உன்
முகவரியைத் தொலைத்து விடாதே.
உன் வேர்கள்
பூமிக்குள்
சொந்தப் பாதையில் நகரட்டும்
அடுத்த மரத்தின்
உயிர் உறிஞ்சவேண்டாம் .
உன் கனவுகளுக்கு
பிறரின் பாதையில்
நீ
வண்ணம் தேட முடியாது !
உன்
சுயமரியாதையை
சுயநினைவிழக்க
விட வேண்டாம்
நீ
நடக்கின்ற பாதைகள்
உன் பாதங்களுக்காக
பிறப்பிக்கப் பட்டதாகட்டும்
செருப்புக்காக காலைவெட்டி
காயப்பட வேண்டாம்
உன் சிந்தனைகள்
உனக்குள்
சிறகு முளைப்பிக்கட்டும்
புறாவின் இறகை
வண்ணத்துப் பூச்சிக்கு
ஒட்டவைப்பது சாத்தியமில்லை !!!
ஈரமான இறகு உலர
வெயில் போதும்
தீ மூட்டி
தீய்க்க வேண்டாம்.
கடன் வாங்கிய
கனவுகள்
நிஜத்தில்
நினைவிழந்து போகலாம்.
நீ
நீயாக இரு.
வேறுபட்ட சிந்தனைகளும்
மாறுபட்ட பாதைகளும் தான்
மனுக்குலத்தின் மகத்துவங்கள் .
நீரோடை
நடக்கின்ற பாதையில்
நடக்கட்டும்.
கிணற்றுக்குள் தான்
இருக்க வேண்டுமென்று
கடலுக்குக்
கட்டளையிட முடியாது .
உன் வேர்களும்
உன் கிளைகளும்
ஒரே விலாசத்தில் இருப்பது தான்
உனக்குப் பெருமை !!
*
Pingback: நீயாக இரு – TamilBlogs
கிணற்றுக்குள் தான்
இருக்க வேண்டுமென்று
கடலுக்குக்
கட்டளையிட முடியாது .// செம லைன்
LikeLike