புதிய தலைமுறை : எழுத்துத் தேர்வு

வேலை நமதே தொடர் – 6

Related image

முதன் முதலாக ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குப் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக ஐடி போன்ற நிறுவனங்களுக்கு வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். “எழுத்துத் தேர்வு” நிச்சயம் இருக்கும். உலக அளவில் 70% நிறுவனங்கள் எழுத்துத் தேர்வை தங்களுடைய செலக்ஷன் முறைகளில் ஒன்றாக வைத்திருக்கின்றன.

எழுத்துத் தேர்வு கட்டத்தைத் தாண்டாமல் அடுத்தடுத்த‌ நிலைகளுக்குப் போக முடியாது. எனவே இதை கொஞ்சம் சீரியசாகவே மனதில் கொண்டிருங்கள்.

எழுத்துத் தேர்வுக்கு தயாராகும் காலகட்டம் கல்லூரியில் படிக்கும் காலம் தான். படிக்கும் போதே இன்டர்வியூவுக்கான சிந்தனைகளும் மனதில் இருக்கட்டும். இப்போதெல்லாம் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிக்கூடங்களில் இத்தகைய தேர்வுகளுக்கான பயிற்சிகளை ஆரம்பித்து விடுகிறார்கள். அல்லது பள்ளி நேரத்துக்குப் பிறகு தனியார் வகுப்புகள் மூலம் இத்தகைய பயிற்சிகளைக் கொடுக்கின்றனர். கல்லூரி முடித்து விட்டு வெளியே வரும்போது இந்த தேர்வுக்கு நீங்கள் நன்றாகத் தயாராகி வரவேண்டும் என்பதை மனதில் வைத்திருங்கள்.

தேர்வுகள் பெரும்பாலும் இரண்டு கட்டமாக நடக்கும். ஒன்று டெக்னிகல் தேர்வு. இந்த டெக்னிகல் தேர்வில் பெரும்பாலும் நீங்கள் படித்த பாடங்களிலிருந்து தான் கேள்விகள் வரும். படிக்கும் போது ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்தையும் கவனித்துப் படியுங்கள். தேர்வில் மதிப்பெண் எடுக்க வேண்டும்ம் எனும் ஒரே நோக்கில் மனப்பாடம் செய்வதைத் தவிருங்கள். எந்த வேலைக்காக முயற்சி செய்கிறீர்களோ அந்த தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களைக் கொஞ்சம் விரிவாகவே தெரிந்து வைத்திருங்கள்.

டெக்னிகள் தேர்வுக்காக‌, கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்கு அதிக கவனம் கொடுத்து படியுங்கள். அந்த பாடங்களின் நுணுக்கங்கள் தான் பெரும்பாலும் டெக்னிகல் தேர்வில் கேட்கப்படும். கணினி துறையெனில் கணினி சார்ந்த விஷயங்களும் இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

இரண்டாவது, உளச்சார்பு எனப்படும் ஆப்டிடியூட் தேர்வு. இன்றைய டிஜிடல் உலகில் எந்தக் கேள்விக்கான விடையையும் இணையத்திலிருந்து மிக எளிதாகப் பொறுக்கி எடுக்க முடியும். அல்லது அது சார்ந்த அதிகப்படியான விஷயங்களை மிக எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் தனிநபர் சிந்தனை வலிமை, சிந்திக்கும் வேகம், வித்தியாசமாய் சிந்திப்பது போன்றவற்றை இணையம் அதிகரிக்காது. அது நமக்கு இயல்பாகவே இருப்பது மற்றும் நமது பயிற்சிகளின் மூலமாக வலுவாக்கிக் கொள்வது.

இன்றைய நிறுவனங்கள் வெறுமனே கேள்விகளுக்குப் பதில் சொல்லும் மாணவர்களை வேலைக்கு எடுப்பதில்லை. கேட்கும் கேள்விகளுக்கான விடைகளை வித்தியாசமாய்ச் சிந்திக்கும் இளைஞர்களே அவர்களுக்குத் தேவை. எனவே உங்கள் சிந்தனையை வலுப்படுத்தும் ஆப்டிடியூட் கேள்விகளை நிறைய பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

சிலர் சோடுகு போன்ற எண் விளையாட்டுகளை மிக எளிதாக ஊதித் தள்ளுவார்கள், சிலருக்கு அது குதிரைக் கொம்பு. சிலர் செஸ் விளையாட்டில் பின்னிப் பெடலெடுப்பார்கள், சிலருக்கு அது பயமுறுத்தும் விளையாட்டு. உண்மையில், சரியான பயிற்சி எடுத்துக் கொண்டால் சொடுகு வையோ, செஸ்ஸையோ நீங்கள் எளிதில் வசப்படுத்தி விட முடியும். கடினம் எனத் தோன்றும் விஷயம் முயற்சியும், பயிற்சியும் இருந்தால் கைவரும்.

