பன் முனைத் தாக்குதல்
பரம நிச்சயம்,
ஆனாலும்
பயப்படாமல் அவிழ்த்து வை
உன் கருத்துக்களை.
ஒரே இடத்தில்
சுற்றிக் கொண்டிருக்க
நீயொன்றும்
ராட்டினமல்ல,
அச்சையும் கூடவே
அழைத்துச் செல்லும் சக்கரம்.
மூடி வைக்கும் கேள்விகள்
மூச்சிழந்த சடலங்கள்.
கேட்டு வைத்தால் மட்டுமே
அவற்றுக்கு
உயிர்வரும் சாத்தியமுண்டு.
நீயாகவே துவங்கு,
உனக்கான
கல்லறை தவிர
மற்ற அனைத்தையும்
நீயே
கட்டியெழுப்பத் துவங்கு.
பயம் என்னும் இருட்டை,
நீ
குகையைக்குள் இருந்து,
தயக்கத்தைத்
தின்று கொண்டே
துரத்த முடியாது.
குற்றம் சொல்லப்படாத
யாருமே
வரலாறுகளில்
குறித்து வைக்கப் பட்டதில்லை.
மலை இருக்கிறது
என்று நகர்பவர்களை விட
அதனடியில்
புதையல் இருக்கிறதா என
பரிசோதிப்பவர்களுக்கே
வாழ்க்கை
ஆச்சரியத்தை
அடுக்கி வைத்திருக்கிறது.
பன் முனைத் தாக்குதல்
பரம நிச்சயம் தான்.
ஆனாலும்
பயப்படாமல் அவிழ்த்து வை
உன் கருத்துக்களை.
*