பிளாக் செயின் 6

Image result for block chain

நமக்கு ஒரு பழக்கம் உண்டு. புதிதாக ஒரு போன் வந்தால் அதை எப்படியாவது வாங்க வேண்டும் என நினைப்போம். அதே போல தான் தொழில்நுட்ப உலகிலும் பல நிறுவனங்கள் உண்டு. ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தால், அதை தனது நிறுவனத்தில் பயன்படுத்த வேண்டும் என சட்டென முடிவு செய்து விடுகின்றனர். அப்படிப் பயன்படுத்துவது தான் சந்தைப்படுத்தலுக்கு உதவும் என்பது அவர்களுடைய கணிப்பு. அல்லது ஸ்ட் ராட்டஜி.

புதிய தொழில்நுட்பங்களை ஒரு நிறுவனத்தில் இணைப்பதால் மட்டும் ஒரு நிறுவனம் வளர்ச்சியடைவதில்லை. என்னதான் ஆனானப் பட்ட தொழில்நுட்பமாக இருந்தாலும், சில இடங்களுக்கு ஒத்து வராது. அதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். நிறுவனத்துக்கு அந்த புதிய தொழில் நுட்பங்கள் பயனளிக்குமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். நிறுவனத்துக்கு பிளாக் செயின் பயனளிக்குமா என்பதை சில கேள்விகளின் மூலமாகவும், சில அலசல்களின் மூலமாகவும் கண்டுபிடிக்கலாம்.

நிறுவனம் இரண்டுக்கு மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறதா ? அந்த நிறுவனங்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளை நிறுவனம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும், அதற்கேற்ப சில முடிவுகளையும் எடுத்துக் கொண்டும் இருக்க வேண்டியிருக்கிறதா ? அப்படியெனில் பிளாக் செயின் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் உடனே முடிவு செய்து விட முடியாது. அடுத்த கேள்விக்குத் தாவ வேண்டும்.

இப்போது இருக்கின்ற சிஸ்டம் எப்படிப்பட்டது ? நீண்டநாள் பயன்படுத்த முடியாத வகையில் இருக்கிறதா ? அதை பயன்பாட்டில் வைத்திருக்க அதிகம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறதா ? ரொம்பவே கடினமான கட்டமைப்பாக, (காம்ப்ளக்ஸ் ஆர்கிடெக்சர் ) இருக்கிறதா ? அப்படியெனில் ஒருவேளை பிளாக் செயின் கைகொடுக்கலாம். அருத்த நிலை கேள்வியைக் கேட்கலாம்.

இன்றைய மென்பொருள் கட்டமைப்பின் பாதுகாப்பு எப்படி ? எதிரிகளின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகுமா ? இப்போது இருக்கின்ற அமைப்பு நிறைய மனித தவறுகள், பிழைகள் நடக்க ஏதுவாக இருக்கிறதா ? ஒருவேளை இன்னொரு அமைப்பு வந்தால் நம்பிக்கையும், வெளிப்படைத் தன்மையும், பாதுகாப்பும் அதிகரிக்கும் என தோன்றுகிறதா ?

அதேபோல இப்போது இருக்கின்ற மென்பொருள் தேவையான வேகத்தில் செயல்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். தேவையான அளவுக்கு வேகம் இல்லாவிட்டால் மென்பொருளையோ, கட்டமைப்பையோ மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படிப்பட்ட சூழலில் பிளாக் செயின் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கலாம்.

நிறுவனம் அதிக அளவு டிஜிடல் பரிவர்த்தனைகளையும், டிஜிடல் சொத்துகளையும் வைத்திருக்கிறதா ? அப்படி இருக்கின்ற டிஜிடல் தகவல்களையெல்லாம் ஒரு நிலையான ரிக்கார்ட் ஃபார்மேட்டில் கொண்டு வர முடியுமா ? என்பதும் பிளாக் செயினை தேர்ந்தெடுப்பதில் மிக முக்கியமான ஒரு தகவல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்படி படிப்படியாகக் கேட்கின்ற கேள்விகள் ஒரு நிறுவனத்துக்கு பிளாக்செயின் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய உதவும். நிறுவனத்தை முழுமையாக கேள்விகளால் அலசும்போது பிளாக் செயின் தொழில் நுட்பம் தேவையா இல்லையா எனும் தெளிவு கிடைக்கும்.

சரி, இப்போது உங்களிடம் சில கேள்விகளும் அதற்கான விடைகளும் இருக்கின்றன. உங்களுடைய மென்பொருள் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் இல்லை, பிளாக் செயின் பயனளிக்கும் என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தால் அடுத்த நிலை கேள்விக்குத் தாவுங்கள்.

1. தற்போதைய கட்டமைப்பிலும், மென்பொருளிலும் இருக்கின்ற குறைகள் என்ன ?
2. எப்படிப்பட்ட தீர்வை நான் எதிர்பார்க்கிறேன் ?
3. பிளாக் செயின் அந்த தீர்வைத் தர வலிமையுடையதா ?

