மதங்களின்
தீப்பந்தங்களில்
தேனீக்களை தீய்க்கும்
தலைமுறைத் தவறுகள்
தொடரத்தான் வேண்டுமா ?
உனக்கும் எனக்கும்
சில நம்பிக்கைகள்.
உன்
சம்பிரதாயக் கிளைகளின்
வண்ணங்கள் வேறுதான்
ஆனாலும் நம்
ஆணி வேர் மையங்கள்
அன்பெனும் ஒன்று தானே.
நீ
பூணூல் போடுகிறாய்,
நான்
ஞானஸ்நானம் பெறுகிறேன்,
அவன்
விருத்தசேதனம் செய்கிறான்
இதில்
ஆயுதப் போதனை
எந்தப்பக்கத்தில் அச்சானது ?
அருவிகள்
எப்போதுமே மலையேறிச்
செல்வதில்லை,
அது கடல் நோக்கிய பயணம்.
நீயும் நானும்
நதியின் மீன்கள் தானே.
பின் ஏன்
தூண்டில் தயாரிக்க துடிக்கிறாய் ?
அத்தனை நதிகளையும்
கடல்
மார்போடணைத்து
தாலாட்டவில்லையா ?
உன்
கைக்கடிகாரமும்,
என் கைக்கடிகாரமும்
ஒரே சீராய் தானே ஓடுகின்றன
நாம் மட்டும் ஏன்
மூச்சிரைத்துக் கொண்டே
முன்னேறுகிறோம்.
உன் நம்பிக்கைகளுக்கு
நீ நீரூற்று,
என் கிளைகளில்
நான் ஊஞ்சல் ஆடுகிறேன்,
அவன் வாசலில்
அவன் தோரணம் கட்டட்டும்,
விட்டு விடு
கண்ணி வெடிகளின் கழுத்தில்
கால் மிதிக்கும்
அழுத்தம் இனி வேண்டாமே.
நோய் அண்டாத மதம்
இன்று வரை
பிறக்கவில்லை.
எந்த மருந்தும்,
மதத்தின்
புட்டிகளில் பயிராவதில்லை.
நம்பிக்கைகளை
வளர விடு,
அதில் அடுத்தவனைப்
புதைப்பதை மட்டும்
வெட்டி விடு.