TOP 10 : திகில் நகரங்கள்

Image result for abandoned cities

ஊருக்கு ஒதுக்குப் புறமாய் ஒரு பாழடைந்த பங்களா இருந்தாலே திகில் பிய்த்துத் தின்னும். ஒரு ஊரே மர்மமாய், பாழடைந்து போய்க் கிடந்தால் எப்படி இருக்கும் ? ஏதோ ஹாலிவுட் பட பேய்க்கதை போல தோன்றும் இத்தகைய திகில் நகரங்கள் உலகெங்கும் நிறைய இருக்கின்றன. இதை பொத்தாம் பொதுவாக பேய் நகரங்கள் என்று அழைக்கிறார்கள். நோய்கள், பேய்கள், போர்கள், இயற்கைச் சீற்றங்கள் என இந்த பாழடைந்த நகரங்களின் பின்னணியில் ஏதோ ஒரு திகில் பறக்கும் மர்மம் நிச்சயம் உண்டு. அப்படி நமது சுவாரஸ்யத்தையும், அச்சத்தையும் கிளறும் பத்து நகரங்கள் இந்த வாரம்.

  1. கோல்மான்ஸ்கோப்

தெற்கு நமீபியாவில் அமைந்துள்ள நகரம் கோல்மான்ஸ்கோப். முழுவதும் மணலினால் புதைத்து போன இந்த நகரத்தின் அமானுஷ்ய நிசப்தம் பீதியைக் கிளப்புகிறது. வைர வேட்டைக்காரர்களின் நகரமாக 1900களின் ஆரம்ப காலத்தில் உருவான நகரம் இது.

பள்ளிக்கூடம், மருத்துவமனை, தியேட்டர் என சகல வசதிகளுடனும் உற்சாகமாய் இருந்தது. அதன் பின் என்ன ஆனது என்பது மணலில் புதைந்து போன மர்மம். வைரத்தின் தேவை குறைந்ததால் இந்த நகரம் கைவிடப்பட்டிருக்கலாம் என்பது சிலருடைய கணிப்பு. வைரம் கிடைக்காததால் இந்த நகரம் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்பது வேறு சிலருடைய அனுமானம்.

உண்மையில் மணலினால் மூடிக் கிடக்கும் இந்த நகரத்தில் விடுபடாத பல திகில் கதைகள் மணலுக்குள் புதைந்து கிடக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு மர்மக் காலத்தைக் கடந்த அமானுஷ்யப் பார்வையுடன் கிடக்கின்றன சிதிலமடையாத சில வீடுகள்.

  1. பிரைபியாட்

 

வடக்கு உக்ரைனில் இருக்கிறது பிரைபியாட் எனும் நகரம். 1986க்கு முன் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்த இடம் இது. பெரும்பாலானவர்கள் அணு கூடங்களில் வேலை செய்தவர்கள். நீச்சல் குளம், மருத்துவமனை, வீடுகள், விளையாட்டு பூங்காங்கள் என சர்வ வசதிகளுடன் இருந்த நகரம் இது.

திடீரென கொள்ளை நோய் மக்களைத் தாக்கியது. நோயுடன் பல விபரீத சம்பவங்களும் சேர்ந்து கொள்ள மக்கள் திகிலடைந்தனர். நகருக்கு ஏதோ சாபம் இருக்கிறது என நகரையே காலி செய்து விட்டு ஓடினர். விலையுயர்ந்த பொருட்கள் உட்பட எதையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. உயிரை மட்டுமே எடுத்துக் கொண்டு ஓடினர். ஏதோ ஓர் மயான அமைதியும், திகிலும் இன்னும் அந்த வீதிகளில் உறைந்து தான் கிடக்கிறது.

அது என்ன நோய் ? அது அணுவோடு தொடர்புடையதா ? அல்லது அமானுஷ்ய துரத்தலா ? கேள்விகள் மட்டுமே இந்த நகரைச் சுற்றி முளைத்து வளர்கின்றன.

  1. சான் சி

பணக்காரர்களுக்கான உல்லாச ஆரம்பித்தது தான் தைவானிலுள்ள இந்த சான் சி நகரம். இந்த இடத்தில் உண்மையிலேயே மர்ம தேசம் தான். இந்த கட்டிடங்களைக் கட்ட ஆரம்பித்ததில் இருந்தே மரணங்கள் தொடர்கதையாகிவிட்டன. செத்துப் போனவர்கள் பேயாய் மாறி வேலையைத் தொடரவிடாமல் செய்தார்கள். எந்த வேலையும் ஒழுங்காக நடக்கவில்லை.  

