உன்னோடு
இன்னும் கொஞ்சம்
உறவாடு.
வாசலில் கோலமும்
உள்ளுக்குள்
அலங்கோலமும்
அனுமதிக்கத் தக்கதா ?
நுரையீரல் பைகளில்
நிகோடின் கைகள்.
வயிற்றுப் பாதையில்
அமிலப் பாசனம்.
சிந்தனை முழுவதும்
விகாரச் சிலந்திகளின்
விடாத வலை.
வெள்ளைத் தோடு போர்த்திய
கெட்டுப் போன
முட்டை வாழ்க்கை எதுக்கு ?
வெள்ளையடித்த
கல்லறை வாழ்க்கை எதுக்கு?
உடைகளை
துவைத்துக் காயப் போட்டு
உள்ளத்தை ஏன்
அழுக்கில்
ஊறப் போடுகிறாய் ?
உள்ளிருந்து வருவதே
உன்னை
மாசுபடுத்தும்.
உள்ளுக்குள் கசாப்புக் கடை
வெளியே
சரணாலயம்.
உள்ளே கருவாடு வாசம்
வெளியே மீன்களோடு நேசம்.
பூ வியாபாரி நீ.
சாக்கடைச் சாகுபடி
எதற்கு இனி ?
மெல்ல மெல்ல
சிந்தனைகளை
சொடுக்கெடு.
காற்றில் வந்தாலும்
தீயவற்றை
காதின் வாசலோடு
கத்தரித்து அனுப்பு.
தீய வார்த்தைகள்
தெரியாமல் எழுந்தாலும்
தொண்டைக்குள்
பள்ளம் வெட்டி நிரப்பு.
கோபத்தின் சூரிய கிரணத்தை
புன்னைகைப்
பனிக்கட்டியாய் விரட்டு.
தராசுகள்
நிறையவே கிடைக்கும்.
தரமானதாக்கு.
வேர்களைப் பகைத்த முளை,
வாழ்தல் இயலாது.
மனதைப் பகைத்த மனிதன்
வீழ்தல் தவறாது.
Pingback: புள்ளியில் துவங்கு – TamilBlogs