ஆர்வமெனும் ஆற்றில்
தான்
அறிவுத் தாமரை
விரிகிறது.
கேளுங்கள்,
மறுக்கப் பட்டாலும்
மறுதலிக்கப் பட்டாலும்
ஏதேனும்
உங்களுள் ஊன்றப் படுகிறது.
ஆர்வமற்றதும்,
தேடல்களில்லாததுமான
வாழ்க்கை
தனக்குள்ளே ஊனப்படுகிறது.
ஆர்வமில்லாத
குயில்களுக்கு சிறகுகள்
அகலமாவதில்லை,
ஆர்வமற்ற கூட்டுப் புழுக்கள்
வண்ணத்துப் பூச்சியாய்
வடிவ மாற்றம் அடைவதில்லை.
அறிய வேண்டுமெனும்
ஆவல் தானே,
கண்டுபிடிப்புகளின் கண்களை
இமை விலக்கி
இழுக்கின்றன.
வரலாறுகளின் மிச்சங்களை
இடிபாடுகளிலிருந்து
வரவைக்கின்றன.
தன்னை அறியும்
முயற்சிகள்
புனிதர்களையும்,
பிறரை அறியும்
முயற்சிகள்
நல்ல மனிதர்களையும்
தந்திருக்கின்றன.
ஆர்வம் கொள்ளுங்கள்,
ஒரு பக்கத்துக்கு மிகாமல்
எழுதும்
விடைத்தாள்களை விட,
சில
வினாத்தாள்கள் சிறந்தவைகளே.
Pingback: ஆர்வம் அபூர்வம் – TamilBlogs