மரங்களும், நாங்களும்
மரங்களே
எங்கள் அடையாளங்களாய்
இருந்தன.
மரங்களை வைத்தே
எதையும்
அறிமுகம் செய்தோம்.
பெரிய புளியமரத்துக்கு
தெக்கே
இருந்தது
தண்ணீர்க் கிணறு.
விழுதிறக்கிய
ஆலமரம் தாண்டிப் போனால்
சர்ப்பக் குளம்.
வளைந்த
தென்னைமரத்துக்கு
பின்னால்
தங்கப்பனின் வீடு.
பெரிய
முந்திரி மரங்களின்
ஊடாகச் சென்றால்
ஊர் பள்ளிக்கூடம்
கமுகு மரங்களின்
எல்லையில் அமைந்திருந்தது
செல்லாயி பாட்டியின்
குடிசை.
எதையும்
மரங்களை வைத்தே
அடையாளம் கண்டோம்.
இன்று
எல்லாம்
தலைகீழாகிவிட்டது.
கோலப்பனின்
மாடி வீட்டுக்குப்
பின்னால் நிற்கிறது
மாமரம்
என அறிமுகம் செய்கின்றனர்
மரத்தை.
*
சேவியர்