ஒவ்வொரு காலையும்
உன்னிடம்
ஓர்
வெள்ளைத் தாளை
கிள்ளித் தருகிறது.
சில நாட்கள் அதை
நீ
கண்ணீர் விட்டு
ஈரமாக்குகிறாய்.
சில தினம்
குருதி தொட்டு
கோரமாக்குகிறாய்.
என்ன செய்வதென்னும்
யோசனையில்
வெள்ளையாகவே
பலநாள்
ஒதுக்கி வைக்கிறாய்.
அன்பு பூசி
அழகாக்குவதும்,
வம்பு பேசி
அழுக்காக்குவதும் உண்டு.
கோபத்தின்
குப்பைக் கூடையில்
அதை நீ
கசக்கியும் எறிவதுண்டு.
அந்தக் காகிதம்
சிறுகதைக்குத் தேறாதென்று
நீ
அதில்
கட்டுரை கூட எழுதாமல்
கிழித்தெறியும் தருணங்களும்,
ஹைக்கூ எழுத
கோரப்பாய் எதற்கென்று
மூலையில் கிறுக்கி விட்டு
சுருண்டு படுத்து
சேதமாக்கும் தருணங்களும்,
எழுதத் தெரியாதவன்
கைகளுக்கு
காகிதம் எதற்கென்னும்
கேள்வித் தருணங்களும்
தவறாமல் விளைவதுண்டு.
வெள்ளையாய் இருப்பது
மட்டுமே
அதன் கைகளில்.
ஓவியம் வரைந்து
அதை பத்திரப் படுத்துவதும்,
கொல்லையில் அதை
கொன்று புதைப்பதும்
உன் கைகளில் தான் !
எது எப்படியானாலும்,
நாளையும்
ஓர் வெள்ளைக் காகிதம்
உனக்காகக்
காத்திருக்கும்.