பைபிளில் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. இஸ்ரேல் நாட்டின் புதிய அரசனாக ‘ரகபெயாம்’ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர் சாலமோன் மன்னனின் மகன். அவனைத் தேடி நாட்டிலுள்ள மக்களெல்லாம் வந்தனர். வந்தவர்கள் அவரிடம் விண்ணப்பம் ஒன்றினை வைத்தனர்.
“ உங்கள் தந்தை எங்களுக்கு ரொம்ப கஷ்டத்தைக் குடுத்தாரு. நீங்க எங்களோட கஷ்டத்தைக் கொஞ்சம் குறைச்சீங்கன்னா, நாங்க காலம் பூரா உங்க பணியாளர்களா இருப்போம்” என்பது தான் அந்த விண்ணப்பம்.
“சரி நீங்க போயிட்டு மூணு நாள் கழிச்சு வாங்க” என சொல்லி அனுப்பினார் ரகபெயாம்.
முதலில் அரண்மனையிலுள்ள முதியோர்களைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டார். “நீங்க சொல்லுங்க, என்ன பண்ணலாம் ?”
அவர்கள் அவருக்கு நல்ல ஒரு ஆலோசனை சொன்னார்கள். “அரசே..நீங்க கொஞ்சம் இறங்கி வந்து அவர்களுக்கு இரக்கம் காட்டுங்க. அப்போ உங்களுக்கு அவர்கள் பணிந்திருப்பார்கள்” !
பிறகு அவன் அவனுடைய நண்பர்களான இளைஞர்கள் சிலரிடம் ஆலோசனை கேட்டான். அவர்களோ, “என்னது ? பணிஞ்சு போறதா ? உன் வெயிட் என்னாவது ? உங்க கஷ்டத்தை நான் இன்னும் அதிகமாக்குவேன். சாட்டைக்கு பதில் முள் சாட்டை பயன்படுத்துவேன்னு சொல்லுங்க. அது தான் அரசனுக்குரிய மரியாதை” என்றார்கள்.
ரகபெயாம் முதியோரின் வார்த்தையைப் புறக்கணித்து இளைஞர்கள் சொன்னது போல் செய்தான். மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அவனை விரட்டியடித்து விட்டு இன்னொருவரை தங்களுக்கு அரசராக்கினார்கள்.
முதியோரின் ஆலோசனையைப் புறக்கணித்த ரகபெயாம் அனைத்தையும் இழந்து வாழ்வில் தோல்வியடைந்தான்.
“மூத்தோர் சொல் முழு நெல்லிக்காய், முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்” என அம்மா அடிக்கடி சொல்வார். பெரியவர்களுடைய வார்த்தைகளுக்கு வலிமை உண்டு. அவை அவர்களுடைய நீண்டகால அனுபவத்தின் வெளிச்சத்தில் வருபவை. அவை அவர்களுடைய தொலை நோக்குப் பார்வையில் வருபவை. அவர்களுடைய அறிவுரைகள் உணர்ச்சி வேகத்தில் உருவானவை அல்ல, அவை பெரும்பாலும் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து பெறப்படுபவையே..
முதியவர்களோடு இணைந்து வாழ்கின்ற இளையவர்களைப் பார்த்தால் சட்டென கண்டுபிடித்து விடலாம். அவர்களுடைய அணுகுமுறையில் ஒரு கனிவும் தெளிவும் இருக்கும். முதியவர்களோடு வாழாத இளைஞர்களிடம் பரபரப்பும், பதட்டமும் இருக்கும். காரணம் எளிது. முதியவர்கள் வாழ்க்கையை பயணித்து வந்தவர்கள் அவர்களுடைய அனுபவங்களும், அணுகுமுறைகளும் இளைய தலைமுறைக்கு வரம்., அவர்களுடைய கதைகள் வாழ்வியல் பாடங்களை எளிதாக புரிய வைக்கின்றன.
தாத்தா பாட்டிகளோடு வளர்கின்ற குழந்தைகள் விரைவில் பேசுவார்கள், மன பலத்தோடு வளர்வார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன என்பதையும் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதியவர்கள் தான், கடந்த தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள். அந்த பாலம் உடைபடும் போது இரண்டு தலைமுறைக்கு இடையேயான அறிவுப் பகிர்தலும், உணர்வுப் பகிர்தலும் இல்லாமல் போய்விடும் அபாயம் உண்டு. முதியவர்களை அரவணைப்பது ஒன்றே இந்த உறவு நீட்சிக்கான அடிப்படை ஆதாரம் என்பதை உணர்ந்து கொள்வோம்.
பெரும்பாலும் இளைஞர்கள் உதாசீனப்படுத்தக் கூடிய ஒரு விஷயம் கலாச்சார மாற்றம் சார்ந்தது. கதைகளோடும், உரையாடல்களோடும் வளர்ந்த முதியவர்களுக்கு வாட்ஸப்களும், ஃபேஸ்புக் களும் ஜீரணிக்க முடியாத புதுமைகள். இரவு ஒன்பது மணி ஆனவுடன் தூங்கச் செல்லும் முதியவர்களுக்கு அதிகாலை வரை இளசுகள் அடிக்கும் டிஜிடல் அரட்டை ஒத்துக் கொள்ள முடியாத ஒவ்வாமை ! தங்களுடைய வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு அவர்கள் காட்டும் பிடிவாதம் இளசுகளுக்கும், முதியவர்களுக்கும் இடையே மனக் கசப்புகளை உருவாக்கி விடுகிறது.
