புதிய தலைமுறை : இதெல்லாம் தப்பு !

வேலை நமதே தொடர் – 7

Image result for Interview

“ஆமா.. என்னத்த இன்டர்வியூ, போயிட்டா மட்டும் கிடச்சுடவா போவுது” எனும் சலிப்புடன் இன்டர்வியூக்களுக்கு செல்பவர்கள் உண்டு. அவர்களுடைய மனதில் இதெல்லாம் வெறும் கண்துடைப்பு எனும் சிந்தனை வலுவாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் போர்த்துப் படுத்து தூங்குவது சாலச் சிறந்தது.

இன்டர்வியூவுக்குப் போகும் போது நல்ல பாசிடிவ் சிந்தனையுடன் போக வேண்டும். என்னால எவ்வளவு பெஸ்டா பெர்ஃபாம் பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணுவேன் எனும் தெளிவான முடிவுடனும் தான் போக வேண்டும். நெகடிவ் சிந்தனைகளுடன் போகவே கூடாது.

“வேலை கிடைக்காது”  என மனதில் சிந்தனை எழுந்தால் உங்களுக்கு வேலை கிடைக்காது !

நான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம். எனக்கு தெரியாதது ஏதும் இல்லை ! என நினைப்பவர்கள் பெரும்பாலும் இந்த கீழ்க்கண்ட விஷயங்களை மனதில் வைத்திருப்பார்கள்.

 1. “எல்லாமே கண்துடைப்புக்கான இன்டர்வியூ” என்பது முதல் தவறான சிந்தனை. சில குறிப்பிட்ட இடங்களில் அது நடக்கலாம். ஒட்டுமொத்தமாக எல்லா இன்டர்வியூக்களும் தவறானவை என்று சொல்லி விடக் கூடாது.

பெரும்பாலான இன்டர்வியூக்கள் சரியான எண்ணத்தில் நடப்பவையே. ஒரு இன்டர்வியூ என்பது நிறுவனத்தின் பணம், நேரம், உழைப்பு என பல்வேறு செலவுகளை உள்ளடக்கியது. நிறுவனங்கள் பணத்தை அப்படிச் செலவு செய்யத் தேவையில்லையே. எனவே இன்டர்வியூ என்றாலே கண்துடைப்பு தான் எனும் சிந்தனையை விட்டுத் தள்ளியே நில்லுங்கள்.

 1. “எளிமையா பேசறது தப்பு” என்பது இன்னொரு சிந்தனை. அதற்காக சிலர் கஷ்டப்பட்டு கடினமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்த முயல்வார்கள். அது மிகத் தவறான அணுகுமுறை. எளிமையாய், கேட்கும் கேள்விகளுக்கான விடையைச் சொல்வதே சிறப்பானது. எளிமையான ஆங்கிலத்தில் யதார்த்தமாய்ப் பேசும் வாக்கியங்கள் தான் ரொம்ப பவர்ஃபுல்.

அதே போல நீங்கள் ஏதேனும் கேள்வி கேட்க வேண்டியிருந்தால் அதற்கும் எளிமையான கேள்விகள் போதும். ரொம்ப அறிவு ஜீவியாய் உங்களைக் காட்டிக்கொள்ள நினைத்து கஷ்டமான கேள்விகளைத் தயாராக்கி வைக்க வேண்டாம்.

இன்னொன்று, கேள்விகளைக் கேட்கும் போது ரொம்ப தர்மசங்கடமான கேள்விகளையும் கேட்காதீர்கள். அது உங்கள் மீது ஒரு தவறான முத்திரை விழக் காரணமாகி விடும். உதாரணமாக, “உங்க ஆபீஸ் மாடில இருந்து ஒரு பொண்ணு கீழே குதிச்சு தற்கொலை பண்ணிச்சாமே.. பேப்பர்ல படிச்சேன்” போன்ற கேள்விகள் முட்டாள்தனமானவை. உங்கள் வேலைக்கும், நிறுவனத்தில் இலட்சியங்களுக்கும் இடையேயான கேள்விகளே சிறந்தவை.

 1. “விடையெல்லாம் பெர்பக்டா, முழுசா, பெருசா இருக்கணும்” என்பது இன்னொரு சிந்தனை. தவறான சிந்தனை. இன்டர்வியூக்களில் எல்லா கேள்விகளுமே ஒரே பதிலை நோக்கியவையாய் இருக்காது. இந்தியப் பிரதமர் யார் – என்பன போன்ற நேரடிக் கேள்விகளுக்கு ஒரு சரியான பதில் இருக்கிறது.

