அந்த உண்டியலுக்கும்
இந்த
பிச்சைப்பாத்திரத்துக்கும்
தூரம் அதிகமில்லை.
தூரம் மட்டும் தான்
அதிகமில்லை.
அந்த தேவாலயத்தின்
மதில் சுவரும்,
அந்த தொழுகைக் தளமும்,
கோவில் தெப்பக் குளமும்
எல்லாம்
எல்லாம் பெரிது தான்
கருணை தரும்
கடவுளோடு மக்களுக்கு
கருணை அதிகம்.
கடவுளோடு மட்டும் தான்
கருணை அதிகம்.
தெருக்கள் தோறும்
கும்பாபிஷேகம் தொடரும்,
இடையூறாய் இருந்தால்
சேரிகள் மட்டும்
சரிக்கப்படும்.
அச்சத்தின் அடிமைகள்
மதவாதிகளா ?
இல்லை
பத்தியின் உச்சத்தால் மதவாதிகளா ?
மனிதாபிமானம்
மிச்சமில்லா தேசத்தில்
ஆண்டவனைப் பூட்டிய
சாவிகளும் தொலைந்துவிட்டனவா?
மனிதனுக்காக
கடவுள் வந்ததே
மதங்களென்று பெயரிடப்பட்டன.
அதனால் தானோ என்னவோ
எப்போதுமே
மனிதனுக்காக மனிதன்
வர மறுக்கிறான்.
எல்லா உறிகளும்
வெண்ணை தாங்குகின்றன,
திருடச் சொல்லி
கண்ணனுக்கு கருணை மனுவும்
தருகின்றன.
ஆனால்,
கண்ணனோ
கொள்ளையிட
கள்ளமில்லா வெள்ளை உள்ளங்களை
மட்டுமே தேடுகிறான்.
வெண்ணை உறிகளை அல்ல.