நீ கடைசியாகப் பறித்துப் போட்ட
உன்
புன்னகைப்பூ ,
என் படுக்கையருகில்
சலனமற்றுக் கிடக்கிறது.
உனக்குள் இடம்பெயர்ந்த
என்
இதயத்தின் இன்னொரு பாதி
திரும்பி என்
தெருவோரம் வரை வந்துவிட்டது.
நீ எனக்குள்
இறக்குமதி செய்திருந்த
கள்ளி முட்கள் எல்லாம்
முனை ஒடிந்து
மட்கிப் போய்விட்டன.
தொடுவானம்
தொட ஓடிய
நினைவுப் புள்ளிமான்களை எல்லாம்
திரும்ப என்
கூட்டுக்குள் அடைத்து
தாழிட்டாகிவிட்டது.
மழையில் கரைந்த
பாதி ஓவியமாய் தான்
இப்போதெல்லாம்
உன்
மீதி நினைவுகள்
மிதந்து கொண்டிருக்கின்றன.
காதலின்
வெட்டுக்காயங்களை எல்லாம்
நிகழ்வின் தசைகள் வந்து
நிவர்த்திவிட்டன.
வேதனைகளின் முடிவுரையாய்
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.
எப்போதேனும்
எனைக் கடக்க நேர்ந்தால்
எதிரியாய் பாவித்துப் போ.
இன்னொரு புன்னகையை மட்டும்
பறித்துப் போடாதே.