ஆரம்பப் பள்ளியில்
என்னோடு கூடவே இருந்தான்
பட்டன் அறுந்து போன
சட்டையோடு
ஒரு நண்பன்.
ஆசிரியர் மேஜையில்
சாக்பீஸ் திருடினாலும்,
பள்ளித் தோட்டத்தில்
கொய்யா திருடினாலும்
பாதி தர தவறாதவன்.
வீட்டுப் பாடங்களை
எழுத மறந்து போன
நாட்களில் எல்லாம்,
ஆசிரியர் வரக்கூடாதெனும்
என்
பிரார்த்தனையில் தவறாமல்
அவனும் பங்கெடுப்பதுண்டு.
‘குளமாங்கா’ உடைத்துத் தின்றும்,
கடலை மிட்டாய்
கடித்துச் சிரித்தும்,
புன்னை மரத்தடியில்
புன்னக்காய் பொறுக்கிக்
கோலி விளையாடியும்,
எங்கள்
முதல் ஐந்தாண்டுக் கல்வி
கரைந்தே போயிற்று.
பிரியவே முடியாதென்றும்
உடையவே கூடாதென்றும்
நான்
கங்கணம் கட்டிக் கொண்ட
முதல் நண்பன் அவன்.
பின்,
அந்த மேய் மாத
வெயில் விடுமுறைக்குப் பின்
நான்
ஆறாம் வகுப்புக்கு சென்றபோது
அவன் நினைவுகள் மட்டும்
அவ்வப்போது வந்து சென்றன.
அவன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
சில கிலோமீட்டர் தான்
தூரம்.
அப்போது.
நாங்களோ வெவ்வேறு திசையில்
வெகுதூரம்
நடந்திருந்தோம்.
ஆயிற்று
இருபத்து நான்கு வருடங்கள்.
இப்போது பார்த்தால்,
‘மணி என்னாச்சு’ என்று கேட்டு
நகரக் கூடும்.
பரிச்சயமில்லாத
புது முகம் கண்டு.
நமது வலைத்தளம் : சிகரம் | பதிவர்கள் கவனிக்கவும் ! : முத்தான கவிதைகள் மூன்று..
LikeLike