உன்னைக் காத்து
கண்களுக்குள் நான்
ஏற்றி வைத்த
மெழுகுவர்த்திகள்
கண்ணீராய் வழிகின்றன.
உன் குரலுக்காகவே
கைத்தடி ஊன்றிக்
காத்திருக்கின்றன
என் காதுகள்.
ஒரே ஒரு முறை
நீ
பார்வை பூசுவாய் என
பார்த்திருக்கிறது
மொட்டுக்குள்
பாறை இறக்கிய பாரமாய்
என் இதயம்.
நீ,
நிராகரிக்க மாட்டாய் எனும்
நம்பிக்கையில் தான்
விண்ணப்பங்களை அனுப்புகிறேன்.
அவை
சேர்ந்து விட்டதா எனும்
சேதியே எனைச் சேரவில்லை
இரவின் நீளலிலும்,
பகலின்
தொடர் பயணத்திலும்
என்
நம்பிக்கைப் பள்ளங்கள்
உலர மறுத்து ஊறுகின்றன.
எப்போதெனக்கு வரமருள்வாய்
பிரபஞ்சத்தின்
பரம் பொருளே…