இந்த ஆப்டிடியூட் தேர்வு விஷயமும் அப்படித் தான். இன்றைக்கு இணையத்தில் பல்லாயிரக் கணக்கான மாதிரி தேர்வுகள் கிடைக்கின்றன. அதைப் பார்த்து நீங்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். ஸ்மார்ட்போன் ஆப்ஸ் பல கல்வி சார்ந்து கிடைக்கின்றன, தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய டெக்னாலஜி ஏதும் வேண்டாம் என நினைப்பவர்களுக்கு, கடைகளிலும் ஏராளம் புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த எழுத்துத் தேர்வுக்கு நுழைவதற்கே உங்களுடைய மதிப்பெண் ஒரு மிகப்பெரிய காரணியாய் இருக்கும். எனவே பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது அதிக மதிப்பெண் பெறவேண்டும் எனும் இலக்கை விட்டு விலகாதீர்கள். ஒரு காலத்தில் அறுபது விழுக்காடு என்பது நல்ல மதிப்பெண். இன்றைக்கு தொன்னூறு விழுக்காடு என்பதே சர்வ சாதாரணமாகி விட்டது. எனவே மதிப்பெண்ணிலும் கவனம் செலுத்துங்கள். குறிப்பிட்ட அளவு மதிப்பெண்கள் எடுக்காத மாணவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த எழுத்துத் தேர்வுகள் பெரும்பாலும் வடிகட்டும் முயற்சியே. நூறு பேர் தேவைப்படும் இடத்திற்கு ஆயிரம் பேர் வருகிறார்கள் என‌ வைத்துக் கொள்ளுங்கள். எல்லோரையும் தனித்தனியே இன்டர்வியூ செய்வது சாத்தியமில்லை. எனவே முதலில் எல்லோருக்கும் ஒரு எழுத்துத் தேர்வு நடக்கும். அதில் டாப் 100 பேரை தேர்ந்தெடுப்பார்கள். சிம்பிள் !!

நிறைய தேர்வுகளை எழுதிய அனுபவம் உங்களுக்கு இருக்கும். எனவே பதட்டப்படத் தேவையில்லை. இங்கே கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வாய்ப்பு அதிகம். சில வேளைகளில் ஒரே கேள்வி இரண்டு தடவை கேட்கப்படலாம். அதன் விடைகளை நீங்கள் இரண்டு விதமாகச் சொன்னீர்களெனில் உங்களுக்கு விஷயம் தெரியவில்லை, குருட்டாம் போக்கில் எ,பி,சி,டி என டிக் அடிப்பதாய் நினைக்க வாய்ப்பு அதிகம். உங்கள் மீதான மரியாதை குறையும்.

தொடர்ச்சியாக பல கேள்விகளுக்கு விடை “எ” அல்லது “பி” என வருவதுண்டு. எல்லாத்துக்கும் ஒரே ஆன்சர் வராதே என உங்களைக் குழப்பும் உத்தி இது. எனவே அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். எது சரியென தோன்றுகிறதோ அதை நீங்கள் தைரியமாக டிக் செய்யுங்கள்.

தேர்வு நேரத்தில் டென்ஷன் தேவையில்லை. எத்தனையோ தேர்வுகளை நீங்கள் எழுதியிருப்பீர்கள். எனவே ஒரு எக்ஸ்ட்ரா டென்ஷன் தேவையில்லை. அப்படி ஒரு தேர்வு என்றே நினைத்து எழுதுங்கள். ரிலாக்ஸாக இருப்பது தேர்வில் வெற்றி பெற முதல் தேவை !

டைம் ரொம்ப முக்கியம். சரியான நேரத்தில் தேர்வு முடிந்து விடும். இப்போது நிறைய தேர்வுகள் ஆன்லைனிலேயே தருகின்றனர். நீங்கள் கணினியிலேயே விடைகளை அமுக்கிக் கொண்டே செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே அது முடிந்து விடும். எனவே தேர்வு எழுதும்போது நேரத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பக்கத்தை ரொம்பக் கவனமாகப் படியுங்கள். அதில் சில சர்ப்ரைஸ் விஷயங்கள் இருக்கக் கூடும். விதிமுறைகளைப் படித்து விட்டு பதில் எழுதத் தொடங்குங்கள். முதல் பத்து கேள்விகளுக்கு எந்த மதிப்பெண்களும் கிடையாது என ஒரு விதிமுறை இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் அந்த கேள்விகளை விட்டு விட்டு அடுத்த கேள்விக்கு தாவலாம். விதிமுறைகள் படித்தால் மட்டுமே இது சாத்தியம்.

