நீ
அழகாக இல்லையென்று
யாரேனும் சொன்னால்
அழ ஆரம்பிக்காதே
பிறர் மனதில்
பொறாமை விளைவிக்க மாட்டேன்
என்று
பெருமிதம் கொள்
0
நீ
உயரமாய் இல்லை என்று
இகழ்ந்து பேசினால்
உடைந்து போகாதே.
உயர்வுக்கும் உயரத்துக்கும்
இம்மியளவும் சம்மந்தமில்லை
என்று
இன்னொருவருக்கு உணர்த்த
உனக்கொரு வாய்ப்பென்று உணர்ந்து கொள்.
0
நீ
கருப்பு என்று யாராவது
கிண்டலாய் சொன்னால் கலங்காதே !
அழகு நிலைய அறைகளுக்குள்
அடைபட்டும் விடாதே.
நிறத்தை மூலதனமாக்கி
நிலத்தை வென்றவர் யாருமில்லை
என்பதை நினைவில் கொள்.
0
நீ
முட்டாளென்று யாரேனும் சொன்னால்
உதடு வெடிக்க கோபப் படாதே
மெதுவாய் ஒரு
புன்னகை சிந்து…
பிரபஞ்சத்தின் பெருமை
பொறுமை என்பதைப் புரியவை !!!
0
உன்
உண்மை அன்பை யாரேனும்
உதாசீனம் செய்தால்
உருகி உருகி தொலைந்து போகாதே
உள்ளம் கற்க
உனக்கொரு வாய்ப்புக் கிடைத்ததாய்
உவகை கொள்.
*
Advertisements