பிளாக் செயின் – 1

பிளாக் செயின் – 1

Image result for block chain

புதிய தொலைத்தொடர்புக் கொள்கை 2018 தனது அறிக்கையில், “பிளாக் செயின்” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாகவும், அதனால் பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்றும் அறிவித்தது. குறிப்பாக தேவையற்ற அழைப்புகளைத் தடுப்பது, அழைப்புகளின் தரத்தை அதிகரிப்பது போன்ற பல விஷயங்களைச் செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்திருந்தது.

பத்திரப் பதிவு, நிலப்பதிவு போன்ற விஷயங்களையெல்லாம் பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்றும், அதனால் பல சிக்கல்கள் தீர்ந்து விடும் எனவும் சமீபத்தில் அலசப்பட்டது. போதாக்குறைக்கு அடுத்த இண்டர்நெட் இந்த பிளாக் செயின் தொழில்நுட்பம் தான் என பல கட்டுரைகள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதின.

நிறுவனங்களெல்லாம் பிளாக் செயின் நுட்பம் தெரிந்தவர்கள் வேண்டும் என அழைக்க ஆரம்பித்திருக்கின்றன. எல்லா வேலை வாய்ப்புத் தளங்களிலும் ‘பிளாக் செயின்’ வேலை வாய்ப்பு கதவுகளை மட்டுமல்லாமல், கூரையையும் திறந்து வைத்துக் காத்திருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிப் பேசினால் பிளாக் செயின் பற்றி யாரும் பேசாமல் இருப்பதில்லை. அந்த அளவுக்கு பிளாக் செயின் எல்லா இடங்களிலும் பேசு பொருளாகிவிட்டிருக்கிறது. இதற்கு மேலும் பிளாக் செயின் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது தொழில்நுட்ப பாவம் !

சரி, அதென்ன பிளாக் செயின் ?

பொதுவா இப்படி ஒரு கேள்வி கேட்டு தானே ஆரம்பிப்போம் ? இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக “ஏன் பிளாக் செயின் ?” என ஒரு கேள்வி கேட்போம். ஏனென்றால் எல்லா புதிய தொழில் நுட்பங்களும் தேவையின் அடிப்படையில் தான் உருவாகின்றன. எல்லா தொழில்நுட்பங்களும் ஏதோ ஒரு சவாலைச் சரிசெய்யத் தான் உருவெடுக்கின்றன.

அதன் அடிப்படையில், எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு இருக்கின்ற இணையம், கிளையண்ட் -சர்வர் தொழில்நுட்பம் இவற்றிலுள்ள சவால்களை நிவர்த்தி செய்வதற்காக உருவானதே இந்த பிளாக் செயின் தொழில்நுட்பம். குறிப்பாக பாதுகாப்பு குறித்த சவால்களை எதிர்கொள்ள கட்டமைக்கப்படதே இந்த தொழில் நுட்பம்.

ஷடோஷி நகமோடோ என்பவருடைய சிந்தனையில் உதித்த குழந்தை தான் பிளாக் செயின். பிட்காயின் எனப்படும் டிஜிடல் கரன்சிக்காக இந்த சிந்தனையை அவர் வடித்தெடுத்தார். செலவு பண்ணினோமா ? பண்ணலையான்னே தெரியல ? வாங்கினோமா வாங்கலையான்னே தெரியலை ? என்கின்ற அவர்களுடைய அக்கவுண்டிங் சிக்கலை நிவர்த்தி செய்ய இந்த பிளாக் செயின் பயன்பட்டது. 2008ம் ஆண்டு உருவான இந்த நுட்பம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் பரபரப்படைய ஆரம்பித்திருக்கிறது.

இப்போது நமது மென்பொருட்களெல்லாம் கிளையண்ட் சர்வர் எனும் சிந்தனையின் அடிப்படையில் தான் இயங்குகிறது. உதாரணமாக நாம் ஏடிஎம் மில் பணம் எடுக்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். ஏடிஎம்மில் நமது கார்டை கொடுக்கிறோம். அதிலுள்ள ஒரு ரீடர் நமது அட்டையிலுள்ள தகவல்களையெல்லாம் எடுத்து சுவிட்ச் எனப்படும் மென்பொருளுக்கு அனுப்பும்.

