மெல்லிய
ஒரு காலைப் பொழுதில்
மெல்லிசையாய் சொன்னாள்.
நான்
அவளுக்கு உலகமாம்
திசைகளில் எரியும் தீபமாம்.
திக்குத் தெரியாத
திகைப்பில்
திளைக்க வைத்த வார்த்தைகள் அவை.
நீ
இல்லையேல் எனக்குள்
நான்
இளைப்பாற இயலாது,
உனக்குள்
நீ உட்கார முடியாது என்றாள்
மழை நின்ற ஈரத்தில்
ஓர் மத்தியான நேரத்தில்.
மனசு
நிரப்பப்பட்ட நிமிடங்கள் அவை.
சாயங்கல வேளையில்
சந்தித்த போது,
இழப்பேன்,
உனக்காய்
நான் எதையும் இழப்பேன்
தோளுரசிச் சொன்னாள்.
இதயங்கள் முடிச்சிட்டு
மாலைகள் பல மறைந்தபின்
ஓர்
கடிதம் எழுதிக் கேட்கிறாய்,
நம் காதலைத்
தொடரத்தான் வேண்டுமா ?
ஆம்
என்பதே என் பதில் என்பது
உனக்கேத் தெரியும்.
ஆனாலும்
‘இல்லை’ என்றே பதில் எழுதுகிறேன்
அதே காதலுடன்.