புதிய தலைமுறை : டெலிபோனிக் இன்டர்வியூ

வேலை நமதே தொடர் – 5

Image result for telephonic interview

அதென்ன டெலிபோனிக் இன்டர்வியூ ? ஒன்றுமில்லை, ஒரு  இன்டர்வியூ போன் உரையாடல் வழியாக நடந்தால் அது டெலிபோனிக் இன்டர்வியூ. அவ்வளவு தான். போனில் பேசுவதொன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை தான். ஆனால் சாதாரண உரையாடலுக்கும், டெலிபோனிக் இன்டர்வியூவுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு.

அதெல்லாம் இருக்கட்டும், எதற்காக டெலிபோனிக் இன்டர்வியூ நடத்துகிறார்கள் ? இன்டர்வியூ தேவையெனில் நேரடியாகக் கூப்பிட்டுப் பேச வேண்டியது தானே என நீங்கள் நினைக்கலாம். அதற்கு பல காரணங்கள் உண்டு.

இன்டர்வியூ நடத்தும் நபரோ, இன்டர்வியூவில் கலந்து கொள்ள வேண்டிய நபரோ ரொம்ப தூரத்தில் இருந்தால் டெலிபோனிக் இன்டர்வியூ நடக்கும். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்தால், ஒரு வேகமான வடிகட்டலுக்காய் டெலிபோனிக் இன்டர்வியூ செய்வார்கள். இதனால் நிறுவனங்களுக்கு நேரமும், பணமும் மிச்சம்.

எது எப்படியோ, பெரும்பாலும் டெலிபோனிக் இன்டர்வியூ என்பது முதல் கட்ட தேர்வு தான். அடுத்த கட்ட இன்டர்வியூவுக்கு மக்களைத் தேர்ந்தெடுப்பது தான் டெலிபோனிக் இன்டர்வியூவின் முக்கியமான பணி. முதல் கட்ட தேர்வில் வழுக்கி விட்டால் வேலை கிடைப்பது சாத்தியமில்லை என்பதால் டெலிபோனிக் இன்டர்வியூவை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நேர்முகத் தேர்வு எளிதா ? தொலைபேசி தேர்வு எளிதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் டெலிபோனிக் இன்டர்வியூ  என்பார்கள். உண்மை அதுவல்ல. நேர்முகத் தேர்வை விட டெலிபோனிக் இன்டர்வியூ தான் கடினம்.

நேர்முகத் தேர்வில் நீங்கள் நேருக்கு நேர் சந்திக்கிறீர்கள். நீங்கள் ஒரு புன்னகை பரிமாற்றத்தின் மூலம் வசீகரிக்க முடியும். ஒரு அழுத்தமான கை குலுக்கல் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை வெளிக்காட்ட முடியும். ஒரு நேர்த்தியான ஆடை மூலம் உங்களுடைய குணாதிசயத்தை பறை சாற்ற முடியும். உங்களுடைய உடல் மொழி மூலமாக உங்களுடைய விருப்பத்தை நீங்கள் வெளிக்காட்ட முடியும். ஆனால் டெலிபோனிக் இன்டர்வியூவில் இது எதுவுமே நடக்காது !

குரல், குரல், குரல் !!!. அது தான் இந்த அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும். உங்களுடைய திறமைகளை, உங்களுடைய தன்னம்பிக்கையை, உங்களுடைய குணாதிசயத்தை அனைத்தையும் உங்களுடைய குரல் மட்டுமே வெளிக்காட்ட வேண்டும். எனவே தான் டெலிபோனிக் இன்டர்வியூ சவாலானதாக இருக்கிறது.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்களுடைய குரல் உங்களுடைய புன்னகையை, உங்கள் தன்னம்பிக்கையை, உங்கள் தடுமாற்றத்தை என அனைத்தையும் வெளிப்படுத்த வல்லது !!!

சரி, இன்டர்வியூவுக்கு வருவோம். முதல் தேவை ஒரு நல்ல இடம். நல்ல காற்றோட்டமான இடம். அந்த அறையில் சத்தம் போடும் தொலைக்காட்சி, மியூசிக் சிஸ்டம் போன்ற எந்த தொந்தரவுகளும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். மின்விசிறி இரைச்சல் கூட இல்லாமல் இருந்தால் நல்லது. வாட்ஸப் போன்ற செயலிகளின் நோட்டிஃபிகேஷன்ஸ் “டிங்” என்று அடிக்கடி சுத்தியலால் அடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் அடிப்ப‌டைத் தேவைகள். மனதில் வைத்திருங்கள்.