வருகின்ற தகவல்களை ஆராய்ந்து சுவிட்சானது குறிப்பிட்ட சர்வருக்கு தொடர்பு கொள்ளும். அதிலிருந்து தகவல்களைப் பெற்றுக் கொண்டபின் என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டுமோ அதைச் செயல்படுத்தும். இங்கே முக்கியமான தகவல்கள் எல்லாம் சர்வரில் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒருவேளை இந்த சர்வர் செயலிழந்தாலோ, தற்காலிகமாக வேலை செய்யாமல் போனாலோ மென்பொருள் நிலைகுலையும். ஏடிஎம் வேலை செய்யாது. தாக்குதல்களை நடத்த விரும்புவர்கள் இத்தகைய சர்வர்களைத் தான் குறிவைத்துத் தாக்குவார்கள். ஒரே இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் எப்போதுமே ஆபத்தானவை. அதனால் தான் பெரும்பாலான சர்வர்களுக்கு ஒரு ‘பேக்கப்’ சர்வரை வைத்திருப்பார்கள். ஒண்ணு போச்சுன்னா இன்னொண்ணு பயன்படும். ஒருவேளை இரண்டும் போச்சுன்னா போனது தான் !

இத்தகைய சிந்தனையை முற்றிலும் உடைத்துக் காட்டியது தான் பிளாக் செயின் தொழில்நுட்பம். இதில் தகவல்கள் எல்லாம் பல இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றின் பிரதியை எடுத்து பல இடங்களில் வைப்பதல்ல. ஒரே விஷயங்களை பல இடங்களில் வைப்பதும், அதை சரியான வகையில் பாதுகாப்பாக இணைப்பதும், தகவல்களை எளிதாய் எடுப்பதும் தான்.

உதாரணமாக ஒரு எக்ஸல் ஷீட் ஆயிரக்கணக்கான பிரதிகளுடன் பல இடங்களில் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். எதில் யார் என்ன அப்டேட் செய்தாலும் அந்த தகவல் எல்லாருக்கும் சட்டென தெரியும் என கற்பனை செய்து கொள்ளுங்கள். அது தான் பிளாக் செயின் நுட்பத்தின் அடிப்படை. ஒரே நேரத்தில் பலர் இதைப் பயன்படுத்தலாம் என்பதும், பலர் இதில் மாற்றங்களைச் செய்யலாம் என்பதும் சிறப்பம்சம்.

பல இடங்களில் பரவியிருப்பதாலும், ஒரு மையச் சேமிப்புப் பகுதி இல்லாததாலும் இதில் பாதுகாப்பு அதிகம். ஏழு மலைகளைத் தாண்டி ஏழு கடல்களைத் தாண்டி இருக்கின்ற அரக்கனின் கால் கட்டை விரலில் இளவரசியின் உயிர் இருக்கிறது என பழங்கால புனை கதைகள் சொல்லும். அந்தக் கட்டை விரலை வெட்டினால் இளவரசி காலி. அதை தொழில்நுட்ப உலகில் பொருத்திப் பாருங்கள். எங்கோ கண்காணாத தூரத்தில் இருக்கின்ற சர்வரில் இருக்கிறது தகவல்கள் என்றால், அந்த சர்வர் அழிக்கப்பட்டால் எல்லாமே அழிந்து விடும் இல்லையா ?

மாறாக, வெட்ட வெட்ட முளைக்கின்ற ராவணத் தலையோடு பிளாக் செயினை ஒப்பிடலாம். ஒற்றைத் தலையெனில் உயிர் போய்விடும். பல தலைகள் இருப்பதால் ஒன்றை வெட்டினாலும் இன்னொன்று முளைக்கும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அழிப்பதும் மாற்றுவதும் சாத்தியமில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரே இடத்தில் தகவல்களை சேமித்து வைக்காமல், பல இடங்களில் வினியோகிக்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கொண்டது பிளாக் செயின். இவற்றை ஒன்றோடொன்று இணைப்பதும், இவற்றுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தைப் பாதுகாப்பானதாய் அமைப்பதும் இதன் அடிப்படை தத்துவங்கள்.

பிட்காயின்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கண்ணால் பார்க்க முடியாத டிஜிடல் பணம் தான் தான் பிட்காயின்ஸ். சந்தை மதிப்புக்கு ஏற்ப இதன் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் டிஜிடல் பணம் இது. இது சர்வதேச சட்ட விரோத பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுகிறது என்பதால் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் ரான்சம்வேர் வைரஸ் பாதிப்பு நிகழ்ந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். உலக அளவில் பல கோடி ரூபாய் இழப்பை அந்த வைரஸ் உருவாக்கியது. அந்த வைரஸ் குற்றவாளிகள் மீட்புத் தொகையாகக் கேட்டது பிட்காயின் டிஜிடல் பணத்தைத் தான் !

ஏன் இந்த பிட்காயினைப் பற்றி அலசுகிறோம் என்றால், உலக அளவில் மிகவும் பாதுகாப்பான நெட்வர்க், மற்றும் மென்பொருள் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் இந்த பிட்காயின் பரிவர்த்தனை தான். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் “பிளாக்செயின்” !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.