ஆபீஸ்க்கு லேட்டா வந்தா என்ன காரணம் சொல்லுவீங்க என்பதற்கு ஒரே பதில் விடையாய் இருக்க முடியாது இல்லையா ? ஒரு பிரச்சினையைச் சொல்லி, இதன் தீர்வு என்ன ? என்பன போன்ற கேள்விகளுக்கும் ஒரே விடை கிடையாது. எனவே விடைகள் முழுமையாக, பெர்பெக்டாக, சரியாக இருந்தாகணும் எனும் சிந்தனையை முதலில் ஒதுக்கி வையுங்கள்.

ஒரு பதில் சொல்லும்போது எந்த நிறுவனம், எந்த வேலைக்கான இன்டர்வியூ போன்ற விஷயங்களையும் மனதில் கொள்ளுங்கள். கேள்விகளுக்கான பதில்களை உங்களுடைய பார்வையில் சுருக்கமாக தெளிவாகச் சொல்ல வேண்டும் அவ்வளவுதான்.

முழுசையும் சொல்கிறேன் என நீட்டி முழக்கினால் நாம் சொல்ல வரும் விஷயத்தை முழுமையாக கேள்வி கேட்பவர் புரிந்து கொள்ளாமல் போகலாம். மட்டுமல்லாமல் கேள்வி கேட்பவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஏகப்பட்ட விஷயங்களைத் திணிக்க முயல்வதும் தப்பு. அப்படி சந்தேகம் இருந்தால், “இந்தக் கேள்வியில் இந்த நான்கு அம்சங்கள் உண்டு, இதில் எதைப் பற்றி குறிப்பிட்டுக் கேட்கிறீர்கள் ?” என்பன போன்ற விளக்கக் கேள்வி கேட்டு பின்னர் பேசலாம்.

 1. “இன்டர்வியூ நடத்தறவங்க நம்முடைய குற்றம் குறைகளைத் தோண்டித் துருவிக் கேட்பதற்காக அமர்ந்திருப்பவர்கள்” எனும் எண்ணம் பலருக்கும் உண்டு. அப்படி ஒரு சிந்தனையோடு போனால் எப்படி அந்த கேள்விகளை எதிர்கொண்டு நாம் குற்றமற்றவன் என நிரூபிக்கலான் என்பதிலேயே சிந்தனை ஓடும். அந்த சிந்தனை உங்களுடைய திறமைகளைப் பற்றியும், சாதனைகளைப் பற்றியும் சொல்ல விடாமல் உங்களைத் தடுக்கும்.

உண்மையில் நீங்கள் எந்த இடத்தில் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை விட எந்த இடத்தில் பலமாக இருக்கிறீர்கள் என்பதையே இன்டர்வியூ நடத்துபவர் கவனிப்பார். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாய் எதிர்கொண்டு உங்களுடைய “பெஸ்ட்” பதிலைக் கொடுங்கள். நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய குற்றம் குறைகளைக் கண்டு பிடிப்பதல்ல இன்டர்வியூ நடத்துபவரின் வேலை. உங்களுடைய திறமைகளை அடையாளம் காண்பதே !

 1. “ரொம்ப சீரியஸா தான் இன்டர்வியூல இருக்கணும்” – என்பது இன்னொரு தவறான சிந்தனை. பெரும்பாலான இன்டர்வியூக்களில் இன்டர்வியூ நடத்துபவர்கள் இன்டர்வியூவுக்கு வருபவர்களிடம் நட்புடன் தான் கேள்விகளைக் கேட்பார்கள்.

“நலமா ? “,

“ரூட் கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டப் பட்டீங்களா ?”,

“ பிரிட்ஜ் வேலை நடக்குது அதனால ரொம்ப டிராபிக்கா இருந்திருக்குமே” போன்ற சில கேள்விகளைக் கேட்டு உங்களை முதலில் இலகுவாக்கப் பார்ப்பார்கள். அதற்கு புன்னகையுடனும், இயல்பாகவும் பதில் சொல்லுங்கள்.

அந்தக் கேள்விகளுக்கான பதிலை நீட்டிக் கொண்டு போகாதீர்கள். இயல்பாக இருங்கள். அதற்காக ஜோக் அடித்து சிரித்துக் கொண்டே, ஏனோ தானோ என இருப்பது இயல்பாய் இருப்பது என நினைத்துக் கொள்ளாதீர்கள். கேள்விகளை டென்ஷன் இல்லாமல் எதிர்கொள்ளுங்கள்.

