என் நாவுகள்
வார்த்தைகளை வார்த்ததில்லை,
என்
வாய்க்குகைக்குள் இருந்து
இன்னும்
எந்தக் குரலும் வெளிக்குதிக்கவில்லை.
திசைகளெங்கும் இசையின்
விசைகள்,
மூங்கில்கள் கூட
முணுமுணுக்கின்றன,
அசையும் இலைகள் கூட
இசை தர இசைகின்றன.
மனசுக்குள்
ஓராயிரம் மீன்கொத்திகள்
ஓரமாய் அமர்ந்து
சிந்தனை
கொத்திக் கொண்டிருக்க,
என் நாவு மட்டும்
நங்கூரம் இறக்கப்பட்ட
கப்பலாய்,
உள்ளுக்குள் இறந்து கிடக்கிறது.
அழுத்தமாய் இழுத்தாலும்
வெறும்
எழுத்துக்களே எழுகின்றன
கழுத்தின்
சுடுகாட்டுப் புதைகுழியிலிருந்து !
மூன்றாம் நாளில்
உயிர்த்தெழாத வார்த்தைகளின்
சிலுவைச் சாவுகள் மட்டுமே
என் கல்வாரிக் கழுத்தில்.
மரணம் வந்து
மேய்ந்து போன வயலாய்,
இதயம் முழுதும்
சொல்லாத ஆதங்கங்களின்
தடயங்கள் மாத்திரம்.
யாரேனும் சொல்லக் கூடுமோ
என்
தொண்டையைக்
கிழித்த,
தூண்டில் வாசகங்களை ?
உள்ளுக்குள் ஒளிந்திருக்கும்
ரசனையெனும்
வைகையோரக் குயிலோசையை
என்
சைகையெனும் விரலோசைகளால்
விளக்கி விட முடிவதில்லையே.
உங்களுக்கு
இசைப்பவனைக் கண்டால்
பொங்கும் பிரமிப்பு,
பேசுபவனைக் கண்டால்
எனக்குள் எழுகிறது !
அம்மா என்றழைக்காத
உயிரில்லையே…
வரிகளும் வந்து
வலிகளை வலிமையாய்
வரைந்து போகும் எனக்குள்.
மனசு மட்டும் அழைத்துப் பார்க்கும்
ஓசை வருமா எனும்
ஆசையில்.
“அம்மாஆஆஆ..” என்று.