பிரதேசங்களின் தேகங்களில்
நேச நதியை நகரவும்
வாச மலரை நுகரவும் வைக்கும்
ஓர்
பிரபஞ்சப் பாக்கியம்
அன்பு.
இதயங்கள் இரண்டு
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
குடிபெயர்ந்துக் குடிவாழும்
ஓர்
குதூகலக் காடு
அன்பு.
அன்பு,
படிகம் பிரித்துத் தரும்
வண்ணங்களின் வரிசை
ஆனாலும்
காதலுக்கு மட்டுமே இதில்
வரிசை மீறிய வžகரம்.
அன்பு,
மனிதத்தின் மையம்,
மதங்களும், கடவுளும்
அன்பில் தான் மையம்
தராசுகளின் தட்டுகளில்
வெட்டி வைத்து,
முள்ளின் முனையோடு
முரண்டுபிடித்து,
கைகளில் அள்ளி
பைகளில் தள்ளும்
தானியமல்ல அன்பு,
அது தண்ணீர் !
வறண்ட நிலத்தின் வேரிலோ,
குளிர்ந்த இடத்தில் நீரிலோ
சுட்டுக் கொண்டால் வானிலோ,
உருவம் மாறி உருவம் மாறி
உறங்காமல் உலாவும்.
அன்பு,
தானே பொழியும் மழை.
செயற்கைப் பிரசவங்களை,
கர்ப்பம் தரிக்காத
பணப் பசுக்கள்
நடத்த முடியாது.
அன்பு,
கட்டளைகளுக்குள் சிக்காது,
வான் மழைக்கு
விண் வெளியில்
அணைகட்டல் இயலாது.
அன்பு,
வலுக்கட்டாயத்தின் விளைவல்ல
பறக்கச் சொல்லி
மீன்குஞ்சை
பழக்கப் படுத்தல் இயலாது.
அன்பு,
அது அன்பாகவே உலவும்.
கால் கிலோ காற்று என்றும்
அரை லிட்டர் அன்பு என்றும்
யாரேனும்
அளந்து சொல்லல் இயலுமோ ?
அன்பை அளியுங்கள்,
அத்தனை சட்டமீறல்களும்
சட்டென்று அடைபட்டுப் போகும்.
அத்தனை
கண்ர் விழிகளும்
கைக்குட்டை இல்லாமலேயே
ஈரம் வற்றிப் போகும்.
அன்பு
பண்டமாற்று முறையல்ல,
விற்றுத் தள்ளுவதற்கு.
வெற்றுக் கையோடு
விரோதியும் கொஞ்சம்
பெற்றுக் கொள்ளட்டுமே..
புல்லில் வீழும் பனித்துளிக்கும்
ரோஜாவில் வீழும் பனித்துளிக்கும்
ஈரமும் பாரமும்
வாழும் நேரமும்,
வித்தியாசப் படுவதில்லையே.