நீ
யார் என்பதை
நீயறிவாய்.
பிறருடைய
அடைமொழிகளுக்கெல்லாம்
அடம்பிடிக்க வேண்டிய
அவசியமில்லை.
பிறருடைய
துருவேறிய தூற்றல்களுக்காய்
துயரப்படவும்
தேவையில்லை.
சூரியனை
நிலாவென
பெயர்மாற்றம் செய்யலாம்
அதன்
கதிர்களை எங்கே
கடத்திச் செல்வாய் ?
கடலை
வெறும் மண்மேடென்று
சட்டமும் இயற்றலாம்
உப்பு நீரை
எங்கே கொண்டு
ஒளித்து வைப்பாய் ?
நிலத்தின்
நிறம் கண்டு
விதைகள்
முளை விடுவதில்லை
நிலம் மாறி
நட்டதால்
ரோஜா
கருப்பாவதும் இல்லை.
நீ
என்பது
உனது இயல்பு.
பிறருடைய
மோதிரங்களுக்காய்
உன்
விரல்களை
வெட்டிக் கொள்ள வேண்டாம்.
மழை இல்லையென
தோகை
கத்தரிப்பதில்லை
மயில்.
வெயில் இல்லையென
தற்கொலை
செய்து கொள்வதில்லை
நிலா.
இயல்புகள்
இறக்காதவரை
மின்மினிகளும்
இரவைக் கிழிக்கும்.
இயல்புகள்
தொலைந்து போனால்
கூண்டில் சிங்கமும்
தூண்டிலில் உயிர்விடும்.
ஒன்றை மட்டும்
புரிந்து கொள்.
நீ யார்
என்பது
அடுத்தவனின்
கேள்விகளுக்கான விடையல்ல.
உனது
விடைகளுக்கான கேள்வி.
*
சேவியர்