முதியவர்களோடு சேர்ந்து வாழ்தலும், அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்டலும் இளைஞர்களுக்கு மட்டும் வலுவூட்டும் செயலல்ல, அது முதியவர்களின் நலனுக்கும் நல்லது என்கின்றன ஆய்வுகள். அவர்களுடைய வாழ்க்கை புதுப்பிக்கப்படுவதாக அவை சொல்கின்றன.
அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் கேட்கும் அறிவுரை ஞானமுள்ளதாய் இருக்கும் எனவும், அவர்களே நீண்ட கால திட்டத்தை மனதில் வைத்து அறிவுரை வழங்க முடியும் என்றும் அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவித்திருந்தது. “இளைஞர்கள் பாஸ்ட் ஃபுட் போல உடனடி பயன் என்பதை மட்டுமே சிந்திக்கின்றனர். ஆராயாமல் முடிவெடுக்கின்றனர். முதியவர்களோ தொலை நோக்குப் பார்வையுடன் முடிவெடுக்கின்றனர்” ஏன்கிறார் இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் ‘டாட் மடாக்ஸ்’ .
முதியவர்கள் வாழ்வில் பல தோல்விகளைச் சந்தித்து கடந்து வந்தவர்கள். பல வெற்றிகளையும் சந்தித்து வந்தவர்கள். வெற்றிகள் தந்த பரவசங்களும், தோல்விகள் தந்த பாடங்களும் அவர்களுடைய இதயத்தின் இயங்கு தசைகளெங்கும் இயங்கிக் கிடக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் தவறிய இடங்களில் நாம் விழாமலும், வெற்றிகளில் மமதை கொள்ளாமலும் இருக்க அவை உதவி புரியும்.
அதே நேரத்தில் இளைஞர்களிடம் இருக்கக்கூடிய சக்தி அபரிமிதமானது. அவர்களுக்கு தொழில்நுட்பமும் இன்றைய அறிவியல் வளர்ச்சியும் தந்திருக்கும் வாய்ப்புகள் அலாதியானவை. அவற்றை இளைஞர்கள் அரவணைக்க நினைப்பார்கள். அது பல நேரங்களில் முதியவர்களுக்குப் புரிவதில்லை. புரியாதவற்றை ஒத்துக் கொள்வது அவர்களுக்கு எப்போதுமே எளிதாய் இருப்பதில்லை.
தாங்கள் வாழ்ந்த காலமே பொற்காலம் எனும் சிந்தனையை அவர்களிடமிருந்து பிரித்து விட முடியாது. நாம் முதியவர்கள் ஆகும்போது “நாம் வாழ்ந்த காலமே பொற்காலம்” என நாமும் சொல்வோம் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. அத்தகைய சிந்தனைகளை கொஞ்சம் விலக்கி வைப்பதே இளைஞர்களின் வலிமையை முழுமையாய் பயன்படுத்த வழிவகை செய்யும்.
முதியவர்களோடு இணைவது எளிதாய் நடப்பதில்லை. ஒரே அலைவரிசையில் சிந்தனைகள் இருப்பதில்லை. ஆனால் இணைந்து விட்டால் அந்த நட்பும், உறவும் எளிதில் உடைபடுவதில்லை.
துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு முதியவர்கள் கவனிக்கப்படுவதில்லை. அல்லது அவர்களுக்குரிய மரியாதை சரியான அளவில் கிடைப்பதில்லை. கிராமங்கள் முதியோர் இல்லங்களாகிவிட்டன. இளைஞர்கள் வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். நகர்ப்புறங்களில் இருக்கின்ற முதியவர்களுக்காய் சொகுசான முதியோர் இல்லங்கள் தயாராக்கப்படுகின்றன. அவர்களது அனுபவமும், அவர்களது உறவுகளும் தனிமைப்படுத்தப்படுகின்றன.
வலிகளிலேயே கொடுமையான வலி, தான் உயிருக்கு உயிராய் நேசித்த உறவுகளால் உதாசீனப்படுத்தப்படுவது தான். இன்றைக்கு முதியவர்கள் எதிர்பார்ப்பது சொகுசான வாழ்க்கையல்ல, உறவான வாழ்க்கை. முதியவர்களின் அனுபவங்களை கவனிக்காமல் விடுவது, தேசத்தின் பொக்கிஷங்களை துருப்பிடிக்க விடுவதைப் போன்றது.
இன்று நாம் விதைப்பதையே நாளை நாம் அறுவடை செய்வோம். முதுமையை நாம் மதித்தால், நமது முதுமையும் மதிக்கப்படும். அவர்கள் அன்பினாலும் உறவினாலும் கட்டப்பட்டவர்கள். அவர்களை காயப்படுத்துவது நீங்காத சாபத்தை அள்ளித்தரும்.
முதியவர்களின் அனுபவமும், இளைஞர்களின் மனபலமும் இணைந்து விட்டால் சமூக வீதியில் வெற்றிகளுக்குக் குறைவே இருக்காது !
*
சேவியர்
Pingback: முதியவர் அறிவுரையும்; இளையவர் அசட்டையும் – TamilBlogs
அனுபவங்களின் அடையாளங்களே எம் முதியாே்ர..அழகான படிப்பினை நன்றி.
LikeLiked by 1 person