இந்த மூன்று கேள்விகளுக்கும் நிச்சயம் விடை இருக்க வேண்டும். நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிளாக் செயின் இருப்பதாக நிச்சயப்படுத்திக் கொண்டால் மட்டுமே அந்த தொழில்நுட்பத்தை நோக்கி உங்கள் பார்வையைச் செலுத்தலாம்.

ஒரு நிறுவனத்துக்கு பிளாக் செயின் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய பல சோதனை முறைகளை வைத்திருக்கிறார்கள். பிர்க் மாடல், பிர்க் பிரவுன் பருலாவா மாடல், சூய்சீஸ் மாடல், ஐபிஎம் மாடல், லூயிஸ் மாடல், மார்கன் ஈ பெக் மாடல் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இவையெல்லாம் ஒரு நிறுவனத்தில் பிளாக் செயின் மாடல் தேவைப்படுமா என்பதைக் கண்டறிய உதவுகின்ற அறிவியல் ரீதியான அணுகுமுறைகள். ஃப்ளோசார்ட், அல்காரிதம் போன்றவற்றின் உதவியுடன் இந்த முடிவை எடுக்க இவை உதவுகின்றன. வெறுமனே ‘நால்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்’ என ஒரு தொழில்நுட்ப மாற்றத்தைச் செய்யக் கூடாது. அதை அறிவியல் ரீதியாக பரிசோதித்த பின்பே கால் வைக்க வேண்டும்.

ஏன் இந்த முடிவு இத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது ? காரணம் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அந்த தொழில்நுட்பத்துக்கு நிறைய பணமும், நேரமும் அளிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் நிதானமான முடிவுகள் தேவைப்படுகின்றன.

பிளாக் செயினில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பெர்மிஷன்லெஸ் பிளாக் செயின். அதாவது அனுமதி தேவையில்லாமல் யார் வேண்டுமானாலும் இணையக்கூடிய பிளாக் செயின் அமைப்பு. பிட்காயின் போன்றவை இத்தகைய பெர்மிஷன்லெஸ் பிளாக்செயினாகத் தான் இருக்கின்றன.

இன்னொரு வகை பிளாக் செயின் பெர்மிஷண்ட் பிளாக்செயின். இதில் பொது நபர்கள் யாரும் இணைய முடியாது. அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே இந்த பிளாக் செயினுக்குள் நுழைய முடியும். இதில் ஒரு நபர் கண்காணிப்பாளராகவோ, அனுமதியளிப்பவராகவோ இருந்து பிளாக் செயின் பயன்பாட்டாளரை நிர்வகிப்பார். யாருக்கு என்னென்ன அனுமதி வழங்கலாம் என்பதை அவர் செயல்படுத்துவார்.

அனுமதியற்ற பிளாக் செயின் தான் முதலில் உருவான கான்சப்ட். பிட்காயின் போன்றவை இன்னும் அதே வழியைத் தான் பின்பற்றுகின்றன. அதில் இன்னும் கொஞ்சம் தனிமை சேர்க்க விரும்பியவர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த அனுமதியுடைய பிளாக் செயின். பல நிறுவனங்கள் இன்று பெர்மிஷண்ட் பிளாக் செயினைப் பயன்படுத்துகின்றனர். ஒரு வகையில் இது கொஞ்சம் பழைய சென்ட் ரலைஸ்ட் முறை தான். அனுமதியும் கட்டுப்பாடும் ஒரு இடத்தில் இருக்கும்.

ஒரு நிறுவனத்துக்கு பிளாக் செயின் தேவை என முடிவு செய்தால் அடுத்த படி இது தான். எந்த பிளாக்செயின் வேண்டும் ? அனுமதியற்றதா ? அனுமதியுடையதா ?

அடுத்ததாக அவை ஸ்மார்ட் கான்ட் ராக்டை ப் பற்றி சிந்திக்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் பிளாக் செயினை வரவேற்கக் காரணமே இந்த ஸ்மார்ட் கான்ட் ராக்ட் தான். ஒப்பந்தமிடப்பட்டுள்ள நிறுவனங்களை ஸ்மார்ட் கான்றாக்ட் மூலம் பிளாக் செயினுக்குள் இணைக்க வேண்டும்.

பல நிறுவனங்கள் தங்களுக்கு இடையே உள்ள இடைநிலை நிறுவனங்களை , புரோக்கர்களை, மாற்றுவதற்காக பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கின்றன. இதன் மூலம் நிறுவனங்கள் நேரடியாகக் கைகுலுக்கிக் கொள்ளும் நிலை வரும். தேவையற்ற செலவினங்களை குறைக்க இது பயன்படும்.

இன்றைய தேதியில் ஆர்டிபிஷியல் இண்டெலிஜெண்ட்க்கு அடுத்தபடியாக தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்பம் இந்த பிளாக் செயின் தான். அதை ஒரு நிறுவனம் பரிசீலிக்க வேண்டுமா வேண்டாமா என்பதையே நாம் பார்த்தோம்.

இந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் ? என்ன படித்திருக்க வேண்டும் ? போன்றவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

( தொடரும் )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.