தொலைபேசி இன்டர்வியூவுக்கு ஒரு நேரம் குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பே அந்த அறையில் சென்று அமர்ந்து கொள்ளுங்கள். நல்ல ஆடை உடுத்திக் கொண்டு அமர்ந்து பேசுங்கள். உளவியல் ரீதியாக அது பயனளிக்கும் என்கின்றனர் உளவியலார். தொந்தரவுகள் ஏதும் வராது என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள் நினையாத நேரத்தில் ஒரு அழைப்பு வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த உரையாடலைத் தொடரலாமா வேண்டாமா என்பதை நீங்கள் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யுங்கள். சந்தையில் பொருள் வாங்கிக் கொண்டிருக்கும் போது, “ஓ..பேசலாமே” என ஒத்துக் கொள்ளாதீர்கள். “ஐம் அவுட்சைட்.. கேன் வி கேவ் இட் ஆஃப்டர் 4 பி.எம்” என்பது போல சரியான ஒரு நேரத்தைச் சொல்லுங்கள்.

அமைதியாகப் பேச வசதியில்லாத இடத்திலிருந்து நீங்கள் பேசினால் உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு பெருமளவு குறையும். ஒரு நல்ல இன்டர்வியூ செய்த   திருப்தியும் கிடைக்காமல் போய்விடும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். “அப்புறம் பேசலாமா ?” என கேட்பது தவறல்ல. கேட்காமல் சொதப்பி வைப்பது தான் தவறு.

இப்போதெல்லாம் லேன்ட் லைன் போன் என்பது அருங்காட்சியகத்துப் பொருள் போல ஆகிவிட்டது. அது இருந்தால் அது தான் வசதி. அது இல்லையேல் நல்ல ஹெட்செட் மாட்டிய ஒரு மொபைல் நல்லது. போனை நன்றாக சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதையெல்லாமா எழுதணும் என முறைக்காதீர்கள், பல வேளைகளில் நாம் சின்னச் சின்ன‌ விஷயங்களில் தான் தவறிவிடுவோம். எனவே எல்லா விஷயங்களையும் கவனத்தில் கொள்வது நல்லது.

ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பேசப் போகிறோம் என மனதில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை முதலிலேயே செய்துவிடுங்கள். இடையிடையே தண்ணி குடிக்கப் போவது, பாத்ரூம் போவது, எதையாவது சாப்பிடுவது போன்றவையெல்லாம் உங்கள் மீதான அபிப்பிராயத்தைக் குறைக்கும் காரணிகள் என்பதை மறக்க வேண்டாம்.

தயாராகுங்கள். ஒரு காகிதத்தில் உங்களுடைய தகுதி, பலம், பலவீனம், சான்றிதழ் விஷயங்கள், உங்களுடைய ஸ்பெஷல் சாதனைகள், திறமைகள் போன்ற முக்கியமான பாயின்ட்களை எல்லாம் எழுதி வைத்திருங்கள். எதையும் தவறவிடாமல் பேச அது உதவும்.

ஒரு பேனா, ஒரு பேப்பர் நிச்சயம் கையில் இருக்கட்டும். தேவையான குறிப்புகளை எடுக்க அது உதவியாய் இருக்கும்..

எந்த போனை இன்டர்வியூவுக்காய் பயன்படுத்தப் போகிறீர்களோ, அந்த போனிலிருந்து ஒரு சோதனை இன்டர்வியூ நடத்திப் பாருங்கள். உங்கள் நண்பர் யாரையேனும் அழையுங்கள். பேசுவது தெளிவாகக் கேட்கிறதா ? நெட்வர்க் சரியாக இருக்கிறதா போன்ற அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ள இது உதவும்.

சரி, இப்போது தயாரிப்பு வேலைகள் முடிந்தாயிற்று ! அழைப்பு வருகிறது. என்ன செய்ய வேண்டும்.

தாமதிக்காமல் போனை எடுத்து ஹாய், ஹலோ, ஹவ் ஆர் யூ போன்ற சம்பிரதாய விசாரணையில் இறங்கி விடுங்கள்.

கேட்கின்ற கேள்வியை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை புரியாவிட்டால் அதை மீண்டும் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். சரியாகப் புரிந்து  கொள்ளும் முன் பதிலை சொல்லத் தொடங்காதீர்கள். டெலிபோனிக் இன்டர்வியூவில் மட்டுமே கிடைக்கக் கூடிய வசதி ஒன்றுண்டு. உங்கள் கண்களை மூடிக் கொண்டே கவனமாய் கேள்விகளுக்குச் செவிமடுக்கலாம் என்பது தான் அது! தேவைப்பட்டால் அப்படி நீங்கள் கேட்கலாம்.

நிறுத்தி, நிதானமாய்ப் பேசுங்கள். நேர்முகத் தேர்வில் பாதி விஷயங்களை உங்கள் உடல் மொழி பேசிவிடும். இங்கே அப்படியல்ல. நீங்கள் பேசுவதை வைத்து தான் தேர்வாளர் புரிந்து கொள்வார். எனவே எல்லா வாக்கியங்களையும் தெளிவாய் பேசி முடியுங்கள். உங்களுடைய உச்சரிப்பை அழகாய் உச்சரியுங்கள்.

பதில்கள் நேரடியாக, கேட்ட விஷயங்களுக்கான பதிலாய் இருக்கட்டும். “கொஞ்சம் டீட்டெயிலா சொல்லுங்க” என கேட்டாலொழிய நீட்டி முழக்காதீர்கள். எவ்வளவு நேரம் பேசுகிறோம் என்பதல்ல முக்கியம், என்ன பேசுகிறோம் என்பதே முக்கியம்.

