கேள்வியாய் அது இருக்கட்டும். அது நிறுவனத்தின் பணி, எதிர்காலத் திட்டம் போன்றவை சார்ந்ததாய் இருப்பது நல்லது. அப்படி எதுவும் தோன்றவில்லையேல், “நோ தேங்க்ஸ்” என புன்னகைப்பது உசிதம்.

கடைசியில் ஒரு ஃபீட் பேக் அதாவது அவர்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்கலாம். அது எதிர்மறையாய் வந்தால் வாதிடத் தேவையில்லை. “நான் அப்படியல்ல என சண்டையிடவும் தேவையில்லை”. உங்கள் கருத்துக்கு நன்றி, என்னிடம் அந்தத் திறமை இல்லை, ஆனால் அதே போன்ற இந்த திறமை இருக்கிறது என சொல்லலாம். எதுவானாலும், “நன்றி” என கைகுலுக்கி விடைபெறுங்கள்.

பத்து கட்டளைகள்

Image result for Job Interview

  1. நேர்முகத் தேர்வு என்பது நிறுவனத்துக்கு நீங்கள் தகுதியானவரா என்று பார்ப்பதும், நிறுவனம் உங்களுக்குத் தகுதியானதா என்பதைப் பாப்பதுமே.

  1. சரியான நேரத்தில், சரியான தயாரிப்புடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுங்கள்.

  1. நேர்த்தியான ஆடை அவசியம். தெளிவான பார்வை, புன்னகை இருக்கட்டும்.

  1. நிறுவனத்தைப் பற்றிய தகவல்களையும், உங்கள் வேலை பற்றிய தகவல்களையும் முழுமையாய் தெரிந்து வைத்திருங்கள்.

  1. சுருக்கமாய் நேர்த்தியாய் பதிலளியுங்கள். அதற்காக நல்ல பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

  1. சமூக வலைத்தளங்களில் உங்கள் பங்களிப்புகள் ஆரோக்கியமானதாய் இருக்கட்டும்.

  1. நிறுவனத்தின் எல்லைக்குள் கவனமாய் நடந்து கொள்ளுங்கள். பேசுதல், பழகுதல் போன்றவற்றில் கவனம் தேவை. அது மறைமுக இன்டர்வியூவாக கூட இருக்கலாம்.

  1. உடல் மொழியை சரியாய் பயன்படுத்துங்கள். நீங்கள் சொல்லும் விஷயத்தை அது சரியாய் கொண்டு சேர்க்கும்.

  1. உங்களைப் பற்றிய தகவல்கள், பலம், பலவீனம் எல்லாமே அத்துபடியாய் இருக்கட்டும்.

  1. நேர்மையாய் இருங்கள். இன்டர்வியூ முடிந்ததும் புன்னகையுடன் நன்றி சொல்லி கைகுலுக்க மறவாதீர்கள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s