தெரிந்த கேள்விகளுக்கான விடைகளை முதலில் எழுத வேண்டும் என்பது சின்ன வயதிலிருந்தே நமக்கு ஆசிரியர்கள் சொல்லித் தரும் பாடம். அதை மறக்காதீர்கள். பென்சில் பேனா போன்ற தேவையான பொருட்களைக் கொண்டு செல்வது, தண்ணி பாட்டில் கொண்டு செல்வது போன்ற குட்டிக் குட்டி விஷயங்கள் மனதில் இருக்கட்டும்.

தேர்வுகளில் உங்களுடைய சரியான விடைகள் மட்டுமே உங்களுடைய திறமையைச் சொல்லும். நேர்முகத் தேர்வு போல இங்கே பாரபட்சங்களுக்கு இடமில்லை. உங்களுடைய தோற்றமோ, உடையோ, உடல்மொழியோ இங்கே தெரிவதில்லை. எனவே உங்களுடைய உண்மையான திறமையை தேர்வாளர்கள் அறிந்து கொள்ளும் ஒரு எளிய வழி இது.

பர்சனாலிடி தேர்வு எனப்படும் உங்களுடைய தனித்தன்மை குறித்த கேள்விகள் ஆங்காங்கே இருக்கும். அவற்றுக்கு கவனமுடன் பதிலளியுங்கள். உங்களுடைய குணாதிசயம், உங்களுடைய தீர்வு சொல்லும் திறன் ஆகிய அனைத்தும் இதன் மூலம் பரிசோதிக்கப்படும்.

ஒரு கேள்விக்கு முப்பது முதல் அறுபது வினாடிகள் என்பது தான் பொதுவான கணக்கு. அந்த நேரத்துக்குள் நீங்கள் சரியான விடையை கண்டு பிடிக்க வேண்டும். அல்லது ஊகிக்க வேண்டும். ஒரு கேள்விக்குத் தரப்பட்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானது போல தோன்றவும் வாய்ப்பு உண்டு. அத்தகைய சூழல்களில் ‘ரொம்பச் சரி’ யாய் இருக்க சாத்தியமுள்ள விடையைத் தேர்ந்தெடுங்கள்.

எழுத்துத் தேர்வாய் இருந்தால் கூட நேர்த்தியான உடை உடுத்தி அலுவலகம் செல்லுங்கள். உங்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

Image result for Written test girl

பத்து கட்டளைகள்

  1. தேர்வுக்கு சரியான நேரத்தில் செல்லுங்கள். தேவையான விஷயங்களை எடுத்துச் செல்லுங்கள்.
  2. டெக்னிகல் தேர்வு, ஆப்டிடியூட் தேர்வு இரண்டும் நிச்சயம் இருக்கும், தயாராகிக் கொள்ளுங்கள்.
  3. தேவையான அளவு பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இணையம் ஒரு வரப்பிரசாதம், இணையத்தில் ஏராளமான பயிற்சி விஷயங்கள் இருக்கின்றன அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  4. விதிமுறைகளைக் கவனமாகப் படித்து விட்டு தேர்வு எழுதத் துவங்குங்கள்.
  5. தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதுங்கள். நேரம் ரொம்ப முக்கியம், குறிப்பிட்ட நேரத்தில் முடியுங்கள்.
  6. கல்லூரியில் அதிகபட்ச மதிப்பெண் பெறுங்கள். அது முக்கியம், அதுவே உங்களுடைய நுழைவுத் தகுதி.
  7. உங்களைக் குழப்பும் கேள்விகள் பல இருக்கும் பொறுமையாய் பதிலளியுங்கள்.
  8. ஒரே கேள்வி பல முறை வந்தாலும் ஒரே விடையை அளியுங்கள். அவை உங்கள் குணாதிசயத்தை சோதிக்கும் கேள்விகள்.
  9. பல கேள்விகளுக்கு ஒரே விடை வந்தாலும் அதையே அளியுங்கள்.
  10. நேர்த்தியான ஆடை அணிந்து, நேர்முகத் தேர்வுக்குச் செல்வது போலவே செல்லுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.