அப்பாவின் சட்டை
அப்பாவின் சட்டை
ரொம்பவே
அழகானது !
சற்றே
தொளதொளவென இருக்கும்
அந்த
அரைக்கை சட்டை
அப்பாவின் பிரிய தோழன்.
அப்பாவின்
கரங்கள் நுழைந்ததும்
அதற்கொரு
கம்பீரம் வந்து விடும்.
சிவன் கழுத்துக்
கருடனைப் போல
விறைப்புடன் நின்று
முறைத்துப் பார்க்கும்.
அது தரும் வாசனை
என்
நாசிகளில்
நங்கூரமிட்டு நிற்கிறது.
நேர்த்தியாய் மடித்தே
எப்போதும்
அலமாரியில் வைப்பார்
அப்பா.
அப்பாவின்
உழைப்பை
நெருக்கமாய் அறிய
அந்த
சட்டையால் மட்டுமே
முடிந்திருக்கிறது.
அவரது
வலிகளின் முனகல்களை
அது மட்டுமே
பதிவு செய்து வைத்திருக்கிறது.
அவரது
பதட்டத்தின் தருணங்களை
காலியான
பாக்கெட்களே
கண்ணீரோடு அறிந்திருக்கின்றன.
அப்பாவின் சட்டை
அற்புதமானது.
வியர்வையின் விரல்களால்
கிழிந்து போன
காலர் பகுதியுடன்
அது
இப்போதும் காத்திருக்கிறது.
என்றேனும்
ஒரு நாள்
அப்பாவின் கைகள் தீண்டுமென
இருள் கொடியில்
இருந்து
அழுது கொண்டிருக்கிறது.
அந்த
தேக வாசனையின்
தேவ தருணங்களுக்காக
தவிப்புடன் அது
தவமிருக்கிறது.
அப்பா
மறைந்து போன
செய்தியை
நாங்கள் யாரும்
அதனிடம் சொல்லவில்லை.
*
சேவியர்