இப்படி ஒரு நாள்
இல்லாமலேயே போயிருக்கலாம்.
நேற்று மதியம்
சூரியனைக் கட்டி,
முள்முடி சூட்டி
மரச் சிலுவையில்
மரணிக்க வைத்தனர்.
போதனைகளின்
முடிவில்,
போதகனின் உயிர்
முற்றுப்புள்ளியாய்
குத்தப்பட்டு விட்டது.
எங்கேனும்,
சீசாத் தண்ணீரில்
சூரியன் அணைந்ததாய்
வரலாறுண்டா?
மூச்சுக் காற்றில்
மலைகள் சரிந்ததாய்
சரித்திரமுண்டா ?
நாளை !
மண்ணில் புதைத்த
விண்ணகம் ஒன்று
விஸ்வரூபம் கொள்ளும் நாள்.
விதைகளின் வேலை
மரணிப்பதல்ல
பயணிப்பதென்பது
புரியப்போகும் நாள்.
இதற்கிடையில்
தனியாய்
சனி-யாய் ஏன் நான் ?
உலர்வுக்கும்
புலர்வுக்கும்
சாட்சியாக நிற்கும்
சபிக்கப்பட்டவனா நான் ?
இல்லை,
மனுக்குல மகத்துவம்
மண்ணுக்குள் இருப்பதால்
காவல் செய்யும்
ஏவல்க் காரனா நான் ?
மடியலுக்கும்
விடியலுக்குமிடையே
ஏன் ஓர்
இயலாமையின்
இடைச்சொருகல் ?
என்
இரு கரத்தையும்
விரித்துப் பிடிக்கிறேன்.
இடது ஆள்காட்டி விரலில்
கல்வாரிக் காயங்களால்,
குருதித் தூறல்களாய்
ஓர்
பாவத்தின் பலிபீடம்.
வலது கை விரல் நுனியில்
நெருஞ்சிகள்
மெழுகை நெரித்தாலும்
சுடர் கிழிவதில்லை
எனும்
நம்பிக்கையின் பேரொளி.