இத்துடன் பணப் பிரச்சினையும் சேர்ந்து கொள்ள நகரைக் கட்டும் பணி பாதியிலேயே நின்று போனது. அரசும் மர்மங்கள் நிறைந்த இடத்தை அப்படியே கைவிடச் சொல்லி விட இன்று ஓர் ஏகாந்தத்தின் சின்னமாய் நிற்கிறது சிதிலமடைந்த கட்டிடம். அவ்வப்போது அங்கே எழும் அமானுஷ்ய சத்தங்கள் திகிலை அதிகரிக்கச் செய்கின்றன.

  1. ஒரடோர் சர் கிளேன்

பிரான்சிலுள்ள ஒரடோர் சர் கிளேன் எனும் கிராமம் துயரத்தின் சின்னம். இரண்டாவது உலகப் போர் காலத்தில் ஜெர்மானியர்களால் சூழப்பட்டு 1944ல் நிர்மூலமாக்கப்பட்டது. கிராமத்துலுள்ள மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆண்கள் வேகமாய் செத்துவிடக் கூடாது என்பதற்காக கைகால்களையெல்லாம் வெட்டி ஊனமாக்கினர். பெண்கள் குழந்தைகளெல்லாம் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர் என திடுக்கிட வைக்கிறது வரலாறு.

இந்த கிராமம் இன்று ஒரு மௌனச் சின்னமாய் நிற்கிறது. இந்த கிராமத்துக்குள் நுழைய இன்றும் பலருக்கு பயம். உலகப் போரின் திகில் நிமிடங்களை அசைபோட்டுக் கொண்டு மௌனமாய்க் கிடக்கிறது இந்தக் கிராமம். படுகொலை செய்யப்பட்ட ஆன்மாக்கள் கோபத்தில் பல் கடித்துக் காத்திருபதாய் நம்புவோர் உண்டு.

  1. கிராகோ

இத்தாலியிலுள்ள ஒரு மலை நாடு இந்த கிராகோ.  கி.பி 500 களில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது வரலாறு சொல்லும் கணக்கு. கொள்ளை நோய் தான் இந்த நகர் பாழடைந்து போக முக்கியக் காரணம்.

சுற்றிலும் பயமுறுத்தும் நிசப்தமும், உதவி கிடைக்காத தனிமையும் எல்லாமாய் சேர்ந்து மக்களை அச்சுறுத்தின. 1891 களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்த பூமி இது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் விலகிச் செல்ல 1960 களில் முழுமையுமாக கைவிடப்பட்டது இந்த இடம். இன்றும் தனியே சென்றால் நரம்புகளில் திகில் பரவும்.

  1. லாகோ எபிகன்

அர்ஜெண்டீனாவிலுள்ள லாகோ எபிகன் ஒரு காலத்தில் மக்களின் ஆரவாரங்களால் நிரம்பியிருந்த பகுதி. பின்னர் இந்த இடம் ஏரித் தண்ணீரில் மூழ்கி முழுவதுமாய் அழிந்து போனது. மக்களில் பலர் உயிரை விட்டார்கள், மற்றவர்கள் ஊரை விட்டார்கள்.

ஊரை விழுங்கிய மரணத் தண்ணீர் காலப்போக்கில் வடிந்து விட்டது. ஆனாலும் அந்த சுவடுகளில் உறைந்திருக்கிறது அருவி அழுத்தமாய் எழுதிச் சென்ற கொடூரத் தீர்ப்பு. அந்த காய்ந்து போன நீரின் வடுக்களில் காலத்தின் ஆன்மாக்கள் காத்திருப்பதாய் மக்களிடம் ஒரு பீதி !

  1. ஜப்பானின் ஹசீமா தீவு

இன்றைக்கு ஹசீமா தீவு காங்கிரீட் மிச்சங்களாலும், உடைபட்ட சுவர்களாலும், உறைந்து கிடக்கும் மௌனத்தாலும் நிரம்பி வழிகிறது. இந்த தீவைச்சுற்றி மிக நேர்த்தியான காங்கிரீட் மதிலும் உண்டு. இன்று மயான அமைதியாய் இருக்கும் இந்த தீவு முன்பு அப்படி இருக்கவில்லை. இந்த பூமியிலேயே மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிகளில் ஒன்றாக இருந்தது இது.

1887லேயே ஒரு காலனியாக உருப்பெற்ற இந்த இடம் நாகசாகி கடற்கரையோரம் அமைந்திருக்கிறது. இந்த இடத்தை புகழ்பெற்ற மிட்சுபிஸி நிறுவனம் வாங்கி அங்கே அட்டகாசமான வீடுகளையும், வசதிகளையும் செய்து கொடுத்தது.

