இயற்கை தன் வரவை
சூரியத் தூரிகை கொண்டு
இலைகளுக்குள் எழுதுகிறது.
பச்சையப் தேர்வில்
பெரும் வெற்றி பெற்று
கிளை தலைவிரித்தாடும்
வசந்த காலத்தின் அசந்த நாட்கள்.
வெற்றிலைக் கிழவனின்
ஒழுகும் வாயாய்
சிவப்புச் சாயம் படரத்துவங்கும்
வேனில் கால விடைபெறு நாட்கள்.
வற்றிப்போன ஈரத்தின்
அடையாள அட்டையாய்
சத்தமிடும் சருகுகள்
தொற்றிக்கொண்டிருக்கும்
உதிர் காலத்தின் முதல் காலைகள்.
மொத்த மரங்களும்
ஆதி மனித அவதாரம் கொண்டு
நிர்வாண நிராயுதபாணிகளாய்
அணிவகுத்து நிற்கும்
குளிர் காலத்தின் அந்தி நாட்கள்.
நாள்காட்டிகளும்,
மணிகாட்டிகளும்,
பொத்திப் பொத்தி வைக்கும் காலத்தை
அலட்டிக் கொள்ளாமல் வந்து
எடுத்துக் கொள்கிறது இயற்கை.
ஒவ்வோர் காலத்திலும்
ஒவ்வோர்க் கவிதைத் தொகுப்பை
அது
மௌனமாய் மரங்களுக்குள்
எழுதிவிட்டுப் போகிறது.
திறவாப் புலன் கொண்ட
மனிதனுக்கோ.
சிறகுகளை விட
விறகுகளே தேவைப்படுகிறது.