கருப்புக் கொடி பிடித்து
வானம்
கண்ணீர் வடித்துத்
துடித்துக் கொண்டிருந்தது.
சோகத்தின்
தற்கொலை முனையிலிருந்து
குதித்துக் குதித்துச்
செத்துக் கொண்டிருந்தன
மேக வீட்டு மழைக் குழந்தைகள்.
அரவங்களும்
அரவமில்லாமல் இருந்த
அந்த இரவுப் பொழுது,
முகமற்ற நிழல்களோடு
முனகிக் கிடந்தது.
நட்சத்திர ஓட்டைகளையும்
இறக்கி வைத்த
இமை இருட்டு
இறுக்கிக் கட்டியிருந்தது.
எதன் மீதோ கொண்ட
கோபத்தின் நீர் வடிவமாய்,
யார் மீதோ கொண்ட
மோகத்தின் சத்த முத்தமாய்,
வானம்
நிறுத்தாமல் கத்திக் கொண்டிக்க,
வழக்கமாய் வழியும்
ஓநாய் குரல்களும்
ஓலைக்கிடையே ஒதுங்கி விட்டன.
நிலாச்சோறுக்கு வழியில்லாமல்
தாழ்ப்பாளுக்குள்
தரை நனைய
குடிசைக் குழந்தைகள்
தாயின் புடவைக்குள் நடுங்கின.
முறங்களும், பாய்களும்
தற்காப்புக்கு தகாததானதால்
துடுப்பில்லாமல் ஓடிய
குடிசைப் படகுகளின் பயணிகள்
காங்கிரீட் வானத்துக்காய்
கூடங்கள் தேடி ஓடும் இரவு.
அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட
நதிகளின் நரம்புகளுக்குள்
இரவு முழுவதும்
இரத்தப் பாசனம்.
விடியலை நோக்கி
விடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது
முரட்டு மழை.
நாளை விடியும் போது,
புதிய வானம்
புதிய பூமியை நோக்கி
கண் சிமிட்டிச் சிரிக்கும்.
எங்கள் கரங்கள் மட்டும்
கருணை மனுக்களோடும்,
கண்ர் விழிகளோடும்
நிவாரண நிதிப் படிக்கட்டுகளில்
நிர்வாணமாய் நிற்கும்.