வாழ்க்கை
ஒரு
சோதனைக் கூடம்
இங்கே
விஞ்ஞானியும் நீயே
குரங்கும் நீயே.
கவனமாய்
சோதனை நடத்து.
0
வாழ்க்கை
ஒரு
சிற்பக் கூடம்.
இங்கே
சிற்பியும் நீயே.
சிற்பமும் நீயே.
சிதைக்காமல் உன்னை
செதுக்கு.
0
வாழ்க்கை
ஒரு கப்பல்.
இங்கே
பயணியும் நீயே
மாலுமியும் நீயே.
பாதை தவறாமல்
பயணம் செய்.
0
வாழ்க்கை
ஒரு தவம்.
வரம் கொடுப்பவனும் நீயே
பெறுபவனும் நீயே.
தரமான வரங்களை
தா.
0
வாழ்க்கை ஓர்
வித்தியாசக் காலநிலை.
மேகமும் நீயே
தாகமும் நீயே.
தேவையான போது
மழையை வருவி.
0
ஓவியன் நீ,
உன்னைச் சுற்றித் தூரிகைகள்.
நீ
ஒவியத்துக்காய்
காத்திருத்தலாகாது.
பொறுப்புகளோடு பொருந்து
மறுப்புகளோடு வருந்தாதே.
0
வருந்துவோரை விட்டு
வலி அகலுவதில்லை.
மருந்து
அருந்துவோரை விட்டே
அது
அகன்று விடுகிறது !
0
புரிந்து கொள்.
முல்லைக்குத் தேர் தந்தான்
பாரி.
பெருமை
முல்லைக்கா தேருக்கா எனும்
விவாதம் எதற்கு.
பாரிக்கு எப்போதோ
பரிசளிப்பு விழாவே முடிந்தது.
Pingback: வாழ்க்கை – TamilBlogs