ஆயிரம் மைலுக்கு
அப்பால் இருந்தாலும்
என் குரல் கேட்பாய் என்று
சில நூற்றாண்டுகளுக்கு
முன் யாரேனும் சொல்லியிருந்தால்
அவனுக்குப்
பைத்தியக்காரப் பட்டம்
கிடைத்திருக்கும்.
எங்கே இருந்தாலும்
பார்த்துக் கொண்டே பேசலாம்
என
கடந்த நூற்றாண்டின்
முதல் படியில் யாரேனும்
முனகியிருந்தால்,
மனநிலை மருத்துவமனை
அவனை அனுமதித்திருக்கும்.
பூமிக்கு வெளியே போய்
பூமியை
படமெடுப்பேன் என்றவனை
ஈசல் கூட சீண்டியிருக்காது.
நிரூபிக்கப் பட்டபின்பே
நம்புவேன் என
பிடிவாதம் பிடிக்கும் பழக்கம்,
கடிவாளம் போட்டாலும்
நமக்குள் அடங்கி விடாது.
நேற்றைய கேலிகளில்
விளைந்திருக்கின்றன
இன்றைய
வியப்பின் விரல் நுனிகள்.
இன்றைய கேலிப் பேச்சுகள்
நாளை சில
ஆச்சரியங்களை
உச்சரிக்கும்.
புரியாவிட்டாலும் நம்பும்
நிலையில் நானும் நீயும்.
யாரோ சிரிக்கிறார்கள்,
கடவுள் தான்
மனிதனைப் படைத்தாராமே ?.
0