மக்கள் டாக்டர். அனிதா !

Image result for ariyalur anitha wallpaper

 

இது
தற்கொலையல்ல !

நிலத்தைக் களவாடிவிட்டு
பயிர்
தற்கொலை செய்தது
என்பீர்களா ?

மழையை மறுதலித்து விட்டு
நதி
தற்கொலை செய்தது
என்பீர்களா ?

கதிரவனைக் கடத்தி விட்டு
நிலா
தற்கொலை செய்தது
என்பீர்களா ?

இது கொலை !

நீட்
என விரல் நீட்டிய‌
நாட்டாமை விரல்களின்
விஷமே
சாகடித்தது !

நம்பிக்கையின்
கிளைகளில் நீர் தெளித்து
வேர்களில்
பாதரசம் பாய்ச்சிய‌
பசப்பு வார்த்தையே
சாகடித்தது

ஏழைகள்
கனவுகள் காணலாம் !
“கனவுகள் மட்டுமே காணலாம்”
எனும்
ஆதிக்க சக்தியின்
ஆணவமே சாகடித்தது !

கூலித் தொழிலாளி
கூனியே நிற்கவேண்டும்
எனும்
போலி நீதியின்
சர்ப்ப நாவுகளே சாகடித்தன !

ஏழை
என்ன தான் செய்வான் ?

பயிர் வாடினால்
உயிர் விடுவான் !

தன்மானம் தகர்ந்தால்
உயிர் விடுவான் !

கனவுகள் உடைந்தால்
உயிர் விடுவான்

விடுவதற்கென
அவனிடம்
சொந்தமாய் இருப்பது
உயிர் மட்டும் தானே !

அவன் என்ன‌
வழக்கு வந்தால்
இங்கிலாந்தில் குடியேறுபவனா ?

கைது வந்தால்
சொகுசு விமானத்தின்
படியேறுபவனா ?

அவன்
மண்ணின் மைந்தன் !

இனியும் இதை
தற்கொலை எனல்
பொருட்குற்றம் !
இது மனிதத்தின் பெருங்குற்றம் !

கடிவாளத்தோடு
காத்திருப்பவனுக்கு
குதிரையை வழங்கு !
பல்லக்கை அல்ல !

அல்லது
வழங்கப் போவது
பல்லக்கு என்பதை
படிக்கும் போதே முழங்கு !

யாம்
சவால்களைக் கண்டு
பின்வாங்குபவர் அல்லர்

வரலாறுகளின்
துவக்கமும்,
வீரத்தின் திலகமும்
தமிழனைத் தாண்டிய பின்பே
ஏழுகடல் தாண்டியது !

அடக்குமுறைகளின்
அடியில்
நசுங்கியே மாள‌
நாங்கள் மண்புழுக்களல்ல‌
வீரத்தின் விழுப்புண்கள் !

சுவரில் எறிந்த
பந்து போல‌
நாங்கள்
விரைவாய் திரும்பும் நாள்
வெகு தொலைவில் இல்லை !

எங்களைப் பொசுக்க‌
நீங்கள் வைத்த‌
அனுமர் வால் நெருப்பில்
நீங்களே
மிரளும் நாள்
வெகு தொலைவில் இல்லை !

அதைக் காண,
மரணத்தின் கோரப்பற்களில்
விதையாய் விழுந்த‌
எம்
சகோதரி இல்லை என்பது மட்டுமே
வலி கூட்டுகிறது !

அந்த வலியே
எங்கள் உணர்வுகளுக்கு
வலு கூட்டுகிறது.

*

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.