வருடங்களின்
வருடல்களை
சுருக்கைப் பையில்
சுருட்டி வைத்ததாய்,
காலங்களின்
கணங்களை
உறைய வைத்த
உறவு மூட்டையாய்
பொக்கிஷமாய்
மௌனித்திருக்கிறது
அப்பாவின் டைரி.
தந்தத்தால் இழைத்த
தங்க டைரி கிடைத்தாலும்
அப்பாவின்
அழுக்கேறிய டைரியின்
அழகுக்கு ஈடாகாது.
புரட்டிப் புரட்டி
புடைத்துப் போன
அதன்
வலது ஓரம்
வசீகரமாய் இருக்கிறது.
அப்பாவின்
கைரேகை
டைரியின் பக்கங்களில்
காட்சி தராமல் மறைந்திருக்கிறது
கடவுளைப் போல.
அப்பாவின்
எழுத்துகளின் வசீகரம்
என்
பால்யத்தின் பக்கங்களை
புதிதாய்க் கொளுத்துகின்றன.
அந்த டைரி
ஒரு
திறந்த ரகசியமாய்
தியானித்திருக்கிறது.
கவலையின்
கணக்கு வழக்குகளும்,
ஆன்மீக
மறை விளக்குகளும்
நேசத்தின் விரல்ப்பதிவுகளும்
அந்த டைரியெங்கும்
நிரம்பியிருக்கின்றன.
கிழித்து விடாத
கவனத்துடன்
கிழிந்த பக்கங்களைப்
புரட்டுகிறேன்.
ஒரு கடலைப் புதைத்த
கண்ணீர் துளியுடன்
அந்த
வாசனை வரிகளை
வாசிக்கிறேன்.
வாசித்து முடித்து
நெஞ்சோடு அணைக்கையில்
சட்டென
நிகழ்கிறது
சொர்க்கத்தின் சலுகையாய்
அப்பாவின் அரவணைப்பு.
*
சேவியர்