ஒரு இன்டர்வியூவில் அமர்வதற்கு முன் இரண்டு விஷயங்களைப் பற்றிய தெளிவு கொண்டிருங்கள்.

ஒன்று, நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள்.

இரண்டு, உங்களுடைய வேலை பற்றிய தகவல்கள்.

நீங்கள் நிறுவனத்தைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது உங்கள் மீதான அபிப்பிராயத்தை வலுவாக்கும். நீங்கள் அந்த வேலை விஷயத்தில் சீரியசாக இருக்கிறீர்கள் என்பதன் வெளிப்பாடு அது.

உங்களுடைய பயோடேட்டா ஒன்று கைவசம் இருக்கட்டும். அதில் இருக்கின்ற விஷயங்கள் முழுமையாய் உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும். அதிலிருக்கும் விஷயங்களே உங்களுக்குத் தெரியவில்லையேல், நீங்கள் நம்பகத் தன்மையை சட்டென இழந்து விடுவீர்கள்.

பேசும் போது ஆங்… அன்ட்… போன்ற ஃபில்லர்களைத் தவிருங்கள். போனை குறிப்பிட்ட இடைவெளியில் வைத்துப் பேசுங்கள். மூச்சுக்காற்று சூறாவளியாய் போனைத் தாக்குவது மறுபக்கம் இருப்பவருக்கு எரிச்சல் உண்டாக்கலாம்.

ஆள்மாறாட்டம், தில்லு முல்லு போன்ற சிந்தனைகளே உங்களுக்கு வரவேண்டாம். வாழ்க்கை என்பது வெறும் பொருளாதாரத்தில் கட்டி எழுப்பப்படுவதல்ல. மனித மதிப்பீடுகளில், நல்ல குணாதிசயங்களில் கட்டி எழுப்பப்படுவது. நேர்மையாய் செயல்பட்டு கிடைக்காமல் போகும் வேலை தரும் மகிழ்ச்சி, நேர்மையற்று பிடுங்கிக் கொள்ளும் வேலை நிச்சயம் தராது.

இப்போதே போன் உரையாடல்கள் ஸ்கைப், வித்யோ போன்ற வீடியோ உரையாடல்களாய் உருமாற்றம் பெறத் தொடங்கிவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் முகத்தைப் பார்க்காமல் டெலிபோன் உரையாடல்கள் நடக்காது. எனவே தொழில்நுட்ப ரீதியாகவும் ஆள் மாறாட்டங்கள் உங்களுக்கு சிக்கலையே கொண்டு வரும்.

இன்டர்வியூ முடிந்ததும் புன்னகையுடன் நன்றி சொல்லுங்கள். உங்களோடு சேர்ந்து பணி புரிய ஆவலாய் இருக்கிறேன். போன்ற சில சம்பிரதாய வார்த்தைகளுடன் விடைபெறுங்கள். அதற்காக ஓவராக பேசி கெடுத்து வைக்காதீர்கள். “தேங்க் யூ, லுக்கிங் ஃபார்வேட் டு வர்க் வித் யூ” போன்ற ஒற்றை வாக்கியம் போதுமானது.

வாழ்த்துகள்

Image result for telephonic interview

 

பத்து கட்டளைகள்

  1. சத்தமில்லாத அமைதியான இடத்திலிருந்து பேசுங்கள்.

  1. குரல் தெளிவாகவும், நேர்த்தியாகவும் இருக்கட்டும்

  1. ஒரு சோதனை டெலிபோனிக் இன்டர்வியூ நடத்திப் பாருங்கள்

  1. வசதியற்ற நேரத்தில் திடீர் அழைப்பு வந்தால் உடனே ஒத்துக் கொள்ளாதீர்கள். பிறிதொரு நேரத்தை பரிந்துரை செய்யுங்கள்.

  1. சார்ஜ் செய்யப்பட்ட போன், ஹெட்போன், தண்ணீர், பேப்பர், பென் என தேவையானவற்றை அருகிலேயே வைத்திருங்கள்.

  1. உங்களைப் பற்றிய தகவல்களை கைவசம் வைத்திருங்கள்.

  1. புரஃபைல் ஒன்று கையில் இருக்கட்டும், அதிலுள்ள விஷயங்களெல்லாம் தெரிந்திருக்கட்டும்.

8 நிறுத்தி நிதானமாய்ப் பேசுங்கள். குறிப்பிட்டுக் கேட்டாலொழிய விரிவான பதில்கள் வேண்டாம்.

  1. நிறுவனத்தைப் பற்றியும், வேலையைப் பற்றியும் தெரிந்து வைத்திருங்கள்.

  1. தன்னம்பிக்கையைக் குரலில் காட்டுங்கள். ஹலோ, ஹௌவ் ஆர் யூ போன்றவை தெளிவாய் இருக்கட்டும். முடிக்கும் போதும் நன்றியை புன்னகையுடன் சொல்லுங்கள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s