 1. “எல்லா கேள்விக்கும் பதில்” சொன்னா தான் வேலை கிடைக்கும் என்பது இன்னொரு தவறான சிந்தனை. ஒரு இன்டர்வியூவில் வேலை கிடைப்பதற்கும், கிடைக்காமல் இருப்பதற்கும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். “எல்லா கேள்விக்கும் விடை சொல்லிட்டேன். வேலை எனக்குத் தான் கிடைக்கும்” என்றோ, “சரியாவே ஆன்சர் பண்ணல, சோ.. வேலை கிடைக்காது” என்றோ நாம் சொல்லி விட முடியாது.

கேள்வி கேட்பவர் நீங்கள் தகவல் களஞ்சியமா என்பதைப் பார்க்க மாட்டார். அல்லது அதை மட்டுமே கவனிக்க மாட்டார். வேறு பல விஷயங்களையும் கவனிப்பார். முக்கியமாக உங்களுடைய குணாதிசயம், இணைந்து பணியாற்றும் தன்மை, தலைமைப் பண்பு, வசீகர அணுகுமுறை இப்படி ஏதாவது சிறப்புக் காரணங்கள் உங்களை தேர்வு செய்ய வைக்கலாம்.

அல்லது அத்தகைய சிறப்புப் பண்புகளில் உள்ள குறைபாடு உங்களுக்கு தோல்வியைத் தரலாம். எனவே கேள்விகளுக்கான விடைகளை மட்டும் வைத்து வேலை கிடைக்கும் எனும் தவறான சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள்.

 1. “வசீகரமா இருக்கிறவங்களுக்குத் தான் வேலை” கிடைக்கும் என்பது இன்னொரு மாயை. அலுவலகங்கள் மாடல்களை வேலைக்கு எடுப்பதில்லை, வேலை செய்வதற்கான ஊழியர்களையே தேர்ந்தெடுக்கிறது.

எனவே உங்களுடைய தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வாருங்கள். அழகாய் இருக்கும் ஆண்கள் தான் வேலைக்குச் சேரவேண்டுமெனில் இன்றைக்கு மக்கள் படிப்பதற்குப் பதிலாக பியூட்டி பார்லர்களைத் தஞ்சமடைந்திருப்பார்கள்.

நேர்த்தியான ஆடை, தன்னம்பிக்கையான புன்னகை இவை இரண்டும் இருந்தாலே உங்களை அழகாய்க் காட்டி விடும்.

சில ஆய்வுகள் அழகாய் இருக்கும் பெண்கள் எளிதில் வேலை வாங்குவதாக குறிப்பிட்டுள்ளன. அதே நேரத்தில் கவர்ச்சிகரமான உடை அணிந்த பெண்கள் வேலைக்கு எளிதில் சேர்வதில்லை என்றும் சில ஆய்வுகள் சொல்லியிருக்கின்றன.

அத்தகைய ஆய்வுகளெல்லாம் மிக மிகக் குறிப்பிட்ட சதவீதத்துக்குள் அடங்கிவிடும். நிறுவனங்கள் இன்றைக்கு மிகவும் தரம் வாய்ந்த ஊழியர்களையே தேடுகிறது. காரணம் அவை பார்ப்பது மூன்று விஷயங்களை. காஸ்ட், குவாலிடி மற்றும் டைம்.

குறைந்த செலவில் வேலை செய்து முடியவேண்டும், நல்ல தரத்தில் இருக்க வேண்டும், குறைந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். அதுவே முக்கியம். எனவே உங்களுடைய தோற்றம் குறித்த சிந்தனையை ஒதுக்கித் தள்ளுங்கள்.

 1. “எல்லாமே தெரிஞ்சது மாதிரி காட்டிக்கணும்” – என்பது இன்னொரு தவறான சிந்தனை. அது தேவையில்லை. எல்லாம் தெரிந்த மனிதர்கள் இல்லை. எதுவும் தெரியாத மனிதர்களும் இல்லை. கேள்வி கேட்பவர்களுக்கும் நிறைய விஷயங்கள் தெரியாது. பதில் சொல்பவர்களுக்கும் பல விஷயங்கள் தெரியாது. எனவே கேட்கும் கேள்விகளில் உங்களுக்கு சுத்தமாகத் தெரியாத கேள்விகள் இருந்தால். “மன்னிக்கவும், எனக்குத் தெரியவில்லை. அதை நான் கற்றுக் கொள்ள முடியும் என நம்புகிறேன்” என்ற பதிலையே சொல்லுங்கள்.

