அன்பினால் ஓர் அவதாரம் ( கண்தானம் )

Image result for eyes painting

இந்த பூமி,
நிறக்கலவைகளின்
நாட்டியாலயம்.

கதிரவத் தீயில்
பச்சையம் சமைக்கும்
சங்கீதத் தாவரங்களின்
சரணாலயம்.

அலையும் ஓவியங்களாய்
சிரிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணப் பூக்களோடு
வர்ணனை பேசித் திரியும்.

இலைகளின் தலை கழுவி
பூக்களின் முகம் துடைக்க,
மேகத்தின் பாகங்கள்
மழை வடிவில் மண்தேடும்.

நதிகளின்
ஓட்டப்பந்தயத்தை,
சிறு மீன் கூட்டங்கள்
ஈரத் தலையுடன்
வேடிக்கை பார்க்கும்.

மொத்த அழகின்
ஒற்றைப் புள்ளியாய்
சிறு மழலைகள்
சிரித்துக் களிக்கும்.

கிழக்கைத் துவைத்துக்
களைக்கும் கதிரவன்
கண்கள் சிவக்க
மேற்குப் போர்வைக்குள்
துயில்ப் பயணம் துவங்கும்.

விடியல் முதல்
மடியல் வரை
அழகின் இழைகளை
அகத்திழுத்துச் செல்லும்
உன்
முகத்திரு விழிகள்.

அத்தனை அழகும்
ஆழமான குருட்டறைக்குள்
கருப்புச் சாயம் பூசப்பட்டுக் கிடக்கும்
பார்வை பிடுங்கப்பட்ட
பாமரக் கண்களில்.

எப்போதேனும்
ஓர்
கண்கிடைக்குமெனும்
கண்ணாடிக் கனவுகளுடன்
இருட்டுக்குள் அவை விழித்திருக்கும்.

புதைக்கப்பட்ட
ஒவ்வோர் விதையும்
கிளைக் கண்களால்
பூமியைத் தீண்டும்.
விதையின் முடிவில்
புது அவதாரம் மீண்டும்.

உணவைப் பகிர்ந்தளிப்பவன்
பசியைப் பட்டினியிடுகிறான்.
கண்களைப் பரிசளிப்பவனோ
பிரபஞ்சத்தையே பரிசளிக்கிறான்.

இது
உன் பூமி.
உன் பாதங்கள் பிறந்த பூமி.

உன்
உடலின் அழிவிற்குப் பின்னும்
உன் தேசத்தின் தேகத்துக்கு
உன் பார்வைகளைப் பரிசளி.

கண் தானம் செய்.
புனிதனாவதன் முதல் படி
மனிதனாய்
நீ
மனிதனை அடைவது தான்.

 

One comment on “அன்பினால் ஓர் அவதாரம் ( கண்தானம் )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.