மதவாதிகளே
நீங்கள்
மிதவாதிகளாவது எப்போது ?
ஜ“ரணிக்கும் முன்
மரணிக்கும் வாழ்க்கை
இன்னுமா
பயணிக்கிறது ?
மனித அறுவடைக்காய்
அயோத்திக்கு ஆயுதம்
அனுப்புகிறீர்கள்.
சாவின்
புள்ளிவிபரங்கள் பொறுக்கி
வெற்றி அட்டவணை
வரைகிறீர்கள்.
உங்கள்
குடிசைக் கதவுகளை
கரையான் அரிக்கிறது.
வேதனை வேல்கள்
பொருளாதார விலா இடிக்கிறது !
எப்போதேனும்
இதை உணர்ந்ததுண்டா ?
மதத்தின் மையத்தில்
மனிதாபிமானப் புயல் தானே
மையம் கொண்டிருக்கிறது
பின் ஏன் அது
பிசாசுகளை கரை கடத்துகிறது ?
வெறியின் கிண்ணத்தில்
ஊறிக்கிடக்கும் மனசை
எந்த கங்கை வந்து
கழுவப்போகிறது ?
ஏன்
கடவுளைக் கொளுத்தி
மதத்தை வெளிச்சப்படுத்துகிறீர்கள் ?
ஆண்டவனை
கொன்றுவிட்டுக்
கோயில் கட்டுகிறீர்கள் ?
வீடு பேறு கோரி விட்டு
ஆண்டவனுக்கே
வீடு தரப் போகிறாயா ?
தவமிருக்கும் பக்தன் நீ
வரம் வினியோகிக்கிறாயா ?
தீட்டி வைத்த
ஆயுதங்களை ஆராயும் முன்
கொஞ்ச நேரம்
பூட்டி வைத்த மத நூல்களை
ஆராய்ந்து பார்.
எங்கேனும்
அடுத்த மதத்தை
அழிக்கச் சொன்னால்
வா.
எனக்கும் ஓர் அரிவாள் கொடு.