ஒருவேளை கேட்ட கேள்விக்கான பதில் அரைகுறையாய்த் தெரியுமெனில். “எனக்குச் சரியாகத் தெரியாது, ஆனால் என்னுடைய புரிதலின் அடிப்படையில் அதை விளக்க முயலவா ?” என்று கேட்டு விட்டு பதில் சொல்வது நல்லது. தெரிந்தவற்றை தன்னம்பிக்கையோடு சொல்வதும், தெரியாதவற்றை மறைக்காமல் ஒத்துக் கொள்வதும் இரண்டுமே முக்கியமான தேவைகள். அதனால எல்லாமே தெரிஞ்சமாதிரி காட்டிக்கணும் தவறான விஷயத்திலிருந்து வெளியே வாங்க.

 1. “புடிக்கலேன்னா ஓவர் குவாலிஃபைட்” ந்னு சொல்லிடுவாங்க எனும் சிந்தனை பலருக்கும் உண்டு. ஓவர் குவாலிஃபைட் ந்னு வயசானவங்களைத் தான் சொல்லுவாங்க என சிலர் சொல்வதையும் கேட்டிருக்கிறேன்.

ரொம்ப போட்டுக் குழப்பிக்காதீங்க. ஓவர் குவாலிஃபைட் ந்னு சொன்னால், அந்த வேலைக்குத் தேவையான தகுதியை விட அதிக தகுதி உங்களுக்கு இருக்கு என்பது தான் அதன் பொருள். சொல்லாத பொருளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு வேளை இளங்கலைப் பட்டம் தான் எதிர்பார்ப்பு என இருக்கும் நிலையில் நீங்கள் பி.ஹைச்.டி யோடு போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஓவர் குவாலிஃபைட் என்பார்கள். இளங்கலை என்றால் 10 ஆயிரம் சம்பளம் கொடுத்தால் போது. உங்களுக்கு அதிகம் தரவேண்டி இருக்கும். செலவு அதிகமாகும் அது தான் மேட்டர்.

 1. எங்கிட்டே ரொம்ப நேரம் பேசலை, சோ வேலை கிடைக்காது. இதுவும் ஒரு தவறான அபிப்பிராயம் தான். ஒரு நபரை முதல் சில நிமிடங்களிலேயே எடை போட்டு விடுவார்கள். அதன்பின் சரியாய் எடை போட்டிருக்கிறோமா என்பதை கேள்விகள் மூலம் பரிசோதித்துப் பார்ப்பார்கள் அவ்வளவு தான்.

எனவே, கொஞ்சம் நேரம் பேசினால் வேலை கிடைக்காது. ரொம்ப நேரம் பேசினால் கிடைக்காமல் இருக்காது போன்ற சிந்தனைகளை விட்டு விடுங்கள்.

அடுத்த முறை இன்டர்வியூ செல்லும்போது இத்தகைய தவறான அபிப்பிராயங்கள் இருந்தால் அதை மாற்றி விட்டு தன்னம்பிக்கையோடு சென்று வாருங்கள், வென்று வாருங்கள்.

பத்து கட்டளைகள்

 1. பாசிடிவ் மனநிலையோடு இருங்கள், நெகடிவ் சிந்தனைகளை ஒதுக்குங்கள்.

 1. எல்லா தேர்வுகளும் கண்துடைப்புக்கானதல்ல. பெரும்பாலானவை நேர்மையானவையே.

 1. எளிய ஆங்கிலத்தில் பிழையின்றி பேசுங்கள். கடின வார்த்தைப் பிரயோகங்கள் தேவையில்லை.

 1. உங்களுக்குத் தெரிந்தவற்றைச் சொல்லும் இடம் இது. உங்களைக் குற்றம் கண்டுபிடிக்க யாரும் முயல்வதில்லை.

 1. இயல்பாய் இருங்கள். ரொம்ப சீரியஸாய் இருக்கத் தேவையில்லை.

 1. தெரியாத கேள்விகள் இருக்கலாம் பதட்டப்படத் தேவையில்லை. எல்லா கேள்விகளுக்கும் விடை சொன்னால் தான் வேலை கிடைக்கும் என்பதில்லை.

 1. உடல் அழகு வேலை வாங்கித் தராது. நேர்த்தியாய் ஆடை அணிந்து புன்னகையுடன் இருங்கள் போதும்.

 1. எல்லாமே தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ளத் தேவையில்லை.
 2. ரொம்ப நேரம் பேசினா தான் வேலை கிடைக்கும் என நினைக்காதீர்கள்.

 1. தன்னம்பிக்கை மிளிர, புன்னகையோடு, தைரியமாய்ப் பேசுங்கள். வணக்கம் சொல்லி ஆரம்பித்து, நன்றி சொல்லி விடைபெறுங்கள்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s