அந்த தீவின் முக்கியமான பணி நிலக்கரிச் சுரங்கப் பணி. திடீரென அந்த நிலக்கரி சுரங்கக் கையிருப்பு தீர்ந்து போனது. அந்தத் தீவே மக்கள் வாழ்வதற்கு இயலாததாய் மாறிவிட்டது. மக்கள் தீவை விட்டு வெளியேறத் தொடங்கினர். இப்போது அமானுஷ்யத்தை உள்ளடக்கி கிடக்கும் அந்த தீவு 2009ம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகளுக்காய் திறந்து விடப்பட்டுள்ளது.

உடைந்த வீடுகளில் இன்றும் காண முடிகிறது கற்காலத் தொலைக்காட்சிகளும், கடந்த கால சாட்சிகளான பொருட்களும்.

  1. வரோஷா, சைப்ரஸ்

1970 களில் துவக்கத்தில் இந்த கடற்கரை நகரம் பணக்காரத் தனம் உலவும் இடம். பணக்காரர்களும், சினிமா நட்சத்திரங்களும் ஓய்வெடுக்கும் ஒய்யார இடம். எலிசபெத் டெய்லர் இங்குள்ள கடற்கரை ஹோட்டலில் தான் வெப்பக் குளியல் நடத்துவார்.

1974 ஆகஸ்டில் துருக்கி படையினர் இங்கே நுழைந்தபின் நிலமை சட்டென தலைகீழானது. போரின் அச்சத்தினால் அங்கே வாழ்ந்து வந்த 15,000 மக்களும் தலைதெறிக்க நாட்டை விட்டு ஓடினர். எல்லா ஆடம்பரப் பொருட்களும், செல்வங்களும் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் நிரம்பி வழிந்தன.

பின்பு மக்கள் அந்த நகருக்குத் திரும்பும் சூழலே உருவாகாமல் நகரம் நரக‌மானது. பேய்களின் நடமாட்டம் அதிகம் என அந்த நகரைப் பற்றி அறிந்தவர்கள் அடித்துச் சொல்கின்றனர். 1970 களில் வெளி வந்த கார்கள் இன்னும் ஷோரூம்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன, யாருக்கும் பயன்பட முடியாமல்.

நகரை தூசுதட்டி பயன்படுத்தும் விதத்தில் மாற்ற வேண்டுமெனில் 12 பில்லியன் டாலர் செலவாகுமாம். சரி பார்க்கலாம் என விட்டு வைத்திருக்கிறார்கள்.

  1. போடி, கலிபோர்னியா

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு பேய் நகரம் இருக்கிறது என்று சொன்னால் நம்பக் கடினமாகத் தான் இருக்கும். தங்கம் கிடைக்கிறது என நம்பி, தங்க வேட்டைக்காக உருவான நகரம் இது. அப்படியே அங்கே வேட்டை நடத்தியவர்களுக்கு தங்கம் கிடைக்கவும் செய்தது. அது அப்படியே நகரை களியாட்டம், வன்முறை, பாலியல் தொழில் என திசைமாற வைத்தது.

கொண்டாட்டங்கள் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. தங்கம் கிடைப்பதெல்லாம் நின்று விட்டது. இனி இங்கே என்ன வேலை என, மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள். தாக்குப் பிடிக்க முடியாத குளிர் மக்களை விரட்டியது. இனிமேல் இங்கே வாழவே முடியாது எனும் நிலை ஏற்பட்டது. பலர் இறந்தனர். 1940ல் அங்கே யாருமே இல்லை எனும் நிலை உருவானது.

1962 ல் இது போடி வரலாற்றுப் பூங்கா என மாறி சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது. அந்த நகரின் அமானுஷ்யத் தன்மையும், எதையோ ஒளித்து வைத்திருக்கும் அதன் மர்மமும் நகரைப் பார்க்கும் போது மனதுக்குள் திகில் தீயைப் பற்ற வைக்கிறது.

  1. ஆக்தம், ஆஸீர்பெய்கான்

ஆஸீர்பெய்கான் நகரின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ஆக்தம் எனும் ஊர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான இந்த நகரம் ஒரு காலத்தில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் ஆனந்தமாய் வாழ்ந்த பூமியாய் இருந்தது. இன்று யாருமே இல்லாத பாழடைந்த பேய் நகரமாய் இருக்கிறது.

இந்த நகருக்கு சாபம் போர்வடிவில் வந்தது. 1918 ..1920களில் நடந்த நகோர்னோ கராபாக் போர் இந்த ஊர் மக்களை கலங்கடித்தது. என்ன நடந்தது ? இங்கிருந்த மக்கள் என்ன ஆனார்கள் என்பதைக் குறித்த சரியான தகவல்கள் ஏதும் இல்லை.

இப்போது வரலாற்றின் மிச்சமாய் சில கட்டிடங்களும், இரவில் சென்றால் சிரித்து வரவேற்கும் பேய்களும் மட்டுமே இங்கே மிச்சமிருக்கின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.