காதல் ஓர் காட்டு மலர்
அதைக்
கால்கள் கட்டி
வீட்டுத் தொட்டியில்
பூக்க வைத்தல் இயலாது.
பூக்குமிடத்தில் தங்கி
உங்கள்
இதய வங்கிகளில்
வாசனை முதலீடுகளை
ஆரம்பியுங்கள்.
0
காதல்
ஓர் சுதந்திரப் பறவை.
கானகத்தைச் சுற்றிக்
கூண்டு கட்டுவதால்
காதலைப் பிடித்தல் சாத்தியமில்லை.
அதன்
சிறகுச் சாலைகளில்
உங்கள் கூடுகளை
திறந்தே வையுங்கள்.
தங்கிச் சென்றால்
வாங்கிக் கொள்ளுங்கள்,
இல்லையேல்
வழக்கிடாதீர்கள்.
0
குகைகளுக்குள்
காதல் குடியிருப்பதில்லை.
காதலுக்காய்
அத்தனை கதவுகளையும்
திறந்தே வையுங்கள்,
வருகைக்கும்
விலகலுக்கும் !.
நுழைந்ததும் மூடி விட்டால்
மூச்சுத் திணறலே மிஞ்சும்.
0
காதல் ஒரு
ஆச்சரியம்,
வேண்டாத இடத்தில் காய்க்கும்
வேண்டும் இடத்தில்
யாகம் நடத்தினாலும்
தியாகம் நடத்தினாலும்
முளைகூட விடுவதில்லை.
சமையல் சட்டியில்
சிப்பிகள்
முத்துத் தயாரிப்பதில்லையே !.
0
காதல் பதக்கமல்ல,
கைக்கு வந்ததும்
பெட்டியில் வைத்துப் பாதுகாக்க !
அது
புத்தகத்துள் பதுக்கி வைக்கும்
மயில் பீலியுமல்ல.
தினமும் தீண்டு.
செதுக்காமல் ஒதுக்கும்
பாறைகள்
சிற்பமாவதில்லை.
தண்ர் செல்லா
தானியங்கள்
அறுவடைக்கு தயாராவதில்லை.
0
விலகிவிடுமோ எனும் பயம்
விலக்கப் பட வேண்டிய
இலக்கு.
சந்தேக விலங்கு களுக்குள்
புனித உணர்வுகளைப்
பூட்டி வைக்க முடியாது.
0
காதலியுங்கள்,
இலையில் அமரும் பனித்துளியை
புல் நேசிப்பது போல,
செடியில் அமரும்
வண்ணத்துப் பூச்சியை
இலைகள் நேசிப்பது போல,
நேசியுங்கள்.
கூடுகட்டச் சொல்லி
கட்டாயப் படுத்தி,
சமாதி கட்டி முடிக்காதீர்கள்